‘ராக்கி’ விமர்சனம்

ஒரு ஒரு நாய் கதை நாயகனாக நடித்துள்ள படம்தான் ராக்கி.கே.சி.பொக்காடியா இயக்கத்தில், ஸ்ரீகாந்த், ஈஷான்யா மகேஸ்வரி, நாசர், ஷாயாஜி சிண்டே ஆகியோருடன் நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது. படம் எப்படி ?

போலீஸ் அதிகாரியான ஸ்ரீகாந்த் கைது செய்து சிறையில் அடைத்த பயங்கர குற்றவாளி ஒருவனை, ஸ்ரீகாந்துக்கு கீழே இருக்கும் காவல் துறை அதிகாரிகள் தப்பிக்க வைத்துவிட, அந்த குற்றவாளி இருக்கும் இடத்தை ஸ்ரீகாந்தின் நாய் கண்டுபிடிப்பதோடு, அந்த இடத்திற்கு ஸ்ரீகாந்தையும் அழைத்துச் செல்கிறது. குற்றவாளியை மீண்டும் கைது செய்யும் நடவடிக்கையில் ஸ்ரீகாந்த் ஈடுபடும் போது, அவருடன் இருக்கும் போலீஸ்காரர்களே அவரைக் கொலை செய்துவிடுகிறார்கள்.

ஸ்ரீகாந்தை யார் கொலை செய்தார்கள் என்பது அவரது நாய்க்கு மட்டுமே தெரியும் என்பதால், அந்த நாயை கொலை செய்ய வில்லன் கோஷ்டி முயற்சிக்க, மறுபக்கம் அந்த நாயை வைத்து குற்றவாளிகளை பிடிக்க காவல் துறை முயற்சிக்கிறது. இதற்கிடையே, தனது எஜமானரை கொலை செய்தவர்களைப் பழிவாங்க நேரடியாக களத்தில் இறங்கும் ராக்கி என்ற நாய், பயங்கரமான ஆயுதங்களுடனும், பாதுகாப்புடன் இருக்கும் கொலைகாரர்களை எப்படி பழிவாங்குகிறது, என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 விலங்குகள் பழிவாங்கும் கதை தான் இந்த ‘ராக்கி’ படத்தின் கதை என்றாலும், அதை தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப கூட மாற்றாமல்,  படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த்தான் என்றாலும் நாய்க்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ராக்கி என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் சாகசங்களை நம்பி இப்படத்தை எடுத்திருக்கிறார் கே.சி.பொக்காடியா.சில காட்சிகளை திரும்ப திரும்ப போட்டு, நாயின் சாகசத்தின் மீது சலிப்படைய செய்துவிடுகிறார்.

காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் செய்திருக்கிறார். நாயகி ஈஷான்யா மகேஸ்வரி, நாசர், ஷாயஜி ஷிண்டே என்று படத்தில் நடித்த அனைவரும் தங்களது வேலையை சரியாகவே செய்திருக்கிறார்கள்.

30 க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை இயக்கித் தயாரித்திருக்கும் கே.சி.பொக்காடியா, தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லியிருந்தாலும், பழைய விஷயத்தை, அதே பழமையான காட்சிகளோடு சொல்லியிருப்பது படத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்திருக்கிறது.

பப்பி லஹரி, சரன் அர்ஜுன் ஆகியோரது இசையும், அஸ்மல் கானின் ஒளிப்பதிவும் கே.சி.பொக்காடியாவின் காட்சிகளைப் போலவே ஓகே.

பழைய வெற்றிப் படங்களை தற்போதைய தொழில்நுட்ப காலக்கட்டத்திற்கு ஏற்ப ரீமேக் செய்து வரும் நிலையில், இயக்குநர் கே.சி.பொக்காடியா தனது பழைய வெற்றிப் படத்தை, நடிகர்களை மட்டுமே மாற்றி, அப்படியே மீண்டும் படமாக்கியிருப்பது போலவே படம் இருக்கிறது.

மொத்தத்தில், இந்த ‘ராக்கி’ மனிதர்களை விட நாய்கள் விசுவாசத்தில் மேலானவை ,  ஜாக்கிரதை என்கிறது.

Pin It

Comments are closed.