‘ரைட்டர்’ விமர்சனம்

நேர்மையாகவும் அதிகாரத்துக்குப் பயந்து கொண்டும் மனசாட்சிக்குள் ஓடுங்கிக் கொண்டும் திருச்சி ,திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ரைட்ட ராகப் பணியாற்றி வருபவர் சமுத்திரக்கனி.அவரது நேர்மையும் அமைதியும் பிடிக்காமல் அவர் சென்னைக்குப் பந்தாடாடப்படுகிறார்.அங்கு அவர் ஒரு பாரா பணியில் இருக்கிறார் .அங்கு சட்ட விரோதமாகக் காவல் வைக்கப்பட்டிருக்கும்ஒரு வாலிபனுக்கு உதவப்போய்  அவனை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லும் நிலைக்கு ஆளாகிறார். உதவ விரும்பியவனையே தன் கையால் சுட்டுக் கொல்லும் நிலைக்கு ஆளான குற்ற உணர்ச்சியில் கொதித்துப் போன அவர் அந்தக் கொலை பற்றிய உண்மையை உலகுக்கு உரத்துச் சொல்ல என்ன செய்கிறார் என்பதுதான் கதை.


போலீசை மிகை பிம்ப கதாநாயகர்களாகக் கொண்டு ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் காவல்துறை பற்றிய உள்ளுண்மையை உலகுக்கு உரக்க எடுத்துச் சொல்லும் படமாக ரைட்டர் வந்திருக்கிறது.


காவல் துறையில் பணியில் இருக்கும்  நேர்மை மனசாட்சி உள்ளவர்கள் எப்படி நசுக்கப் படுகிறார்கள் என்பதையும் தோலுரித்துக் காட்டுகிறது இந்தப் படம்.சமுத்திரக்கனி  தங்கராஜ் ரைட்டராக வாழ்ந்திருக்கிறார்.இரண்டு மனைவிகள் அதிலிருக்கும் குடும்ப சிக்கல்கள் என்று ஒருபுறம்,  ரைட்டர் பணி இன்னொரு புறம் என தோளில் சுமந்து கொண்டு 58 வயது சீனியர் அதிகாரியாக வந்து ,பேசும் மொழியிலும் உடல் மொழியிலும் நேர்த்தி காட்டி கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி. அவருக்குத் தேசிய விருது கிடைக்கும் அளவில் நடிப்பை வெளிப்படுத்தும் இடங்கள் ஏராளம் உள்ளன.ஆர்ப்பாட்டமில்லாத  அடக்கமான நடிப்பில் அசத்தியுள்ளார்.

அவரது முதல் மனைவி அமுதாவாக லிசி ஆண்டனியும், இரண்டாம் மனைவி சுபாவாக நடிகை மகேஸ்வரியும் நடித்திருக்கிறார்கள். மகேஸ்வரிக்கு கூடுதல் வசனங்கள்உண்டு.
சம்பந்தமே இல்லாமல் திடீரென்று போலீசிடம் மாட்டிக் கொள்ளும் தேவகுமார் (ஹரி) பல இன்னல்களை சந்திக்கிறார். தான் எதற்காக பிடிபட்டு இருக்கிறோம் இதற்காக காவல்துறை பல வித்தியாசமான இன்வெஸ்டிகேஷன் முறைகளை கையாளுகிறார்கள்.

காவல் நிலையத்தில் விசாரிக்காமல் ஒரு விடுதியில் வைத்து ஏன் விசாரிக்கிறார்கள் என்ற பல குழப்பங்களுக்கு இரண்டாம் பாதியில் பல முடிச்சுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்படுகிறது.

 இரண்டாம் பாதியில் வரும்  சுப்பிரமணியசிவா -ஹரி இவர்களுக்கு இடையே இருக்கும் அண்ணன் தம்பி பாசம் மற்றும் அந்த அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறையால் பாதிக்கப்படும் வலியும் வேதனையும் நம்மை மிகவும் பதபதைக்கச் செய்யும்.
ஒட்டுமொத்த படத்தின் கதையை தூக்கி நிறுத்தும் விதமாக திரைக்கதை அமைந்திருக்கிறது. 
இறுக்கமாக நகரும் படத்தில் முன்னாள் குற்றவாளியாக வரும் மேற்குத் தொடர்ச்சி மலை ஆண்டனி பேசுவதும் செயல்படுவதும் சிரிக்க வைப்பவை.குழந்தைத்தனமாக தமிழ் பேசி தோன்றும் வட இந்திய நபரான உதவி கமிஷனர் கதாபாத்திரத்தில் வருபவரும், வில்லத்தனத்தில் கலக்குகிறார்.


 சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் சரண்யாவாக நடித்திருக்கும் நடிகை இனியா ,தனியாகப் பார்ப்பவர்களிடம் கவனம் பெறுகிறார்.


படத்தின் ஒளிப்பதிவு இசை கலை இயக்கம் அனைத்தும் கை கோர்த்துப் பயணித்துள்ளன.
குறிப்பாக கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை காட்சிக்கு காட்சி பலம் சேர்க்கிறது.காவல்துறையில் பணியாற்றுபவர்களின் அதிகார முகத்தை மட்டுமல்ல அவல முகத்தையும் காட்டியிருக்கிறார் இயக்குநர் பிராங்கிளின்.குழந்தைத்தனமாக தமிழ் பேசி தோன்றும் வட இந்திய நபரான உதவி கமிஷனர் கதாபாத்திரத்தில் வருபவரும்,கலக்குகிறார்.


காவல்துறை அதிகாரிகளின் உணர்வுகளையும் அவர்களது அடிப்படை உரிமைகளையும் சொல்லும் இந்த ரைட்டர் படம் கண்டிப்பாக இன்றைய சமுதாயம் பார்க்க வேண்டிய மிக முக்கியமான படமாகும். சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய மிக முக்கியமான கடமையைச் சிறப்பாகவே செய்துள்ளது இப்படம்.

பா. ரஞ்சித் தன் நீலம் புரொடக்ஷன்ஸ்  நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பில் வெளிவரும் படங்கள் ஏதோ ஒரு வகையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்கும். இந்த வரிசையில் ரைட்டர் ஒரு முக்கியமான படம் என்று கூறலாம்.