வடக்கே வள்ளுவர் சிலை வைக்கக்கூடாது என்றால் வடநாட்டுத் தலைவர்கள் சிலை தமிழ் நாட்டில் எதற்காக ? கவிஞர் முத்துலிங்கம் கேள்வி

muthulingamமதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக சங்கத்தின் முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் சங்கரபாண்டியன் அவர்களின் நினைவுநாள் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு தஞ்சை தமிழ்ப்பலகலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திருமலை தலைமை வகித்தார்.,

இந்தவிழாவில் திரைப்படப்பாடலாசிரியரும் முன்னாள் அரசவைக்கவிஞரும் முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கவிஞர் முத்துலிங்கம் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, “தமிழில் உள்ளதுபோல் நீதிநூல்கள் எந்த ,மொழியிலும் இல்லையென்றாலும் அதில் தலையாய நூல் திருக்குறள் என்றும் முதன் முதலில் கூறியவர் வீரமாமுனிவர். இலத்தீன் மொழியில் திருக்குறளை முதன்முதலில் மொழி பெயர்த்தவர் இவர்தான்.

ஐரோப்பிய மொழிகளில் முதன் முதலில் இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதும் திருக்குறள்தான்.

இந்தியாவில் எத்தனையோ தத்துவ நூல்கள் இருக்கின்றன. அவையெல்லம் இல்லாத ஊருக்கு செல்லாத வழியை காட்டுகின்ற நூல்கள். திருக்குறள் மட்டும்தான் இருக்கின்ற உலகத்தில் வாழுகின்ற மக்களுக்கு வழிகாட்டக்கூடிய நூல். ஆகவே நூல்களில் சிறந்தது திருக்குறள் என்று கூறினார் ஜெர்மன் நாட்டு மொழியியல் அறிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆல்பர்ட் சுவைசர்.

உலகத்தில் எத்தனையோ தத்துவஞானிகள் தோன்றியிருக்கிறார்கள். சீனாவில் கன்பூசியஸ் தோன்றினார். கிரேக்கத்திலே சாக்ரட்டீஸ், ப்ளட்டோ, அரிஸ்ட்டாட்டில், போன்றவர்கள் தோன்றினார்கள். அதற்குப்பின் இத்தாலியிலே மர்க்கியவல்லீ தோன்றினார்.

இவர்கள் சிந்தனையெல்லாம் ஒரு காலக்கட்டத்தோடு நின்றுவிடக்கூடிய சிந்தனைகள் அதிலும் ப்ளாட்டோ போன்றவருடைய சிந்தனைகள் கற்கால மனிதசமுதாயம் கூட ஏற்றுக்கொள்ள முடியாத சிந்தனையென்று அவருடைய மாணவரான அரிஸ்ட்டாட்டில் சொல்லியிருக்கிறார்.

நாகரீகமடைந்த மனித சமுதாயம் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எல்லாக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிந்தனையாக இருப்பது திருவள்ளுவருடைய சிந்தனைதான். ஆகவே சிந்தனையாளர்களில் தலைசிறந்தவர் திருவள்ளுவர் என்று கூறினார் ரஷ்ய நாட்டு மொழியியல் அறிஞரும் பொருளியியல் அறிஞருமான  அலெக்சாண்டர் பியாழி.

எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும், எல்லா நாட்டைச் சார்ந்தவர்களும் திருக்குறளை அவசியம் படிக்க வேண்டும் என்று கூறினார்  பிரெஞ்சு நாட்டு மொழியியல் அறிஞர் ஏரியல்.

எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் திருக்குறளை ஏன் படிக்க வேண்டும் என்று ஏரியல் ஏன் கூறினார் என்று மற்ற அறிஞர்களிடம் கேட்டபோது, “என்னதான் படித்தாலும் பைபிள் ஒரு கிறித்துவரைதான் உருவாக்குகிறது. குரான் ஒரு இஸ்லாமியரைதான் உருவாக்குகிறது. கீதை ஒரு இந்துவைதான் உருவாக்குகிறது. திருக்குறள் ஒன்றுதான் ஒரு மனிதனை உருவாக்குகிறது அதனால் அப்படிச் சொன்னார்என்றார்கள்.

ஆக, ஒரு மனிதனை மகத்தான மனிதனாக உருவாக்கக்கூடிய மகத்தான நூல் திருக்குறள். எந்த இனத்தையும் சாரமல், எந்த மதத்தையும் சாரமல் மனித இனத்திற்கே பொதுவான நீதியை உரைக்கூடிய நூல் என்பதால்தான் அது உலகப்பொதுமறை என்று போற்றப்படுகிறது. இப்படிப்பட்ட நூல் அல்லவா இந்தியாவின் தேசிய நூலாக இருக்க வேண்டும்.

பகவத் கீதை ஒரு மதக்கோட்பாட்டை வலியுறுத்தக்கூடிய நூல். பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கின்ற நூல் இதை எப்படி தேசிய நூலாக ஏற்க முடியும் ?

 

வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதிஎன்றார் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை

திருகுறள் நெறிப்படி ஒருவன் வாழ்ந்தால் அவன் ஒழுக்கமுள்ளவனாக, மனித நேயமுள்ளவனாக, மனிதப் பண்பாட்டை காக்கக்கூடியவனாக இருப்பான். பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடமாட்டான். அவனால் எந்தக் கெடுதலும் மற்றவர்களுக்கு வராது.

நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலைகள், வன்முறைகள், பாலியல் பலாத்காரம், வழிப்பறிகள் நடந்து வருகின்றன. திருக்குறள் நெறிப்படி ஒரு மனிதன் வாழத் தொடங்குவானேயனால் இத்தகைய சம்பவங்கள் எங்கும் நடைபெறாது. அப்போதுதான் நாடு உண்மையான அமைதிப் பூங்காவாக இருக்கும்.

ஆகவே மத்திய அரசு திருக்குறளை தேசிய நூலாக அறிவித்துத் தன் பெருமையைக் காத்துக்கொள்ள வேண்டும்.

தமிழுக்கும் திருவள்ளுவருக்கும் வடநாட்டில் குரல் கொடுக்கூடியவராக தருண் விஜய் இருக்கிறார். அவர் முயற்சியில் கங்கைக் கரையில் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட இருந்ததுஅதை வடநாட்டு மதவாதிகள் எதிர்க்கிறார்கள்.

ஹரித்துவாரிலே தமிழின் அடையாளமாகத்திகழும் திருவள்ளுவர் சிலை இருக்ககூடாது என்றால் தமிழ் நாட்டிலே வடநாட்டுத் தலைவர்களின் சிலை எதற்காக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழர்களுக்கு ஏற்பட்டால் என்னகும் ?

ஆகவே மத்திய அரசு உத்தரகாண்ட் மாநில அரசு மதவாதிகளை எச்சரித்து தருண் விஜய் சொல்லும் இடத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முன் வரவேண்டும்.” என்று பேசினார் கவிஞர் முத்துலிங்கம்.

நிகழ்ச்சியில் தஞ்சாவூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிங்காரவேலு, செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் விஜயன் ஆகியோர் பேசினர்.