‘வனமகன்’ விமர்சனம்

vanamagan14 இயக்குநர் விஜய் – ஜெயம் ரவி கூட்டணியில் புதிய முயற்சியாக உருவாகியிருக்கும் படம் ‘வனமகன்’.

நிறுவனம் ஒன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருக்கும் ஒரு தீவில் தொழிற்சாலை ஒன்றை கட்டும் முயற்சியில்  இறங்குகிறது. அதற்குத்தடையாக, இடையூறாக அப்பகுதியில் இருக்கும் பூர்வகுடி காட்டுவாசி இன மக்கள் இருப்பதால், அவர்களை அரசு உதவியோடு அப்புறப்படுத்த அந்த நிறுவனம் முயல்கிறது. அவர்களில் ஒருவர்தான் நாயகன் ஜெயம் ரவி. அவர் அவர்களிடம் இருந்து தப்பித்து செல்கிறார்.அப்போது, தனது நண்பர்களோடு அப்பகுதிக்குச் சுற்றுலா வரும் நாயகிசாயீஷா காரில் அடிபட்டு விழுந்துவிடுகிறார்.

அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் சாயீஷா, காயம் பெரிதாக இருக்கவே,  ரவியைச் சென்னைக்கு அழைத்து வந்துவிடுகிறார். தலையில் அடிபட்ட ஜெயம் ரவிக்கு தனது பழைய நினைவுகள் மறந்துவிடுகிறது. தான் விபத்தில் சிக்கிய போது தன்னை காப்பாற்றும் சாயீஷா என்ன சொன்னாலும் கேட்பவர், அவருக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறார். ஆனால், நாகரிக சராசரி மனிதர்களுடன் பழகாத அவரது நடவடிக்கைகள் வினோதமாக இருக்கிறது.

vanamagan5இதற்கிடையே சென்னைக்கு வரும் அந்தமான் போலீஸ், ஜெயம் ரவியை கைது செய்து அழைத்துச் செல்கிறது. அவரைத் தேடி  சாயீஷா அந்தமான் செல்கிறார். அந்தமான் சென்றதும் ஜெயம் ரவிக்குப் பழைய நினைவு திரும்புகிறது. தனது இனத்தை காப்பாற்றுவதற்காக அவர்களைத் தேடி செல்கிறார். அவருடன் நாயகியும் செல்கிறார். ஆனால் ஜெயம் ரவி தான் சாயீஷாவை கடத்தியதாகக் கூறி பிரகாஷ்ராஜ், அவரைப் பிடிக்க போலீஸ் படையை காட்டுக்குள் அனுப்புகிறார்.

ஜெயம் ரவியை கொல்ல  போலீசார் தேடிக் கொண்டிருக்க, அவரோ தனது இன மக்களைத் தேடிக்கொண்டிருக்க,  நாயகியோ ஜெயம் ரவி மீது காதல் கொண்டு அவரை மீண்டும் சென்னைக்கு அழைத்துச் செல்ல முயல முடிவு என்ன என்பது தான் க்ளைமாக்ஸ்.

ஜெயம் ரவிக்கு சபாஷ் சொல்லலாம் வசனமே இல்லாமல் இப்படத்தில் நடித்ததற்காக . வசனம் இல்லை என்றாலும், தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தன்மையையும், உணர்ச்சிமிக்க காட்சிகளையும் தனது உடல் மொழியைப் பேசவிட்டு வெளிப்படுத்திய விதம் சிறப்பு.

அறிமுக நாயகி சாயீஷா நடிப்பைவிட அழகாலும், நடனத்தாலும் கவர்ந்துவிடுகிறார். தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ் என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது பணியைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

இயக்குநர் விஜயின் வித்தியாசமான முயற்சியைப் பாராட்டினாலும், அதை படமாக்கியதில் வியப்பூட்டும் வகையில் எந்த காட்சிகளும் அமையாதது படத்திற்கு சற்றுப் பலவீனமே. அதேபோல், படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகளிலும் நம்பகத்தரம் இல்லை. குறிப்பாக ஜெயம் ரவியை புலி ஒன்று போலீசாரிடமிருந்து காப்பாற்றுவது போல வரும் காட்சி சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

இருப்பினும், ஒளிப்பதிவாளர் திருவின் பணியும், ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும், அவ்வபோது சரியும் படத்தை தாங்கி நிறுத்திவிடுகின்றன. திரைக்கதை அமைப்பதிலும், காட்சிப்படுத்ததிலும் சில இடங்களில் இயக்குநர் விஜய் சறுக்கி்த் தவறியிருந்தாலும், அவரது புதிய முயற்சியைப் பாராட்டி வரவேற்கத்தான் வேண்டும்.

படத்தில் சிற்சில குறைகள் இருந்தாலும், அவற்றை மறந்து இந்த ‘வனமகன்’ படத்தை ரசிக்கலாம்.