‘வன்மம்’ விமர்சனம்

DSC_0143ஒருவர் மீது ஒருவர் வைக்கும் வன்மம், பழிவாங்கும் உணர்வு எந்த அளவுக்கு இழுத்துக் கொண்டு நிறுத்தும் என்று விளக்கும் கதை.

விஜய் சேதுபதியும் கிருஷ்ணாவும் நண்பர்கள். கிருஷ்ணா பணக்காரரான தடியன்  ரத்னம் தங்கை சுனைனாவை விரும்புகிறார். இது தடியன் ரத்னத்துக்குப் பிடிக்க வில்லை. கிருஷ்ணாவைத் தாக்க முயல்கிறார். அப்போது தட்டிக் கேட்கிறார் விஜய்சேதுபதி. தள்ளு முள்ளு மோதலில் ரத்னம் கழுத்தில் அவரது கத்தியே பட்டு இறக்கிறார்.இந்தக் கொலையை விஜய்சேதுபதி செய்யாவிடினும் காரணமாகிறார். விஜய் சேதுபதியும் கிருஷ்ணாவும் இந்தக் கொலையை மறைக்கிறார்கள். பலர் மேல் போலீஸ் சந்தேகம் விழுகிறது. கூட்டாளியும் பிரிந்துபோன பங்குதாரமான ஜெபி என்பவர் மீது விழுகிறது. விஜய்சேதுபதியை யாரும் சந்தேகிக்க வில்லை. இன்ஸ்பெக்டரையும் உடனிருந்த இரு ஆட்களையும் மிரட்டி வாயடைத்து விடுகிறார் விஜய்சேதுபதி.

குற்றஉணர்ச்சியில் விஜய்சேதுபதி தனக்கு நடக்கவிருந்த திருமணம் நிச்சயத்தைக் கூட நிறுத்தி விடுகிறார். ஒரு கட்டத்தில் கிருஷ்ணா பேசியதில் மனம் வெறுத்துப்போய் கிருஷ்ணாவின் நட்பைத் துண்டித்து விடுகிறார். இருவரும் எதிர் துருவங்களாகிறார்கள். கிருஷ்ணாவின் அண்ணனை ஜெபியின் ஆட்கள் குத்திவிடுகிறார்கள். பழி விஜய் சேதுபதி மேல் விழ..  தவறாக எண்ணிய கிருஷ்ணா விஜய்சேதுபதியைக் குத்தி விடுகிறார் .இறுதியில்தான் அவர் நல்லவர் என்று தெரிகிறது. முடிவு என்ன என்பதே உச்சக் கட்டக் காட்சி.

படத்தில் விஜய் சேதுபதிக்கு பிரதானமான பிரமாதமான வேடம். ஜோடி இல்லை. டூயட் இல்லை. இருந்தாலும் நடிப்பில் ஆவேச நாயகனாகப் பின்னி பெடலெடுத்துள்ளார்.

நண்பனுடன் பழகுவது, பேசுவது என்று நட்பு பாராட்டுவதில், மனதில் குற்ற உணர்ச்சியுடன் திரிகிற காட்சியில், தன்னால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஓடி உதவுவதில், ஆவேசம் காட்டுவதில் என   விஜய்சேதுபதி விஸ்வரூபமெடுத்து நிற்கிறார். எதையும் நம்பி விடுகிற அப்பிராணியாக கிருஷ்ணா. காதலி சுனைனாவைச் சந்திப்பது, மாட்டிக் கொள்வது, நண்பனை பிரிவது.. என்று தன் பங்கிற்கு முடிந்ததைச் செய்திருக்கிறார்.

கதையில் வரும் விஜய்சேதுபதியின் அப்பா தொடங்கி அம்மாவரை பலரும் நினைவில் நிற்கும் அசல்  முகங்களாகி இருக்கிறார்கள்.

பட ஆரம்பத்தில் விஜய்சேதுபதி கிருஷ்ணா நெருக்கம் காட்டும் போதே இவர்களுக்குள் பிரிவு வரப் போகிறது என்று யூகிக்க முடிகிறது. இருந்தாலும் வேறு வேறு ட்விஸ்ட்களை வைத்து வன்மத்தை விறுவிறுப்பாக்கி யுள்ளார். இயக்குநர் ஜெய்கிருஷ்ணா.

படத்தின் பிரதான காட்சிகள் முடிச்சுகள் எல்லாமே இரண்டாவது பாதியில் வைத்து முதல்பாதியை மேலோட்டமாகவும் மறுபாதியை அதிக நீள அகலத்துடனும் தந்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.

குமரிமாவட்ட வட்டார வழக்கு புதிய நிறம் காட்டினாலும் சிலர் மட்டும் வட்டார வழக்கு பேசுவதும் சிலர் வேறு சாதாரண மொழி பேசுவதும்  நெருடல்.

‘ஆத்திரக் காரனுக்கு புத்திமட்டு’  என்பதை வன்மம் காட்சிகள் மூலம் சொல்லி இருக்கிறார். இயக்குநர்.

பாலபரணியின் ஒளிப்பதிவும் தமனின் இசையும் பளிச்.. ‘வன்மம்’ விஜய் சேதுபதியை பலபடி உயர்த்தியுள்ள படம்.