‘வினோதய சித்தம் ‘விமர்சனம்

குடும்பத்தின் பொறுப்புகளை எல்லாம் தான்தான் சுமக்கிறோம், தான் அன்றி ஒரு அணுவும் அசையாது தன்னை நம்பியே தன் குடும்பமும் மற்றவர்களும் இருக்கிறார்கள் என்று தன் முனைப்போடு பரபரப்பாக வாழும்  ஒரு பாத்திரம். உலகமே தன்னை மையமாக வைத்துத்தான் நகர்கிறது என்று ஒரு நினைப்பு.அந்தப் பாத்திரதாரர் ஒரு விபத்தைச் சந்திக்கிறார் . இறந்துபோகும் அவர், காலத்திடம் கெஞ்சுகிறார். காலமும் காலனும் கடவுளும் ஒன்றுதானே? அவர் ,தான் செய்து முடிக்க வேண்டிய கடமைகளை நிறைவேற்றிடும்வரை கொஞ்சம் ஆயுள் நீட்டிப்பு தரவேண்டும் என்று கெஞ்சுகிறார்.
சிறிய விவாதத்திற்குப் பின் காலம் அவருக்கு 90 நாள் அவகாசம் தந்து கெடு விதிக்கிறது .அதற்குள் அவர் தனது கடமையை செய்து முடித்தாரா அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதைப் பற்றிப் பேசுகிற படம்தான்   ‘வினோதய சித்தம்  ‘


கதையின் நாயகனாக தம்பிராமையா நடித்துள்ளார். காலமாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். எப்போது மிகை நடிப்பை வழங்கிப் பார்வையாளர்களை எரிச்சலூட்டும்  தம்பி ராமையாவிடம் உள்ள நல்ல நடிப்பை வரவழைத்திருக்கிறார் இயக்குநர்  சமுத்திரக்கனி. சஞ்சிதா ஷெட்டி, தீபக், ஷெர்லினா, முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.எத்தனை வடிவங்களில் நிலையாமைத் தத்துவத்தை இலக்கியங்கள் பேசினாலும்  திரை மொழிமூலம் காட்சிகளை படைத்திருப்பது நன்று. வித்தியாசமான சிந்தனை வியக்க வைக்கும் திரைக்கதை அமைப்பு. பார்க்க அழகாக அருமையாக வந்து இருக்கிறது. மேலும் விவரித்து விமர்சனம் செய்ய விருப்பமில்லை.

படத்தை பார்த்துவிடுங்கள். அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பார்க்கவேண்டிய தரமான படம் இது.
இதை அபிராமி ராமநாதன் தயாரித்திருக்கிறார். ஜீ 5 ஓடிடியில் இன்று வெளிவருகிறது. யாரும் தவற விடக்கூடாத ஒரு படமாக இது இருக்கும் .புதிய திரை அனுபவத்தை வழங்கும் இதை உருவாக்கிய இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் சோடை போகாமல் நடித்துள்ள அத்தனை நடிகர்களுக்கும்  பாராட்டுகள் வாழ்த்துகள்.