‘விஸ்வாசம்’ விமர்சனம்

 
 
 சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்குப் பிறகு அஜீத் நடிக்கும் நான்காவது படம் இது. விவேகம் படத்தைப் பார்த்து ஏமாற்றத்தில் ஆழ்ந்திருந்த அஜீத் ரசிகர்களை இந்தப் படத்தில் குஷிப்படுத்த முயன்றிருக்கிறார் சிவா.
 
தேனி மாவட்டத்தில் வசிக்கும் தூக்குதுரை (அஜீத்) எதிர்ப்பவர்களை நொறுக்கி அள்ளும் ஒரு தடாலடிப் பேர்வழி.  ஆனால், அவருக்கு ஒரு சோகமான முன்கதை இருக்கிறது. அதாவது, தூக்குதுரையின் மனைவியான நிரஞ்சனா (நயன்தாரா), அவரது முரட்டுத்தனத்தால் அவரை விட்டுப் பிரிந்துசென்று மும்பையில் வசிக்கிறார். குழந்தையையும் (அனிகா) பார்க்கவிடுவதில்லை. இந்த நிலையில் மீண்டும் மனைவியைச் சந்திக்கச் செல்லும் தூக்குதுரைக்கு அங்கே அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது குழந்தையை ஒரு மிகப் பெரிய தொழிலதிபர் (ஜெகபதிபாபு) கொல்ல முயற்சிக்கிறார். தொழிலதிபர் ஏன் குழந்தையைக் கொல்ல முயற்சிக்கிறார், ?தூக்குதுரை குழந்தையை காப்பாற்றி மனைவியுடன் இணைந்தாரா ?என்பது மீதக் கதை.
 
முந்தைய படத்தில் ஏமாற்றமளித்ததால் இந்தப் படத்தில் அஜீத்தின் ரசிகர்களை உற்சாகமூட்டுவதிலேயே தன் கவனம் முழுவதையும் செலுத்தியிருக்கிறார் சிவா. அஜீத் நடப்பதை, வேஷ்டியை ஏற்றிக் கட்டுவதை, கைகளை க்ளோசப்பில் காட்டும் காட்சிகளை படம் முழுக்க அள்ளித் தெளித்திருக்கிறார்.
 
கலகலப்பான கிராமத்துவாசி, யாரையும் அடிக்கும் முரட்டுத்தனம், குடும்பத்திற்காக ஏங்கும் கணவன், குழந்தைக்காக ஏங்கும் தந்தை என இந்தப் படத்தில் சிக்ஸ் அடிக்க முயன்றிருக்கிறார் அஜீத். ஆனால், கலகலப்பு – நகைச்சுவை ஆகிய இரண்டும் பல இடங்களில் அஜீத்திற்குப் பொருந்தவில்லை. மற்ற ஏரியாக்களில் அனாயாசமாக ஸ்கோர் செய்கிறார் அஜீத். சிவா மீது அஜீத் ரசிகர்கள் கொண்டிருந்த கோபம் இந்தப் படத்திற்குப் பிறகு கொஞ்சமாவது தணிந்திருக்கும்.
 
 
சிவா – அஜீத் ஜோடியின் முந்தைய படத்தோடு ஒப்பிட்டால் நிச்சயம் மேம்பட்ட படம்தான். ஆனால், பல பலவீனமான அம்சங்கள் இந்தப் படத்திலும் உண்டு. 
 
திரைக்கதையிலும் புதுமையான திருப்பங்களோ, எதிர்பாராத தருணங்களோ கிடையாது. அதனால், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எளிதாக யூகிக்க முடிகிறது.
 
படத்தின் சில பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. குறிப்பாக ‘கண்ணான கண்ணே’ பாடல். . அஜீத் எப்போதாவது வேஷ்டியைத் தூக்கினாலே, குதித்துக்கொண்டு பாடப்போகிறாரோ என்ற பயம் வருகிறது. 
 
பளீரென தென்படும் வெற்றியின் ஒளிப்பதிவு படத்தின் மிக முக்கியமான பலம். பல க்ளோஸ் – அப் காட்சிகளை வடிவமைத்த விதமும் பார்வையை நிலைக்க வைக்கின்றன.

இளம் மருத்துவர், மனைவி, பெரிய மருந்து நிறுவனத்தின் தலைவர், பாசமான அம்மா என பலவித பாத்திரங்களில் வரும் நயன்தாரா, ஒவ்வொரு இடைவெளியிலும் கோல் அடிக்கிறார். குழந்தையாக வரும் அனிகாவுக்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க படம்.

ரோபோ ஷங்கர் – தம்பி ராமைய்யா கூட்டணியும் நகைச்சுவைக்கு முயற்சிக்கிறது. ஆனால், ஏதும் நடப்பதில்லை. படம் நெடுக தம்பி ராமைய்யா மட்டும் ‘தூக்குதுரை’ என்ற பெயர் போட்ட பனியனை அணிந்துவருகிறார். 
 
முற்பாதியில் யோகி பாபுவும் பிற்பாதியில் விவேக்கும் சிரிக்கவக்க முயற்சிக்கிறார்கள். அதில் யோகிபாபுவைவிட விவேக்கிற்கு கூடுதல் வெற்றிகிடைக்கிறது. ஒருவகையில் நகைச்சுவை நடிகராக விவேக்கிற்கு இது ஒரு ‘கம்-பேக்’ திரைப்படம் என்றுகூடச் சொல்லலாம்.
அஜீத் ரசிகர்களை இந்தப் படத்தில் திருப்திப்படுத்தியிருக்கிறார் சிவா. ஆனால், சாதாரண சினிமா ரசிகர்கள் ஏமாற்றமடையக்கூடும்.
 
 
Pin It

Comments are closed.