பெண்கள் வெளிஅழகைப் பற்றிக் கவலைப்படக்கூடாது: இஞ்சி இடுப்பழகி அனுஷ்கா

Anushka-18வெளி அழகைப்பற்றி பெண்கள் கவலைப்படக்கூடாது. பட உலகில் ஆண் ஆதிக்கம் நிறைந்து இருப்பது தவறு அல்ல. சண்டை காட்சிகளில்அவர்கள்தான் கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள்’’ என்று நடிகை இஞ்சி இடுப்பழகி நாயகி அனுஷ்கா கூறினார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

‘‘பெண்களில் பலர் வெளி அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதற்காக உடற்பயிற்சி, யோகாவே கதி என கிடந்து உடலை வருத்துகிறார்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. மனதை அழகாக வைத்து இருப்பதைத்தான் பெரிதாக நம்புகிறேன். வெளி அழகைப்பற்றி பெண்கள் கவலைப்படக்கூடாது. மனம் அழகாக இருந்தால் முகத்தில் அழகு வரும். அகத்தின் அழகே அழகு.

என் உயரத்துக்கு ஒல்லி உடம்பு சரிப்பட்டு வராது. விரும்பியதை சாப்பிட்டு கொஞ்சம் உடற்பயிற்சி செய்துகொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை நான் சாப்பாட்டுப் பிரியை. ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவேன். இறால், சிக்கன் உணவுகள் ரொம்ப பிடிக்கும். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக குண்டு வேடம் வேண்டும் என்றனர், இதற்காக சாக்லெட், அரிசி உணவு, பிஸ்கட், ஐஸ்கிரீம் போன்றவற்றை நிறைய சாப்பிட்டேன்.

இப்போது ‘பாகுபலி-2, சிங்கம்-3’ படங்களுக்காக சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கிறேன். நடிகையாகாமல் இருந்து இருந்தால் விரும்பிய எல்லாவற்றையும் சாப்பிட்டு சந்தோஷப்பட்டு இருப்பேன். திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்தது என்று சிலர் குறைப் படுகிறார்கள். அப்படி இருப்பதில் தவறு இல்லை. கதாநாயகிகளை விட கதாநாயகர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள்.

சண்டை காட்சிகளில் அவர்கள் படும் கஷ்டங்களை ‘பாகுபலி’ படத்தில் நான் நடித்து உணர்ந்து இருக்கிறேன். ரசிகர் மன்றங்களும் அவர்களுக்குத்தான் இருக்கிறது. எனவே சினிமாவில் ஆணாதிக்கம் நிறைந்து இருப்பதில் தவறு இல்லை. என்னைப்பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. முதலில் அவற்றை பார்த்து வருத்தப்பட்டேன். இப்போது அப்படி இல்லை. பக்குவப்பட்டு விட்டேன். திருமணம் பற்றி சிந்திக்கவில்லை அது நடக்கும்போது நடக்கும்.

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
anushka-shettyccp