‘வெள்ளக்காரதுரை’ விமர்சனம்

vellaa-durai3 வேலை வெட்டியில்லாத விக்ரம்பிரபு சூரியின் ரியல் எஸ்டேட் பிசினசில் சேருகிறார். மொத்தமாக நிலம் வாங்கிய வகையில் சூரி ஏமாற்றப்படவே  தொழிலில் இழப்பு .வாங்கிய கடனுக்கு    வட்டி வரதனான ஜான் விஜய்யால்  சூரி அண்ட் கோ கடத்தப் படுகிறார்கள்.

வட்டி வரதன் வீட்டில் அங்குள்ள ஸ்ரீதிவ்யாவுடன் விக்ரம்பிரபு பழகுகிறார். முதலில் தங்கை என்று கருதுகிறார். பிறகுதான் வேறொருவரின் மகளெனவும் வாங்கிய கடனுக்கு அழைத்துவரப்பட்டு திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்வதும் தெரிகிறது. திருமண ஏற்பாடும் நடக்கிறது. அது நிறுத்தப் பட்டதா? வட்டி வரதன் ஜான் விஜயின் பிடியிலிருந்து சூரியும் நண்பர்களும் மீண்டார்களா? விக்ரம்பிரபுவின் காதல் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

முரட்டு வாலிபன் அதிரடி நாயகன் என்று அறியப்பட்ட விக்ரம்பிரபு முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும்படியான வேடத்தில் நடித்துள்ளார்.  அவருக்கு காமெடி நன்றாகவே வருகிறது. நாயகியை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். நண்பர்களுடன் ஜாலியாக அரட்டையடிக்கும் காட்சிகளிலும் இவரது நடிப்பு  சபாஷ்.

லூட்டிஅடிக்கிற சூரியாகட்டும் ,சூரியை கூட இருந்தே மாட்டிடும் விக்ரம் பிரபுவாகட்டும், விழிகளை உருட்டி வில்லன் பாவம் காட்டும் ஜான் விஜய் ஆகட்டும்அனைவரும் சிரிப்பு மூட்டவே பெரிதும் பயன் படுத்தப் பட்டுள்ளார்கள். படத்தில் வரும் கல்யாண வீடு முதல் சாவு வீடு காட்சிகள் வரை இதே பாலிசியை பராமரித்து இருக்கிறார்கள்.எனவே நோ லாஜிக்  ஒன்லி சிரிப்பு மேஜிக் என்கிற கொள்கையுடன் இயங்கி இயக்கியுள்ளார் எழில்.

விக்ரம்பிரபு அலட்டிக் கொள்ளாமல் சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் சூரியின் கையை ஓங்கவிட்டு  பெருந்தன்மையுடன்  வழிவிட்டு இருக்கிறார்.

சூரி வழக்கம்போல் படத்தை தனது காமெடியால் தாங்கி நிற்கிறார். ஸ்ரீதிவ்யா எப்போதும் கிராமத்துப் பெண் வேடம் என்றால்  பொருந்துவார். அந்த வகையில் இந்த படத்திலும் தனது அழகான  தோற்றத்தால் ,நடிப்பால் அசத்துகிறார். சிறு சிறுமுகபாவங்களால் கூட  நம்மை வெகுவாகக் கவர்கிறார்.  அதிரடி வில்லனாக வரும் ஜான் விஜய் வில்லத்தனத்தில் மிரட்டினாலும், காமெடியிலும் கலக்குகிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா. வையாபுரி. ஆடுகளம் நரேன். சிங்கம் புலி, மதன்பாப், மலேசியா மாதவன், சிங்கமுத்து,  பாவாலட்சுமணன், விட்டல், வி.ஞானவேல், மகாநதி சங்கர், டாடி சரவணன், நான்கடவுள் ராஜேந்திரன், வனிதா, மதுமிதா ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவில்   பாடல்களில் தஞ்சை மண்ணின் அழகு பசுமை மயம். தன் இசையில் இமான் கமர்ஷியல் தூவி இருக்கிறார். பாடல்களில் ‘அம்மாடி உன் அழகு’ பாடல் இளமைத்துள்ளல் என்றால் ‘காக்கா முட்டை’ கமர்ஷியல் ப்ளஸ் கவர்ச்சிக் குத்து. ‘கூதக் காத்து’ சிருங்கார வாசனை என்றால் ‘நடிகர் திலகம்’ பாடல் சிவாஜி படங்களின் பட்டியல் .

‘வெள்ளைக்கார துரை’ பொழுது போக்கு மசாலாவான கமர்ஷியல் ஜாலி படம்.
vellaa-durai2