‘ஷூட் தி குருவி’ குறும்படம் விமர்சனம்

அர்ஜய், சிவ ஷாரா, ஆசிக் ஹுசைன், ராஜ்குமார் ஜி. சுரேஷ் சக்கரவர்த்தி, மணி வைத்தி, சாய் பிரசன்னா, ஜிப்சி நவீன் நடித்துள்ளனர். கதை திரைக்கதை எழுதி மதிவாணன் இயக்கியுள்ளார். இசை மூன்ராக்ஸ், ஒளிப்பதிவு பிரண்டன் சுஷாந்த், படத்தொகுப்பு கமலக்கண்ணன்.

கேங்ஸ்டர் என்பவர்கள் வெறும் தனிநபர் கிடையாது .அது ஒரு பிராண்ட்.ஒருவன் அழிந்து விட்டால் அத்துடன் நிற்காது. அது ஒரு பிராண்டு போல் அந்த இடத்தை வேறொருவர் நிரப்பிக் கொண்டு இருப்பார் என்பதைச் சொல்கிற கதை. ஒரு மணி நேரம் கொண்டது

இதில் கேங்ஸ்டர் குருவி ராஜனாக அர்ஜய் நடித்துள்ளார்.மிரட்டும் விழிகளாலும் அச்சமூட்டும் உடல் மொழியாலும் அதிகம் பேசாமலேயே அந்தப் பாத்திரத்தின் கொடூரத்தை உணர வைக்கிறார். நகைச்சுவை, நையாண்டி, பயம், பதற்றம் என்று ஷாரா பல உணர்ச்சிகளைக் காட்டுகிறார். ஷாராவின் நண்பனின் நண்பனாக அரைக்குத் தங்க வருகிற ஆஷிக் உசேன் கனத்த உருவத்துடன் கோயம்புத்தூர் மொழி பேசி சிரிக்க வைக்கிறார். எதிர்பாராத நேரத்தில் ஆக்சன் காட்சிகளிலும் பங்கு எடுத்துள்ளார்.
அவர் நல்லவரா கெட்டவரா என்பதை புரிந்து கொள்ள முடியாதபடி கலந்து கட்டி நடித்துள்ளார்.
இந்தக் குறும்படம் நிச்சயமாக விரிவுபடுத்தி ஒரு முழு நீளத் திரைப்படமாக எடுக்கும் வகையில் விரிவு கொண்டதாக உள்ளது.

கேங்ஸ்டர் பற்றி ஆராய்ச்சி செய்யும் இரு மாணவர்கள் அது சம்பந்தமாக பல ஆராய்ச்சிகள் செய்த ஒரு பேராசிரியரைச் சந்தித்துக் கலந்துரையாடுவது போல் படம் தொடங்குகிறது. அதன் பின்பு தான் கதை விரிகிறது.

ஒரு திரைப்படத்திற்கான உழைப்பையும்செய் நேர்த்தியையும் இந்தக் குறும்படத்திற்கு வழங்கி உள்ளார்கள்.

படத்தில் ஒளிப்பதிவு, எடிட்டிங் இரண்டும் பிரமாதம்.சண்டைக் காட்சிகள் அதகளம். இசையும் ஓகே. ஆனால் வசனம் பேசும் முக்கிய தருணங்களில் பின்னணி இசை ஓங்கி ஒலித்து வசனங்களைப் புரிந்து கொள்ள இடையூறாக உள்ளது.

மற்றபடி ஒரு பெரும்படத்திற்கான ஒரு முதல் படிக் கட்டாக இந்தக் குறும்பட முயற்சியைக் கூறலாம் .
படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.