” அசுரவதம்” ஒரு வன்முறைப் படமா?: சசிகுமார் பதில்!

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் ” அசுரவதம்”. கோவிந்த் வசந்த் இசை அமைத்து இருக்கும் ,இந்த படம் வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாகிறது.இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
 
“சசிகுமார் சாருக்கு இது மிக முக்கியமான ஒரு படம். இதுவரை அவர் செய்யாத ஒரு விஷயத்தை இந்த படத்தில் செய்திருக்கிறார். சசிகுமாருடன் இது எனக்கு 7 வது படம், எல்லாமே தனித்துவமான படங்கள். வறும் 49 நாட்களில் மிக வேகமாக எடுத்து முடிக்கப்பட்ட படம். எழுத்தாளராக ஒரு இடத்தில் உட்கார்ந்து எழுதிக் கொண்டு இருந்தவரை இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் புரட்டி எடுத்திருக்கிறோம். கிடாரி படத்தில் அவருடன் பழகியிருக்கிறேன். அதனால் அவரும் சொன்ன விஷயங்களை எந்த தயக்கமும் இல்லாமல் செய்தார். கதிர் இந்த படத்தின் முக்கியமான பில்லர். சமூக விழிப்புணர்வு இந்த படத்தில் நிறைய இருக்கிறது” என்றார் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்.
 
நான் இந்த படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ், பிரேம், கதிர்,    என நிறைய பேர் காரணம். அவர்களுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. படத்தில் நிறைய எமோஷன், அழுத்தமான காட்சிகள் உண்டு. என்னால் அதை செய்ய முடியும் என நம்பி எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி என்றார் நாயகி நந்திதா ஸ்வேதா.
 
96 படத்தின் இயக்குநர் பிரேம் தான் நான் சசிகுமாரை சந்தித்து கதை சொல்ல உதவியாக இருந்தார். சுப்ரமணியபுரம் மாதிரி படம் எடுத்த இயக்குநரை நான் இயக்க போகிறேன் என்று பயமாக இருந்தது. அவர் கொடுத்த ஊக்கத்தால் படத்தை சிறப்பாக எடுத்து முடித்திருக்கிறோம். சசிகுமாருக்கு அடுத்து படத்தில் கதிர், கோவிந்த் என இன்னும் இரண்டு ஹீரோக்கள் இருக்கிறார்கள். கதையை இசை மற்றும் காட்சிகளாக கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அதற்கு கதிர் மற்றும் கோவிந்த் உறுதுணையாக இருந்தார்கள். வசுமித்ரா ஒரு எழுத்தாளர், ஆனாலும் படத்துக்காக வில்லனாக, நிறைய கஷ்டப்பட்டு நடித்துக் கொடுத்தார். படத்தில் செட் என்று தெரியாத அளவுக்கு மிகவும் ரியலிஸ்டிக்காக செட் போட்டுக் கொடுத்தார் கலை இயக்குனர் குமார். படத்தில் சொல்லப்பட்ட விஷயத்தை நீங்கள் உணர்வீர்கள் என்றார் இயக்குநர் மருதுபாண்டியன்.
 
என்னுடைய படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த என்  நண்பன் பிரேம் தான் என்னிடம் இயக்குநர் மருதுவை கதை சொல்ல அனுப்பி வைத்தார். கதையை கேட்டவுடன் நான் தான் முதலில் தயாரிப்பதாக இருந்தது. அந்த நேரத்தில் தான் லலித் சார் நான் உங்களை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படுகிறேன் என்றார். நானும் அந்த நேரத்தில் கொஞ்சம் சிரமத்தில் இருந்ததால் எல்லாம் தயாராக இருந்த இந்த படத்தை அவருக்கு பரிந்துரைத்தேன். என்னுடைய கஷ்ட காலத்தில் அவரும், கதிரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். கொடைக்கானலில் மிகுந்த குளிரில் மொத்த குழுவும் கஷ்டத்தை பொருட்படுத்தாமல் உழைத்தார்கள். தயாரிப்பாளர் லலித், உங்கள் மீது நம்பிக்கை இருக்கு, நீங்கள் நினைத்ததை படமாக எடுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார், அதுவே பெரிய பயமாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தை பார்த்த அவர், எங்கள் பேனருக்கு முதல் படமே சிறந்த படமாக கொடுத்திருக்கிறீர்கள் என்று சொன்னபோது தான் மகிழ்ச்சியாக இருந்தது.
 
படத்தில் நாயகிக்கு நடிக்க வருமா என்று பார்த்து தேர்ந்தெடுங்கள் என்று சொன்னேன். நாயகிக்கு பாடல்கள் இல்லை, நிறைய பேர் நடிக்க முன்வரவில்லை. ஆனாலும் கதையை உணர்ந்து நடிக்க ஒப்புக் கொண்டார் நந்திதா. வில்லன் கதாபாத்திரம் மிகவும் பவர்ஃபுல்லான ஒன்று. இந்த கதாபாத்திரத்தில் யாரும் நடிக்க மாட்டார்கள், ஆனால் வசுமித்ரா ஒரு எழுத்தாளர் என்பதால் அவரிடம் கதாபாத்திரத்தை பற்றி எடுத்து சொல்லி நடிக்க ஒப்புக் கொள்ள வைத்தேன். இது நல்லவன், கெட்டவன் பற்றிய படம், இந்த காலகட்டத்துக்கு தேவையான ஒரு சமூக கருத்துகளை கொண்ட  ஒரு கதை என்றார் நாயகன் சசிகுமார்.
 
இந்த சந்திப்பில் கலை இயக்குநர் குமார், நடிகர் வசுமித்ரா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.