‘அண்ணாதுரை’ விமர்சனம்

இரட்டையர் கதைகளுக்கென்று ஒரு சூத்திரம் உள்ளது. அதில் இவரா அவர் ? அவரா இவர் ? என்கிற குழப்பமூட்டும் காட்சிகள் இருக்கும் . இப்படிப்பட்ட மாறாத கட்டமைப்பில் உருவாகியுள்ள படம்தான்  ‘அண்ணாதுரை’.

தாடி வைத்தால் அண்ணன் அண்ணாதுரை.  தாடி இல்லை என்றால் தம்பி , தம்பிதுரை என்று இரட்டையர்களாக இரு விஜய் ஆண்டனிகள். அப்பாடா பெயர்க்குழப்பமில்லை.

இவர்களில் அண்ணாதுரை விஜய் ஆண்டனிக்குக் காதல் தோல்வி. அதனால்  ஒரு புறம்   தாடியுடன் எப்போதும் போதையிலேயே  திரிகிறார். காதலியின் நினைவிலேயே இருக்கும் அண்ணாதுரை, வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். ஆனால் அவர் மீது ஜுவல் மேரிக்கு, காதல் வருகிறது. ஆனால் அவளது காதலை ஏற்க மறுக்கிறார்.

மறுபுறத்தில் தம்பிதுரையாக வரும் மற்றொரு விஜய் ஆண்டனி  பி.டி மாஸ்டர். அமைதியானவராக  வருகிறார்.அவருக்கு  டயானா சம்பிகாவை திருமணம் செய்து வைக்க  வீட்டில் முடிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், திருந்தி வாழ முடிவு செய்யும் குடிகார அண்ணாதுரை, ஜுவல் மேரியைத் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதிக்கிறார். அதற்கு முன்னதாக தனது குடிப்பழக்கத்தை விட முடிவு செய்து, பாருக்குச் செல்கிறார் . அங்கு நடக்கும் எதிர்பாராத விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழக்கிறார். அதற்கு பொறுப்பேற்று அண்ணாதுரை சிறை செல்கிறார்.

சில வருடங்களுக்குப் பிறகு ஜெயிலில் இருந்து வெளியே வரும் அண்ணாதுரை, சிறை வாசலில் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்படுவதைப் பார்க்கிறார். அதிலும் அந்தக் கொலையை தம்பிதுரை செய்வதைப் பார்த்து   அதிர்கிறார்.

அ.துரை ஜெயிலில் இருந்த 7 ஆண்டுகளில் நடந்தது என்ன? அமைதியான இருக்கும் த.துரை கொலைகாரனாக மாறியது எப்படி?  இடையில்   வாழ்க்கையில் என்ன நடந்தது? அண்ணாதுரை ஜுவல் மேரியுடன் சேர்ந்தாரா? தம்பிதுரை டயானா சம்பிகாவை கரம்பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

முதல்முறையாக  அண்ணன், தம்பி என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. வழக்கம் போல தனது ஆர்ப்பாட்டமில்லாத  நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.

ரவுடி, பொறுமை, காதலன், மகன் என பல்வேறு  ரகமாக அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. இரண்டு வேடங்களிலும் நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

டயானா சம்பிகா, மஹிமா, ஜுவல் மேரி என்று  நாயகிகள்    அவரவர் வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள். 

விஜய் ஆண்டனியின்  அப்பாவாக வரும்  நளினி காந்த் பாசமுள்ள அப்பாவாகப் பதிகிறார்.வில்லன்களில் ஒருவராக வரும் ராதாரவியின் வேடம் அநியாயத்திற்கு  சிறிதாக இருக்கிறது. டயானா சம்பிகாவின் அப்பாவாக வரும் செந்தில்குமரனின்  நடிப்பும் ரசிக்கும்படி உள்ளது.

விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாகவே  உள்ளன. பின்னணி இசை படத்திற்குப் பலம். கே.தில்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக உள்ளன.இப்படத்தில்  விஜய் ஆண்டனியின் படத்தொகுப்பும் சிறப்பாகவே உள்ளது. முதல் படம் போல இல்லாமல் தேர்ச்சி பெற்ற எடிட்டிங்கிலும்  அவர்  பளிச்சிடுகிறார்.

இயக்குநர் ஜி.ஸ்ரீனிவாசன்  நடிகர் விஜய் ஆண்டனியை இன்னமும் சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாம்.பல காட்சிகள் பழைய பாணியில் நம்ப முடியாதபடி மிகையாக உள்ளன.அது ஒன்றே குறை.மற்றபடி  விஜய் ஆண்டனியின் ரசிக மனங்களுக்கு  ‘அண்ணாதுரை’ பிடிக்கும் .