அன்புச்செழியன் அவசியம் தேவை : திரையுலகினரின் ஆதரவுக்குரல்கள்!

சினிமா உலகுக்கு பைனான்ஸியர் அன்புசெழியன் ஒரு வில்லன் என்பது போல சிலர் ஊடகங்களில் முழங்கும் இதே நேரத்தில் ‘அன்புசெழியன்  சினிமா உலகுக்கு அவசியம் தேவை’  என்று  திரையுலகத்தினர் ஆதரவுக்குரல் கொடுக்கிறார்கள். அது பற்றிய விவரம் வருமாறு:

  தற்போதைய தமிழ்ப் படவுலகில் நிலவிவரும் இறுக்கமான சூழ்நிலை குறித்து ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு சில உண்மைகளைச் சொல்ல ஒரு நிகழ்ச்சி பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது…இந்ச நிகழ்ச்சியில் பேசிய அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தமிழ் சினிமாவில் கந்து வட்டி என்பதே இல்லை. சினிமா உலகுக்கு பைனான்ஸியர் அன்புசெழியன் கண்டிப்பாகத் தேவை என்றார்.

அடுத்து பேசிய தேவயானி பார்க்காமலே பணம் கொடுக்கும் பைனான்சியர் என்றால் அது அன்பு செழியன்தான் . காதலுடன் என்ற படத்துக்காக நாங்கள் அவரிடம் கடன் வாங்கினோம். ஆனால் படம் முடந்து முதல் பிரதி தயாராகி குட்லக் திரையரங்கில் அதைப் பார்க்க வந்தபோதுதான் நான் அவரை முதல் முறையாகப் பார்த்தேன். எனக்கு அவர் தொந்தரவு கொடுத்தார் என்றெல்லாம் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் எனக்கு மிகுந்த வருத்தைத்தை ஏற்படுத்துவதால் இந்த உண்மைகளை விளக்கவே நான் இங்கு வந்தேன் என்றார்.

அடுத்து பேசிய மனோபாலா சதுரங்க வேட்டை 2 எடுக்க நான் பைனான்ஸ் விஷயமாக அன்பு செழியனிடம் பேசினேன். நாளைக்கு அலுவலகம் வாங்க என்று சொன்னார். பேசுவற்குதான் வரச்சொல்கிறார் போலும் என்று நான் அடுத்த நாள் அவரது அலுவலகம் சென்றேன். அங்கு போனபிறகுதான் தெரிந்தது அவர் பேச வரச்சொல்லவில்லை. பணம் கொடுக்க வரச்சொல்லியிருக்கிறார் என்பது. இவரைப் போன்ற ஆட்களால்தான் எங்களால் படம் எடுக்கவே முடிகிறது.என்றார் மனோபாலா.

அடுத்து பேசிய சுரேஷ் காமாட்சி, காசு கொடுத்தால்தான் டப்பிங் பேசவருவேன் என்று சொல்லும் நடிகர்கள், 30 நாளில் படப்படிப்பை முடிப்பேன் என்று சொல்லி 150 நாள்கள்வரை இழுக்கும் இயக்குநர்களும்தான் சினிமாவில் இருக்கிறார்கள். படம் வெளியாகும் நேரத்தில் தன் பணத்தை விட்டுக் கொடுத்துப் போகும் பைனான்ஸியர்கள் பலரும் இருக்கிறார்கள். என்றார் அடுத்து பேசிய தயாரிப்பாளர் மன்னன், உத்தம வில்லன் படத்துக்காக எல்லோரிடமும் பேசி 45 கோடி ரூபாயை விட்டுக் கொடுத்தவர்தான் அன்பு செழியன்.படம் எடுக்கிறேன் என்று சொல்லி பைனான்ஸியர்களிடம் 50 கோடி வாங்கிய அடுத்த நாளே ஆடி கார் வாங்கியவர்கள் இருக்கிறார்கள் தெரியுமா அடுத்து பேச வந்த வாசன் பிரதர்ஸ் வாசன் தயாரிப்பாளர்களின் பிரச்னைக்கு பைனான்ஸ் மட்டும் காரணமல்ல. கிட்டத்தட்ட நானும் இப்போது அசோக் குமாரின் மனநிலையில்தான் இருக்கிறேன். மூன்றரை வருடங்களுக்கு முன்பு நான் எடுத்த நிமிர்ந்து நில் என்ற படத்தால் இன்றுவரை நிமிர முடியாமல் இருக்கிறேன். என் மகள் கல்யாணத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் உதவித்தொகை பெறும்போது கூனிக்குறுகி நின்றேன். 20 கோடி ரூபாய் முப்பது கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுத்தவன் நான்….

அடுத்து பேச வந்த சுப்பு பஞ்சு அருணாசலம், என் அப்பாவின் காலத்திலிருந்தே நாங்கள் அன்புவிடம் வரவு செலவு வைத்திருக்கிறோம். ஆனால் இன்றுவரை அவர் எங்களிடம் ஒரு வார்த்தைகூட கடுமையாகப் பேசியதில்லை. படம் வெளியாகி இரண்டு நாள்கள் கழித்துகூட அவருக்குப் பணம் கொடுத்திருக்கிறோம் என்றார்.

அடுத்து பேசவந்த இசையமைப்பாளர், தயாரிப்பாளர் விஜய் ஆன்டனி, என் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்கூட நான் அதிகம் பேசமாட்டேன். ஆனால் இன்று நான் மனம் திறந்து சில உண்மைகளைச் சொல்ல வேண்டும் என்று தான் பேசுகிறேன். நான் நடிகராக அறிமுகமாகித் தயாரித்த படத்துக்கு நிதியுதவி வேண்டிதான் நான் அன்பு செழியனைப் பார்த்தேன். ஆனால் அப்போது அவர் எனக்கு சில அறிவுரைகளைச் சொன்னார். இசைக் கருவிகள் வாங்கவோ ரெக்கார்டிங் ஸ்டுடியோவை விரிவு படுத்தவோ கடன் தயார் என்று சொன்னார். ஆயினும் என் மீது இருந்த நம்பிக்கை காரணமாக நான் நடித்துத் தயாரித்த நான் படத்துக்கு நிதியுதவி செய்தார். அதை நான் சரியாக திருப்பி செலுத்தி விட்டேன். தொடர்ந்து கடந்த ஆறு வருடங்களாக அவரிடம் நிதியுதவி பெற்று திருப்பச் செலுத்தி வருகிறேன் என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய தயாரிப்பாளர் தாணு, மறைந்த அசோக்குமாருடைய குடும்பத்துக்கு உதவி செய்ய நானே ஒரு படத்தைத் தயாரித்து உதவத்தயாராக இருக்கிறேன் அதில் சசி குமார் அல்லது விஷால் யார் நடித்தாலும் சரிதான். அன்புச் செழியன் நீங்கள் மீண்டும் இந்தத் தமிழ்த் திரையுலகுக்கு வரவேண்டும் சிறு தயாரிப்பாளர்களுக்கு உதவ வேண்டும் என்று முத்தாய்ப்பாகக் கூறினார். இயக்குநர் ராஜ் குமாரன் , தயாரிப்பாளர் எல்ரெட் குமார், ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டு அன்புசெழியனுக்கு ஆதரவாகப் பேசினர்.