அப்பாக்களின் அவஸ்தைகள் யாருக்குத் தெரியும்?- பிரபு

prabu-1அப்பாக்களின் அவஸ்தைகள் யாருக்குத் தெரியும்?என்று ஒரு பட விழாவில் பிரபு பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு!
பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும் ‘பெப்ஸி’ யின் தலைவராக இருந்தவருமான பெப்ஸி விஜயனின் மகன் சபரிஷ் நாயகனாக நடிக்கும் படம்   ‘அசுரகுலம்’.  பழம்பெரும் இயக்குநர் கேசங்கரின். பேரன் விக்னேஷ் மேனன் இப்படத்தை இயக்கியுள்ளார். சி.சத்யா இசையமைத்துள்ளார். ஆப்கன் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

பாடல்களைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ட்ரெய்லரை  வெளியிட்டு  நடிகர் பிரபு பேசும்போது “நான் 1978-ல் ‘திரிசூலம்’ படத்தில் தயாரிப்பு நிர்வாகப் பணியைக் கவனித்து வந்தேன். அப்போதெல்லாம் அப்பா, பெரியப்பா எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு சாஹுல் ,ஜெயமணி இருவரும்தான் டூப் போடுவார்கள். இவர்களிடயே  உயரமாக இன்னொருவர் இருப்பார் அவர்தான் பெப்ஸி விஜயன். அப்போது அப்பாகூட இவர் வேலை செய்வதைப் பார்த்து ‘இவன் பெரியரவுண்ட் வருவான் ‘என்று பாராட்டுவார்.

மாஸ்டராக இவருக்கும் எனக்கும் ‘சங்கிலி’ முதல்படம். அந்தப்படத்தில் நான் அப்பாவை எதிர்த்து வசனம் பேசுவேன். அப்போது அப்பா என்னை அடிக்க வேண்டும். நான்கு ஷாட்கள்தான் இருக்கும். ஆனால் 25 போடு போட்டார். இது பற்றிக் கேட்ட போது அப்பா சொன்னார் ‘இவன் படுத்திய பாடு தாங்காமல் போட்டேன் இதுதான் சமயம் போடுவதற்கு’ என்றார்.

அப்பாக்களின் அவஸ்தைகள் யாருக்குத் தெரியும்? பிள்ளைகள் என்று வரும்போது தகப்பன்கள் படும்பாடு  எங்களை மாதிரி தகப்பன்களுக்குத்தான் தெரியும்.

இந்த சபரிஷின் அப்பா கஷ்டப்பட வைக்க மாட்டார். ஆனாலும் சபரிஷ் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். வாரிசுகள் இணைந்து உள்ள இப்படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் ” என்றார்.

நிகழ்ச்சியில்  இயக்குநர் பி.வாசு பேசும்போது ” விஜயன் மாஸ்டரை பரபரப்பான மாஸ்டராக ,ஒரு பலசாலியாகத்தான் தெரியும். இன்று இங்கே அவரை பொறுப்புள்ள ஒரு தந்தையாகப் பார்க்கிறேன்.  ஒருஅப்பாவாக உங்கள் பயம், பிரபுவின் பயம், என் பயம் எல்லாமும் ஒன்றுதான் .மகன் நன்றாக வரவேண்டுமே என்கிற ஒரு தந்தையின் பயம்தான் அது.

இந்தப் படக்குழு நாளை சாதனையாளர்களாக மாறி இதுமாதிரி மேடையில் அமரவேண்டும்.வாழ்த்துக்கள். சத்யாவின் இசையில் ராஜா சாரின் டச்சை உணர முடிந்தது.

இன்று  ஒரு படத்துக்கு கதாநாயகன்  யார் என்றால் அது கதைதான் . படம்தான் நட்சத்திரம். உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிற சல்மான்கான் இந்த விஜயன் மாஸ்டரின் ரசிகர்.
கதாநாயக நடிகர்களுககு பெரிய பெரிய கட்அவுட் எல்லாம் வைப்பார்கள். அதன் உயரம் அதிகமாக இருக்கும்.அதற்கு  அழகு படுத்தி மாலை  எல்லாம் போடுவார்கள்.பாலாபிஷேகம் செய்வார்கள்.  அந்தக் கட்அவுட்டின் பின்னால் போய்ப் பார்த்தால் ஆயிரம் கட்டைகள் இருக்கும் ; நிறைய ஆணிகள் இருக்கும்; கயிறுகள் இருக்கும்.

அவர்கள்தான் தொழில் நுட்பக் கலைஞர்கள். நட்சத்திரங்களைத் தாங்கிப் பிடிப்பவர்கள் இந்தத் தொழில் நுட்பக் கலைஞர்கள்தான் அதை மறந்து விடக் கூடாது” என்றார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எ.ஸ்.தாணு பேசும் போது. ” தம்பி சபரிஷ் திரையுலகைக் காக்கவந்த குலவிளக்காக வலம் வருவார்.இவர் சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய நடிகராகத் தெரிகிறார்,வெற்றி வலம் வருவார். இப்படம் நல்ல படத்துக்கான கதைக்களத்துடன் இருக்கிறது. எல்லா இலக்கணத்துடனும் இருக்கிறது. படம் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் ” என்றார்.

நடிகர் சந்தானம் பேசும் போது.

”இந்த சபரிஷுடன் நான் ஏற்கெனவே ‘மார்க்கண்டேயன்’ படத்தில் நடித்திருக்கிறேன். இதில் நான் நடிக்கவில்லை. இருந்தாலும் அன்புக்காக வந்திருக்கிறேன். ‘மார்க்கண்டேயன்’  படத்தை ஒரு காட்டில் எடுத்தோம். வீரப்பன் கூட நுழையமுடியாத காடு அது. அங்கு டாய்லட் கட்டி மின் சாரம் , ஏசி என்று எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் மாஸ்டர்.

பத்துமாதம் சுமந்து அம்மா பெற்றாலும் எல்லாருக்கும் ரோல்மாடல் அப்பாதான். எங்கள் அப்பா குடிக்க மாட்டார். புகை பிடிக்க மாட்டார். அவர் ஒரு பில்டிங் காண்ட்ராக்டர். இருந்தாலும் தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவர்தான் என் முதல் ஹீரோ. சபரிஷுக்கு நல்ல அப்பா, கிடைத்து இருக்கிறார். சபரிஷுக்குத் துணை நிற்போம். என்னை ரசிக்கும் ரசிகர்கள் என் தம்பி சபரிஷ் படத்தையும் பார்க்க வேண்டுகிறேன்”. என்றார்.

இயக்குநர்கள் சங்கத்தலைவர் விக்ரமன் பேசும்போது. ” தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடிபாயும் என்பது அந்தக்காலம். இப்போது தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி  64 அடிபாயும் .பெப்ஸிவிஜயன் வில்லனாகத்தான் நடித்திருக்கிறார் அவரால் டூயட் பாட முடியாது. எனவே தன் மகனை  டூயட் பாட வைத்திருக்கிறார். சபரிஷுக்கு யாருடைய சாயலும் இல்லாத முகம். யார் சாயலும் இல்லாத நடிப்பு. நாயகி வித்யாவும் புதியவராக இருக்கிறார். கண்டிப்பாக சபரிஷுடன் இணைந்து படம் செய்வேன்”. என்று கூறி வாழ்த்தினார்.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பி.எல் தேனப்பன், ராதாகிருஷ்ணன். கதிரேசன், விநியோகஸ்தர் சங்கத்தலைவர் அருள்பதி, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன். நடிகர்கள்  தம்பி ராமையா,ஜான்விஜய், விடிவி கணேஷ், இசையமைப்பாளர் சி.சத்யா, நாயகி வித்யா, ‘மஞ்சப்பை’ இயக்குநர் ராகவன், ‘அசுர குலம்’ தயாரிப்பாளர்  வேம்பையன் வேலாயுதம், இயக்குநர் விக்னேஷ் மேனன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக அனைவரையும் தயாரிப்பாளர் சரவணன் கணேசன் வரவேற்றார்.