‘அப்பா ‘ விமர்சனம்

appa0kமூன்று வெவ்வேறு அப்பாக்கள் அவர்களின் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள், அப்பாக்களின் அரவணைப்பில் அந்த குழந்தைகள் எந்த மாதிரியாக வளர்ந்து மாறுகிறார்கள் என்பதைச் சொல்லும் படம்தான் அப்பா.

சமுத்திரக்கனி தனது மகன் விக்னேஷுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்து வருகிறார். படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல, அவன் வாழ்க்கையில் நல்ல, கெட்ட விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும்  உலகத்தையே பாடமாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இவ்வாறு செய்கிறார்.

அதேநேரத்தில் தம்பி ராமையா தனது மகனை, கண்டிப்புடன் வளர்த்து வருகிறார். தனது கனவுகளை, தனது லட்சியங்களை தனது மகன் நிறைவேற்ற அவனுக்கு படிப்பு மட்டும்தான் முக்கியம் என்று  வளர்த்து வருகிறார்.

இன்னொருபுறம்  நமோ நாராயணன் தனது மகனை  தான் உண்டு தன் வேலையுண்டு  என எதையும் கண்டு கொள்ளாமல் , இருக்கும் இடம் தெரியாமலேயே வாழவேண்டும் என்று கூறி வளர்த்து வருகிறார். இந்த மூன்று வெவ்வேறு குடும்பங்களும் ஒரே பகுதியில் வசிக்கின்றன.அவர்கள் பார்வை வேறு பயணம் வேறு என்றிருக்கின்றன.

இப்படியாக இச்சமூகத்தின்  மூன்று வகை மனித சுபாவங்களை முன் வைக்கிறது படம்.

இந்த வகையில் வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்து வரும் குழந்தைகளின் வாழ்க்கை எந்த நிலைக்கு சென்றது என்பதை எடுத்துச் சொல்வதே  ‘அப்பா’.படம்.

சமுத்திரக்கனி, பொறுப்பான தந்தையாக படத்தில் ஒளிர்கிறார். இவர் மகனுக்கு மட்டுமல்ல இவனது  நண்பர்களுக்கும் உதவும் தந்தையாக அனைவரையும் கவர்கிறார். தன் மகனை தொலைத்து தவிப்பது, தன் மனைவியை எண்ணி வருந்துவது என நடிப்பில் அசத்தியிருக்கிறார்.அவரது இயல்பான நடிப்பு, அவரது கதாபாத்திரத்திற்கும், அவர் சொல்லும் கருத்துக்கும் பலம் சேர்க்கிறது.

அப்பப்பா…, நமக்கும் இப்படி ஒரு அப்பா வாய்க்க மாட்டாரா? என்று பிள்ளைகள் ஏங்கும் அளவுக்கு சிறப்பான அப்பாவாக சமுத்திரக்கனி வலம் வருகிறார். இவரது வசனங்கள் படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது.

appa444 கண்டிப்பான தந்தையாக தம்பிராமையா பெரிய மீசையோடு படம் முழுக்க வருகிறார். இவருடைய கதாபாத்திரம் வெறுப்பேற்றினாலும், இறுதியில், அனுதாபத்தை அள்ளி க்கொண்டு போய் விடுகிறது.  நமோ நாராயணாவுக்கு சிறு கதாபாத்திரம் என்றாலும் அதைச் சிறப்பாக செய்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரங்களான விக்னேஷ், ராகவ், யுவலட்சுமி, கேப்ரில்லா, நாசத், என அனைவரையும் திறம்பட திரையில் மின்ன வைத்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி . அனைவருடைய நடிப்பும் ரசிக்கும்படியாக இருக்கிறது.
இளையராஜாவின் பின்னணி இசை படத்தை தூக்கி வேறு உயரத்தில் நிறுத்தியிருக்கிறது. ஒரேயோரு பாடல் மட்டுமே இருந்தாலும் மனதில் எளிதாக பதிகிறது. ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

கல்வி மட்டும்தான் வாழ்க்கை என்று வளர்க்கும் பெற்றோர்கள், தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிப்பதால் குழந்தைகள் வாழ்க்கையில் எந்தமாதிரியான துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை இப்படத்தில் அப்பட்டமாக காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

appa1குழந்தைகள் சரியாகத்தான் இருக்கிறார்கள், இந்த அமைப்பும் ,இங்கு உள்ள கல்வி முறையும், அவர்களை வழி நடத்திச் செல்லும் பெற்றோர்களும்தான் சரியில்லை, என்பதை படம் பார்ப்பவர்கள்  மனதில் அழுத்தமாகப் பதிய வைக்கிறது  படம்.

மொத்தத்தில் அர்த்தமுள்ள ‘அப்பா’ .