‘அம்மா கணக்கு’ விமர்சனம்

Amma-Kanakku-4அமலாபால், ரேவதி, சமுத்திரக்கனி, யுவஸ்ரீ, மாளவிகா, விஷால்தேவ், விக்கி நடித்துள்ளனர்.

கணவனை இழந்த அமலாபால் தன் மகள் படிப்பில் ஈடுபாடு காட்டவும், மகளை உயர்த்தி உயரம் தொடவும்  ஒரு தாயாகப் போராடும் போராட்டமே கதை.

பாசத்துடன் வளர்க்கும் மகள் யுவஸ்ரீ படிப்பில் ஆர்வம் காட்டாமலும் குறிப்பாக கணக்குப் பாகத்தின் மீது வெறுப்புடன் இருப்பதையும் உணர்கிறார் அமலாபால். எவ்வளவோ அறிவுரைகள் கூறியும் எடுபடாததால் தானே பள்ளிக்குச் சென்று அந்தப் பாடத்தைப் படித்து மகளுக்குப் புரிய வைக்க நினைக்கிறார். தன் அம்மா தன் பள்ளிக்கே வருவது பிடிக்காமல் தாயை வெறுக்கிறாள் மகள். தன்னை போட்டியாக நினைத்தாவது மகள் படிக்கட்டுமே என்று பள்ளிக்குப் போகிறார் அம்மா.

இதனால் யுவஸ்ரீ குறைந்த மதிப்பெண்ணே பெறுகிறாள். மகளைத் திருத்த தாய் மேற்கொண்ட வியூகம் என்ன?  மக்கு போலத் தோன்றிய மகளை ஐ ஏஎஸ் தேர்வு வரை   கொண்டு போக முடிந்தது எப்படி? என்பதே ‘அம்மா கணக்கு’ படத்தின் முடிவு .

ஏழைத் தாயாக அமலாபால் அசத்தியுள்ளார். அழுக்கு உடை, வியர்வைப் பிசுக்குடன் முகம் என தோற்றத்திலும் யதார்த்தம். மகளை வழிக்குக் கொண்டுவர படாதபாடு படும் தாயாக நுணுக்கமான நடிப்பையும் அலட்டாமல் வழங்கியுள்ளார்.

மகள் அபிநயாவாக வரும் சிறுமி  யுவஸ்ரீ அனாயாச முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.அம்மா மகள் பாத்திரப் பொருத்தம் அழகு.ஏழைகளுக்கு கனவு காணும் உரிமை இல்லை என்று மகள் உணர்வது  பொங்குவது மனங்கசிய வைக்கும் காட்சி.கனவுதான் நமக்குள்ள ஒரே ஆயுதம் என அம்மா சொல்வது பளிச் டச் காட்சி.

Amma-Kanakku-Movie-Photos-4பள்ளியின் ஆசிரியராக வருகிறார் சமுத்திரக்கனி, ‘சாட்டை’யின் பாதிப்பு தெரிகிறது நடிப்பில் .அமலாபாலின் முதலாளியம்மாவாக வருகிறார் ரேவதி.

பலரும் தங்களைப் படத்தில் தரிசிக்க வைக்கும் கதை இது.தனிமனித குணச்சித்திரங்கள் அல்லாமல் படத்தில் வரும் வகுப்பறை கூட பாத்திரமாக தெரிகிறது. மாணவர்கள்  படிக்கும் வகுப்பறை  உயிர்ப்புடன்  உள்ளது.  படத்திற்கு கவேமிக் யு ஆரியின் ஒளிப்பதிவு இயல்பாக உள்ளது. இசைஞானியின் இசை படத்துக்கு கூடுதல் பலம்.

ஜீவனுள்ள கதை இருப்பதால் அலங்காரங்கள், பிரமாண்டங்கள் எதுவுமே படத்திற்குத் தேவைப்படவில்லை. சில குறிப்பிட்ட இடங்களையே கதை வட்டமடித்தாலும் மனதை தொடும் உணர்வு பூர்வமான கதை இருப்பதால் போரடிக்கவில்லை.முதல் பாதியில் மெல்ல நகர்வது  மட்டும்தான் சிறு குறை.  இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி தமிழிலும் வெற்றி பெற்று விட்டார் சபாஷ். படிக்கும் குழந்தைகளும் பெற்றோரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.    நல்ல நோக்கத்திற்காக இந்த நல்ல படத்தை தயாரித்துள்ள தனுஷுக்கும் பாராட்டுக் கைகுலுக்கல்கள்.