அரசியலுக்கு நுழைந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமா? மகன் படவிழாவில் விஜயகாந்த் பேச்சு

vk-22.11நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்த ‘சகாப்தம்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு தனது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘தமிழன் என்று சொல்’ என்கிற புதிய படத்திலும் விஜயகாந்த் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் அருண் பொன்னம்பலம் இயக்கவிருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் விஜயகாந்த், சண்முகபாண்டியன், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில், விஜயகாந்த் படத்தின் இயக்குநரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும், படத்தில் பணிபுரியும் அத்தனை கலைஞர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இதில், சண்முகபாண்டியன் பேசும்போது, என்னுடைய அடுத்த படத்துக்காக 50-60 கதைகளை கேட்டேன். இறுதியில் ‘தமிழன் என்று சொல்’ படத்தின் கதை பிடித்துப் போனதும் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறினார்.

இயக்குநர் அருண் பொன்னம்பலம் பேசும்போது, ”முதலில் நான் விஜயகாந்தை சந்தித்து பேசுவதற்கு மிகவும் பயந்தேன். ஆனால், அவர் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதும் மிகவும் சந்தோஷமடைந்தேன் ”என்றார்.

விஜயகாந்த் பேசும்போது, ”இந்தப் படத்தின் கதையை முதலில் எனது மகன் பிரபாகரன்தான் கேட்டார். அவர் என்னிடம் வந்து இந்த கதையில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். பிறகு, கதையை கேட்டேன், நன்றாக இருந்தது.

இருப்பினும், அரசியலுக்கு நுழைந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமா? என தயக்கமாக இருந்தது. எனது மகன்கள், மனைவி ஆகியோர் தொடர்ந்து என்னை நடிக்க வலியுறுத்தவே, இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன் ”என்று கூறினார்.

விழாவில் பங்கேற்ற படக்குழுவினர் அனைவருக்கும் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. பூஜைக்கு பிறகு படத்திற்காக ஒரு காட்சியும் படமாக்கப்பட்டது