‘அவள் ‘ விமர்சனம்

பேய்ப்படங்களுக்கென்று சில சூத்திரங்கள் உள்ளன. பெரும்பாலான படங்கள் இதன்படியே உருவாகின்றன. ‘அவள் ‘ படம்  அதே பாதையில் சென்றாலும் பின்புலத்தாலும்  நேர்த்தியான உருவாக்கத்தாலும் தனியே தெரிகிறது.

இதுவரை வந்த பேய்ப்படங்கள் அனைத்தும் காமெடிப் படங்களாகவே  இருந்தன

மாறாக நிஜமான திகில் அனுபவத்தை தரும் பேய் படமாக வெளியாகியிருக்கிறது ‘அவள்’.

பிரபல சர்ஜனான  சித்தார்த் ,மூளை அறுவை  நிபுணர். அவர் தனது மனைவி ஆண்ட்ரியாவுடன் ஊருக்கு  வெளியே இருக்கும் ஒரு வீட்டில் வசிக்கிறார். அவர்களது பக்கத்து வீட்டில் அதுல் குல்கர்ணி தனது குடும்பத்தோடு குடியேறுகிறார். சித்தார்த்துடன் அவர் நட்பு பாராட்டுகிறார்., அதுலின் மகளோ சித்தார்த் மீது ஆசைப்படுகிறார்.

இதற்கிடையே, அதுல் குல்கர்ணியின்  மகள் திடீரென்று தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறார்.  திடீர் திடீரென்று சித்தப்பிரமை  பிடித்தவர் போல நடந்து கொள்கிறார். இதனால் அவரை மனநல மருத்துவரிடம் சித்தார்த் அழைத்துச் செல்கிறார்.

மாந்திரிகர் ஒருவரோ அந்த பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறுகிறார். அவரை பிடித்த பேய் யார்? என்பதை அறிய பாதிரியார் ஒருவர் முயற்சிக்க, அவர் மீது மட்டும் அல்ல மற்றொருவர் மீதும் பேய் இருப்பதை அவர் அறிகிறார். அது யார்? அந்த பேயின் முன்கதைஎன்ன? என்பது தான்‘அவள்’ படத்தின் கதை.

பல பேய்ப் படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும், ‘அவள்’ ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும் .

இந்த படத்தில் பிளாஷ் பேக் இருந்தாலும், இயக்குநர் அதை வித்தியாசமாக கையாண்டிருப்பதோடு, பேய் இருக்கிறதா அல்லது அந்த பெண்ணுக்கு ஏற்படும் மாற்றமா? என்பதை யூகிக்காதபடி திரைக்கதையை  நேர்த்தியாக அமைத்திருக்கிறார்.

வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்யும் சித்தார்த், அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். தன் மீது ஆசைப்படும் அதுல் குல்கர்ணியின் மகளுக்கு ஜாலியாக அறிவுரை கூறும் சித்தார்த், அந்த விஷயத்தை தனது மனைவியிடம்  கூறும் காட்சிகளில் இயல்பான நடிப்பால்  கவர்கிறார். ஆண்ட்ரியா தனக்கான வேலையை சரியாக செய்திருப்பதோடு, சித்தார்த்துடன் நெருக்கமான காட்சிகளில் ரசிகர்களைச் சூடேற்றுகிறார் .

அதுல் குல்கர்ணி, அனிஷா ஏஞ்சலினா, சுரேஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திர நியாயம் செய்து கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.  படத்தில் வரும்  இமாச்சலப்பிரதேச பின்புலம் அழகானது . காட்சிகள் ரசிக்கத்தக்கவை. 

கிரிஷின் இசையும், ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும்கூடுதலாகவே நம்மை மிரட்டுகின்றன. “இது தமிழ்ப் படம் தானா!” என்று ஆச்சரியப்படும் விதத்தில் தனது கேமரா மூலம்  காட்சி  மாயம்செய்திருக்கிறார் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா.

வழக்கமான பேய் படங்களைப் போல கதையை நகர்த்தாமல், சில திருப்பங்களுடன் கதையை நகர்த்தியுள்ள இயக்குநர் மிலிந்த், திகில் பட பிரியர்களுக்கான  விருந்தாக இப்படத்தை கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘அவள்’  மேம்பட்ட உருவாக்கத்தில் ஒரு பேய்ப்படம்.