ஆக்டிங் ஹீரோ என்பது ஆக்ஷன் ஹீரோவுக்குள் அடங்கும். ஆக்ஷன் ஹீரோ என்பது ஆக்டிங் ஹீரோவுக்குள் அடங்கும் : அர்ஜுனின் தெளிவு

2X7A0395ஆக்டிங் ஹீரோ என்பது ஆக்ஷன் ஹீரோவுக்குள் அடங்கும். ஆக்ஷன் ஹீரோ என்பது ஆக்டிங் ஹீரோவுக்குள் அடங்கும். ஆக்ஷன் ஹீரோ, ஆக்டிங் ஹீரோ என்று தனித்து காட்ட முடியாது என்கிற அர்ஜுன், ஏறக்குறைய அறிமுகமான காலத்திலிருந்தே இன்றுவரை தனக்கென ஒரு வணிக மதிப்பைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்.

இவரது காலத்தில் அறி முகமான ஹீரோக்கள் பலர் இன்று அப்பா வேடத்திற்கு மாறிவிட்ட போதும், இவர் இன்னும் தன்னை கதாநாயகனாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்…அர்ஜுனைச் சந்தித்த போது…

  • நீங்கள் இதுவரை  150 மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறீர்கள் அதில் குறிப்பாக சொல்லக்கூடிய கதாபாத்திரம் என்னென்ன ?

ஒரு படைப்பாளியின் படைப்புகள் அனைத்தும் எப்படி சிறந்ததோ.. அது மாதிரி ஒரு கலைஞனின் ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பானதுதான். நான் ஏற்ற அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பானவைதான்.

குறிப்பாகச் சொல்லவேண்டுமானால்..முதல்வன் ( புகழேந்தி ), ஜென்டில்மேன் ( கிச்சா ), ஜெய்ஹிந்த், பிரதாப்  இதுபோல் நிறைய படங்கள் இருக்கின்றன.   என்னை வேறு விதமாக அடையாளப் படுத்திய படங்கள்.

இன்னும் நிறைய பேர் ஜெய்ஹிந்த், முதல்வன் மாதிரி படங்களில் மீண்டும் ஏன் நடிக்க வில்லை என்று கேட்கிறார்கள்.. அதுமாதிரி எப்பவாவது ஒரு முறைதான் அத்திபூத்தாற் போல் உதயமாகும். விரைவில் வெளியாக உள்ள ஒரு மெல்லிய கோடு படத்தின் கதாபாத்திரமும் என்னை வித்தியாசப் படுத்திக் காட்டும்.

  • ஆக்டிங் கிங் என்ற அடையாளம், ஆக்ஷன் கிங் என்ற அடையாளம், இதில் எது உங்களுக்கு பிடிக்கும்?

ஆக்டிங் ஹீரோ என்பது ஆக்ஷன் ஹீரோவுக்குள் அடங்கும். ஆக்ஷன் ஹீரோ என்பது ஆக்டிங் ஹீரோவுக்குள் அடங்கும். ஆக்ஷன் ஹீரோ, ஆக்டிங் ஹீரோ என்று தனித்து காட்ட முடியாது. அது ஒரு சிலருக்கு மட்டுமே அபூர்வமாக அமைந்த விஷயம். சிவாஜி கணேசன் போன்றோர் நடிப்பில் தனித்துவம் காட்டி தன்னை அடையாளப் படுத்திக்கொண்டார்கள். நானும் ஒரு சில படங்களில் ஆக்ஷன் ஹீரோ, ஆக்டிங் ஹீரோவாக தனித்துவம் காட்ட முயற்சி செய்திருக்கிறேன்.. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன்.

  • உங்களுக்கு பழகிப்போன அதே காக்கி சட்டை கதாபாத்திரம்தானே ஒரு மெல்லிய கோடு படத்திலும்?

நான் முதன் முதலாக காக்கிசட்டை போட்டது 1986 ல் சங்கர் குரு  படத்திற்காகத் தான். அதற்கு பிறகு நிறைய படங்களில் காக்கிசட்டை போட்டு நடித்துள்ளேன். ஆனால் இந்த ஒரு மெல்லிய கோடு படத்திற்காக காக்கிசட்டை போடாத ஒரு காவலனாக நடித்திருக்கிறேன்.

போலீஸ் ஆபீசர் என்றாலே நிச்சயமாக அடிதடி இருக்கும், ஆக்ஷன் இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. இந்த படத்தில் படத்தின் திரைக்கதையே ஆக்ஷன் படம் மாதிரி ஒரு வேகத்தை கொடுக்கும். அதனால்தான் சண்டைக் காட்சிகளில் நடிக்க வில்லை.

ஆக்ஷனுக்கு உண்டான வேடம் இருந்து எனக்கு மகுடம் சூட்டிய படங்கள் ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், பிரதாப், முதல்வன் போன்ற படங்கள். அதுபோல இயக்குநர் AMR.ரமேஷ் இந்த படத்தில் என்னை கையாண்டவிதம் எனக்கு ஒரு மன நிறைவைக் கொடுத்திருக்கிறது. நிச்சயமாக இனி சண்டைக் காட்சிகள் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்கிற அபிப்பிராயத்தை உடைத்தது ஒரு மெல்லிய கோடு படம். இனி இது போல் வித்தியாசமான கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

எனக்கு ஜோடியாக முதல்வன் படத்தில் நடித்த மனிஷா கொய்ராலா இந்த படத்தில் ஷாம் ஜோடியாக நடித்திருக்கிறார். அவரை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி.

இந்த படம் நிச்சயமாக மாறுபட்ட ஒரு தோற்றத்தை எனக்கு தரும் என்று நம்புகிறேன்

என்றார் அர்ஜுன்.