‘ஆன்டி இண்டியன்’ விமர்சனம்

எந்த இயக்குநரின் படமாக இருந்தாலும் தனது கருத்துக்களை விமர்சனமாகத் தயங்காமல் முன் வைப்பவர் தான் ப்ளூ சட்டை மாறன்.

அவரது வீடியோக்களை பார்த்து பலரும் அவரை திட்டியவர்களும் உண்டு. படம் இயக்கினால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என்று பலரும் அவரை குறை கூறியதைப் பார்த்து, தானாகவே படம் இயக்கி இசையும் அமைத்துள்ளார் மாறன்.

இந்து தாய்க்கும், முஸ்லிம் தந்தைக்கும் பிறந்தவர் பாட்ஷா. இவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கொலை செய்கிறார்கள். பாட்ஷா உடலை பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்கிறார்கள். ஆனால், பாட்ஷா உண்மையான முஸ்லிமாக வாழவில்லை என்று கூறி முஸ்லிம் மதத்தினர் அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்து உடலைத் திருப்பி அனுப்புகிறார்கள்.

வீட்டுக்குத் திருப்பி எடுத்துச் செல்லப்பட்ட பாட்ஷாவின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்குகள் செய்யப்படுகின்றன.இந்து மக்களின் மயான பூமிக்கு எடுத்துச் செல்கிறார்கள். அங்கு இறந்தவரின் பெயர் பாட்ஷா என்பதால் அங்கும் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

இன்னொருபுறம் பாட்ஷா உடலை வைத்து அரசியல் செய்கிறார்கள். இறுதியில் பாட்ஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் பாட்ஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இளமாறன் என்னும் புளு சட்டை மாறன். ஆரம்பம் முதல் இறுதிவரை பிணமாகவே இருப்பதால் இவரது நடிப்பைப் பார்க்க முடியவில்லை. ஆனால், கதை இவரைச் சுற்றியே நடக்கிறது.

சடலம், அடக்கம் செய்ய மறுக்கும் மதத்தினர், அதை சுற்றி நடக்கும் அரசியல் என படத்தை இயக்கி இருக்கிறார். நாம் பார்க்கும் மத மோதல்களுக்கும், கலவரங்களுக்கும் எப்படி எங்கிருந்து தொடங்குகிறது, அதனை மிக எளிதாக தடுக்க முடிந்தும் தடுக்க யாருமே முயற்சி எடுக்காதது ஏன்? அரசாங்கமும், அதிகாரமும் மத மோதல்களை எப்படி தங்களின் சுயலாபத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார்.

முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி மெதுவாகவும் திரைக்கதை நகர்கிறது. ஒரு சில இடங்களில் வசனங்கள் ‘நச்’ என்றும் சில இடங்களில் ‘ஙே’ என்றும் இருக்கிறது.

தேவையில்லாத காட்சிகள் திணிப்புகள் போல் உள்ளன. அதுபோல் நீண்ட காட்சிகளும் படத்திற்கு பலவீனம். மதவாதிகள், காவல்துறை, அரசியல் கட்சிகள், மீடியா என அனைவரையும் சாடியிருக்கிறார். மதங்களுக்கிடையே உண்டாகும் சில பிரச்சினைகளையும், சலசலப்பையும் காட்டியதற்கும், மதத்தால் சில அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும் செய்யும் சூழ்ச்சியை வெளிப்படுத்தியதற்கும் பாராட்டுகள்.

இளமாறனே இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். ஆனால், அதிகம் கவனம் பெறவில்லை. கதிரவனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘ஆன்டி இண்டியன்’ சுவாரஸ்யம் குறைவு.