இசை வெளியீட்டு விழாக்கள் பொய்கள் நிறைந்தவை: மிஷ்கின்!

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் “சீமத்துரை”.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தின் கதாநாயகன் கீதன், கதாநாயகி வர்ஷா பொல்லம்மா, இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் என இந்த விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இளையோர்களாக இருந்தாலும் அவர்களை வாழ்த்த தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின், வசந்தபாலன், இயக்குநர் நடிகர் மனோபாலா, பொன்வண்ணன், தயாரிப்பாளர்கள் “அம்மா கிரியேஷன்ஸ்” சிவா, தனஞ்செயன், நடிகர்கள் கலையரசன், கதிர் மற்றும் எழுத்தாளர் நடிகர் வேல ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை பிரம்மாண்டமாக்கினார்கள். குறிப்பாக இந்த படத்தில் நடித்ததோடு நின்று விடாமல், இசை வெளியீட்டு விழாவில் இவ்வளவு பிரபலங்களும் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவராகிய நடிகை விஜி சந்திரசேகரும் வந்திருந்து விழாவை சிறப்பாக்கினார்.

இயக்குநர் மிஷ்கின், தனது வழக்கமான பேச்சு நடையால் விழாவை கலகலப்பாக்கினார். “பொதுவாக இசை வெளீயிட்டு விழா என்பது பொய்கள் நிறைந்ததாகவே இருக்கும். இது என் படங்களுக்கும் பொருந்தும். ஆனால் உண்மையிலேயே இங்கே இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் இங்கு வந்திருப்பவர்களின் பொய்யற்ற வெகுளித்தனம்.

விஜி சந்திரசேகர் இந்திய சினிமா குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கும் ஒரு நடிகை, நிச்சயம் அவர் வரும் நாளில் கொண்டாடப்படுவார். அவர் தோழமையோடு கண்டிப்பாக கேட்டுக்கொண்டதின் பெயரிலேயே நான் இங்கிருக்கிறேன். இயக்குநர் சந்தோஷ் என்னை சந்திக்க வந்திருந்த போது தான் அவரை முதன் முதலாகப் பார்த்தேன். பார்த்த மாத்திரத்திலேயே அவரது நம்பிக்கை மிகுந்த கண்களும், முகமும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரது நம்பிக்கையே “சீமத்துரை” நன்றாக இருக்கும் என உறுதிசெய்கிறது. தான் வாழ்ந்த மண் சார்ந்தே தனது முதல் படத்தை எடுத்துள்ள இயக்குநருக்கு வாழ்த்துகள்.

குறிப்பாக தனது முதல் படத்திலேயே இசை வெளியீட்டு விழாவில் “மேக்கிங்” காட்சிகளை ஒளிபரப்பிய நம்பிக்கை எனக்கு பிடித்திருந்தது. இதற்கு முன்னர் நான் மட்டும் தான் “சித்திரம் பேசுதடி” படம் வந்தபோது இதை செய்தேன். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கீதன் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். அவரது முகம் எல்லோருக்குமே எளிதில் பதியும் விதத்தில் இருப்பது அவரது பலம், நிச்சயமாக உயரங்கள் தொடுவார். ட்ரைலரில் கருவாடு விற்பது போல காட்சிகள் இருந்தது, இந்த உலகத்தின் மிகமிக சுவையான உணவு கருவாடு தான். பழைய சோற்றுக்கும், கருவாட்டுக் குழம்பிற்கும் ஈடு இணையான உணவே கிடையாது. இங்கே மூன்று பாடல்களை ஒளிபரப்பினார்கள், நேரம் கருதி அதை குறைத்திருக்கலாம். ஆனால் அத்தனை பாடல்களையும் நம்மை பார்க்க வைத்தது கூட அவர்களது நம்பிக்கையை பிரதிபலித்தது. இந்த படத்தின் பாடல்களை பார்க்கும் போது அதில் ஒரு மிகையில்லாத ஒளிப்பதிவு நேர்த்தியை காண முடிந்தது. இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ரான்க்ளின் அழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். படக்குழுவினர் அத்தனை பேருக்கும் என் வாழ்த்துகள்.” என்று பேசி முடித்தார்.

விஜி சந்திரசேகர், “இந்தப் படத்தின் இயக்குநர் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்ததது. அதனால் தான் நடிக்க சம்மத்தித்தேன். இதில் பணியாற்றியிருக்கும் இந்த இளைஞர்களுக்கெல்லாம் என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு துணையாக நிற்கிறேன். ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைகள் தானே வளரும் என்பதை நம்புகிறேன். நம்மால் முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவுவது நல்லது. சீமத்துரையில் ஓரளவிற்கு நன்றாக நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி” என்று சுருக்கமாக பேசினார்.

எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, “கோயில் திருவிழாக்களில் எத்தனை கடைகள் இருந்தாலும், கொண்டாட்டங்கள் நிறைந்திருந்தாலும் யானையை எல்லோரும் வியப்பாக பார்ப்பார்கள். அப்படி இந்த சீமத்துரை படத்தில் இந்த இளைஞர் படைக்கு நடுவில் யானையாக விஜி சந்திரசேகர் நடித்திருக்கிறார். அவர் மதயானை கூட்டம் படத்தில் எனக்கு தங்கையாக நடித்திருந்தார், அப்போதே அவர் நடிப்பில் வியந்திருக்கிறேன். நிச்சயம் இந்த படத்திலும் மதயானை கூட்டம் படத்தில் வருவது போல வலுவான கதாபாத்திரத்தில் தான் அவர் நடித்திருப்பார். கதாநாயகன் கீதன் மிக அழகாக இருக்கிறார், அவரது சிரிப்பு எல்லோரையும் எளிதில் கவரும் வகையில் இருக்கிறது. அவர் நிச்சயமாக சாதிப்பார். அதே போல் வர்ஷா பொல்லம்மாவும் அழகாக இருக்கிறார். இருவருக்கும் என் வாழ்த்துகள். பொதுவாக தென் மாவட்டங்களின் கலாச்சாரத்தை விட தஞ்சாவூரின் கலாச்சாரம் மிகச் சிறப்பானது. அப்படிப்பட்ட தஞ்சாவூர் மண் சார்ந்து இந்த படத்தை இயக்கியிருக்கும் இயக்குநருக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்” என்று பேசினார்.