‘இணையதளம்’ விமர்சனம்

inayathalam1மக்களுக்கு கவலைதளங்களாக மாறியுள்ள சமூக வலைதளங்களில்  நிகழும் அபாயம் பற்றிய கதை. வலைதளங்களில் ஆழ்ந்து மூழ்கியிருப்பவர்களை விழிக்கவைக்கும்  ஒரு படம்தான்  ‘இணையதளம்’.

மர்ம மனிதர்களால் கடத்தப்படும் சிலர், புதுமுறையில் கொலை செய்யப்பட்டு  அக்கொலையை நேரலையாக இணையதளத்தளம் ஒன்றில் வெளியிடுகிறார்கள். அந்த இணையதளத்தை எத்தனை பேர் லாகின் செய்து பார்க்கிறார்களோ, அதற்கு ஏற்ற வேகத்தில் கடத்தப்படுபவர்களது உயிர் போகும், என்ற விதத்தில் அடுத்தடுத்து கொலை செய்யும், அந்த இணையதளம் எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதை கண்டறிய சைபர் க்ரைம் பிரிவு காவல் துறை களத்தில் இறங்க, அவர்களுக்குச்சவாலாக அமைய,
அடுத்தடுத்த கொலைகள் நடக்கின்றன., இறுதியில் அவர்கள் பிடிபட்டார்களா? கொலைகளுக்கான பின்னணி என்ன, அதை செய்வது யார்? என்பது தான் கதை.

படத்தில் நாயகன் கணேஷ் வெங்கட்ராமன்.  புது நாயகனாக  உருவெடுத்துள்ள ஈரோடு மகேஷ்  நடிப்பு படத்திற்கு உதவ வில்லை. சுவேதா மேனனின் பாத்திரமும் எந்தவிதத்திலும் பலம் சேர்க்காமல் போகிறது.

இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறே பயணிப்பதால், ரசிகர்களிடம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

உலகமே கணினி மற்றும் இண்டர்நெட் மயமாகியுள்ள தற்போதைய காலகட்டத்தில், இணையம் குறித்த குற்றங்களை தடுப்பதற்கான திறன் மிக அவசியம் என்பதையும், நமது காவல் துறையினர் பலவற்றில் திறமையானவர்களாக இருந்தாலும், சைபர் குற்றங்களை கண்டறிவதில் சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள், என்பதையும்  கச்சிதமாக இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

பேஸ்புக், ட்விட்டர் என்று சமூக வலைதளங்களில் லைக்குக்காகவும், ஃபாலோர்ஸ்க்காகவும் கண்டதையும் போட்டோ அல்லது வீடியோ எடுத்து போடுபவர்களை எச்சரிக்கும் விதத்தில் இப்படத்தை இயக்கியுள்ள இயக்குநர்கள் சங்கர் – சுரேஷ், நாட்டுக்கு தேவையான நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள். அதே சமயம், ஒரு திரைப்படமாக, இன்னும் பல வகையில் இப்படத்தின் திரைக்கதையையும், காட்சி அமைப்புகளையும், நடிகர்களின் நடிப்பையும் மேம்படுத்தியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இந்த ’இணையதளம்’ ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும். மரபின் மைந்தன் முத்தையாவின் பாடல்களை விட வசனம் இயல்பு.

நடிகை சுகன்யா சம்பந்தப்பட்டகாட்சிகள் எதிர்பாராத திருப்பம்.

மர்மமான கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு படத்தின் மீது ஆர்வத்தை தூண்டுவதை போல, இணையதளம், அதனை ஹாக் செய்ய முடியாத விஷயங்கள், ஹாக் செய்ய கூடிய வழிமுறைகள் போன்றவற்றை பேசும் இடம் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.