இந்தியாவில் எல்லா விருதுக்கும் விலை உண்டு : பத்திரிகையாளர் பரபரப்பு பேச்சு!

dcகலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் KISS மற்றும் கலிங்கா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி KIIT ஆகியவற்றின் நிறுவனர் டாக்டர் அசுயுதா சம்ந்தாவிற்கு, சென்னையைச் சேர்ந்த சமூகசேகவர் சுற்றுப்புறச்சூழலியலாளர் அப்துல் கனியின் யூத்திங் அமைப்பின் சார்பாக இந்தியாவின் பெருமை விருது Pride of India Award வழங்கப்பட்டது.

டெக்கான் கிரானிகல் பகவான் சிங் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பூம்புகார் கப்பல் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் ரத்னூ ஐ ஏ எஸ், காவலர் வீட்டுவசதி வாரியத்தலைவர் முகமது சகீல் அக்தர் ஐ பி எஸ் மற்றும் விஜி சந்தோஷம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வரவேற்புரை வழங்கிய அப்துல்கனி, “ டாக்டர் அச்யுதா சமந்தாவையும் அவரது நிறுவனங்களையும் பற்றி கேள்விப்பட்டு அங்கே சென்றிருந்தேன்… இந்த பிரபஞ்சத்தில் இப்படி ஒரு மனிதரை நாம் பார்க்க இயலாது…. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் தொடர்ந்து ஆறு முறை ஒரு கல்விக்கூடத்திற்குச் சென்றிருக்கிறார் என்றால் அது இவருடைய கூடங்கள்தாம்…

25 ஆயிரம் பழங்குடி மாணவர்களுக்கு தங்கும் இடம் உணவு ஆகியவற்றுடன் தரமான கல்வியும் வழங்கி வரும் இவருக்கு உலக நாடுகள் பல உயரிய விருதுகளை வழங்கி கெளரவித்திருக்கின்றன… இதுவரை 30 கெளரவ டாக்டர் பட்டங்களை வாங்கியிருக்கிறார்… இந்தியாவில் இவருக்கு எந்த  விதமான விருதுகளும் இவருக்குக் கொடுக்கப்படவில்லை… அவரை  நமது தமிழகத்திற்கு அழைத்துவந்து விருதுகொடுக்கவேண்டும் என்று முடிவு செய்தோம்… இந்தியாவின் பெருமை என்கிற விருதைத் தவிர வேறு என்ன பொருத்தமாக இருந்துவிடமுடியும்…” என்று பேசினார்.

முன்னிலை வகித்த பகவான் சிங் பேசும் போது, “ இந்தியாவில் விருதுகள் பெறுவது நேர்மையான மனிதர்களுக்குக் கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்… பத்தாயிரம் கொடுத்தால் உள்ளூரளவிலும் ஒரு லட்சம் கொடுத்தால் சர்வதேச அளவிலும் விருதுகள் கிடைத்துவிடும்….” என்றார்.

முகமது சகீல் அக்தர் ஐ பி எஸ் பேசும்போது, “ தலைவர்களை வெளியில் தேடாதீர்கள்… அதற்குப் பதிலாக நீங்கள் ஒவ்வொருவரும் தலைவராக மாறிவிடுங்கள் என்று அன்னைதெரசா சொன்னது போல, வறுமையைக் கல்வியால் துடைத்தெறிய புறப்பட்ட அச்யுதா, இன்று பல்லாயிரம் பழங்குடி மாணாக்கர்களுக்கு கல்விகொடுத்து அவர்களது வறுமையைப் போக்கியுள்ளார்..” என்று வாழ்த்தினார்.

ராஜேந்திரன் ரத்னூ ஐ ஏ எஸ் பேசும் போது, “ கலாமுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது… ஆனால், டாக்டர் அச்யுதா சமந்தாவிற்கும் எனக்கும் ஒரே பிறந்த நாள் (ஜனவரி 20) என்பதைத்தாண்டி வேறு எந்த தொடர்புகள் இல்லாத போதும்., அவரைப் பற்றி அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி… அவருடன் ஏதாவது ஒரு வகையில் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்… எங்களைப் போன்றவர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்கள் சேவையாற்றும் போதும் அவர்களது முழுமையான பொறுப்புகள் என்ன என்பதை புரிந்துகொள்ளாமலேயே இருந்துவிடுகிறார்கள்… கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் பணியாற்றியபோது அங்கிருக்கும் மலைவாழ் பழங்குடிகள் தங்களது உரிமைகளைக் கேட்டுப்பெறமுடியாதவர்களாகவே இருந்ததைப் பார்த்தேன்… என் பங்கிற்கு ஒரு சில மாணவர்களை தத்து எடுத்து படிக்க வைத்தேன்… அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் போது நல்ல மாணவர்களாக மாறிவிடுகிறார்கள்… அந்த வகையில் டாக்டர் அச்யுதா சமந்தாவின் பணி மிகவும் போற்றத்தக்கது..” என்றார்.

award-kskவி.ஜி. சந்தோஷம் பேசும் போது, “ இல்லாதவர்களிடம் இரக்கம் காட்டுவது கடவுளுக்கே கடன்கொடுப்பது போன்றது.. டாக்டர் அச்யுதா சமந்தா விருதுகளுக்கு அப்பாற்பட்டவர்… இருந்தாலும் இவரைப் போன்றவர்களுக்கு விருதுகள் கொடுக்கும் போது அவர்கள் மக்கள் மனதில் நீக்கமற நிறைந்துவிடுகிறார்கள்..” என்றார்.

அப்துல் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் தாவூத் பேசும் போது, “ உலகில் எண்பதுசதவிகிதம் மக்கள் இருவேளை மட்டுமே உண்கிறார்கள்… அவர்களுக்கு சுத்தமான குடி நீர் கிடைப்பதில்லை… எல்லா வசதிகளும் கிடைக்கும் அந்த இருபது சதவிகிதம் மக்கள் , அந்த எண்பது சதவிகிதம் மக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும்… அந்த வகையில் டாக்டர் அச்யுதா சமந்தா அளப்பரிய பணியாற்றி வருகிறார்..” என்றார்.

முத்தாய்ப்பாக பேசிய டாக்டர் அச்யுதா சமந்தா, “ கல்வியால் மட்டுமே வறுமையை அகற்றமுடியும் என்பதை எனது சிறுவயதிலேயே நான் உணர்ந்துகொண்டேன்… தொடர்ந்து படித்து வேலைக்குச் சென்றேன்… இன்று ஏதோ என்னால் முடிந்த சிறிய பணியை மற்றவர்களுக்குச் செய்து கொண்டிருக்கிறேன்… ஒரு சில நிமிடங்கள் மட்டுமே எங்களுக்கு நேரம் ஒதுக்கிய மோடி முதல் தலாய்லாமா வரை எங்களது  நிறுவனங்களின் வீடியோக்களைப் பார்த்துவிட்டு மணிக்கணக்கில் எங்களுடன் நேரம் செலவிட்டுக்கொண்டிருப்பார்கள்…. நான் என்று எதையும் சாதித்துவிடவில்லை… இறைவன் அருளால் எல்லாம் நடக்கிறது… நான் வெறும் தொடர்பாக (Medium)  மட்டுமே இருக்கிறேன்… எங்களுக்கு அமெரிக்காவிலிருந்தோ அல்லது வேறு எங்குமிருந்தோ நிதிகள் வரவில்லை… எனது சிறிய வயதிலும் பணத்திற்காகக் கஷ்டப்பட்டேன்… இன்னமும் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்…. யூ  திங்க் அமைப்பாளர் அப்துல் கனியின் விருதினை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்..” என்றார்.

முதலாவதாக வெளியேறிய 2500 பேர் உட்பட இதுவரை ஏழாயிரம் பழங்குடி மாணவர்கள் இவரது நிறுவனத்தில் படித்துவிட்டு இன்று பல நல்ல வேலைகளில் இருக்கின்றனர். பலர் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுகளில் இந்தியா சார்பாக பங்கேற்றிருக்கின்றனர்.

வெறும் 5000 ரூபாயுடன் வாடகை இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவரது நிறுவனங்கள் இன்று 450 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்து ஒடிசா மட்டுமல்லாமல் ஜார்கண்ட், சத்தீஸ்கர், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டுக்கும் கீழே உள்ள மாணவர்களுக்கு கல்வி வழங்கிக்கொண்டிருக்கிறது. இவரது நிறுவனத்திற்குள் கே ஜி முதல் பி ஜி அதாவது கிண்டர் கார்டன் முதல் போஸ்ட் கிராசுவேசன் வரை படித்துமுடித்து விட்டு , அதுவும் உணவு , உடை, உறையுள் ஆகியவற்றுடன் இலவசமாகப் படித்துவிட்டு வெளியே வரலாம்.

கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜியின் பங்குதாரர்களின் உதவியும் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் சம்பளத்தின் 3% மும் தான் இவருக்கு பேருதவியாக இருக்கிறது. இதைத்தவிர தனி நபர்கள் சிலரின் நன்கொடையையும் பெற்றுக்கொள்கிறார்கள்.

பழங்குடி மாணவர்களுக்கு கல்வி என்பதைத் தவிர, கலை, கலாச்சாரம், ஆன்மீகம் ஆகியவற்றிலும் ஈடுபாடுகொண்ட டாக்டர் அசுயுதா சமந்தா, எந்த ஒரு அடிப்படை வசதிகளுமற்ற தனது கிராமத்தை இன்று WIFI வசதிகளுடன் நகரங்களுக்குரிய அத்துனை வசதிகளையும் ஒருங்கே பெற்ற  கிராமமாக மாற்றியிருக்கிறார்.

ஒடிசாவில் , வேர் பதித்திருக்கும் இவரது KISS  மற்றும் KIIT  நிறுவனங்கள் விரைவில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கிளை பரப்ப இருப்பது ஏழை எளிய மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி.