இப்போதும் கோமாளியாகத்தான் பார்க்கப்படுகிறேன்: ‘துணிகரம்’ விழாவில் கஸ்தூரிராஜா பேச்சு..!

kasthuriraja1 பாலசுதன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘துணிகரம்’.

க்ரைம் த்ரில்லர் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது.

கதாநாயகனாக நடித்துள்ள வினோத் லோஹிதாசன் உட்பட முற்றிலும் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இயக்குநர் பாலசுதனும் கதைக்கு திருப்பமான முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்..

 

இந்தப்படம் சிறிய பட்ஜெட் படம் என்றாலும் இசைக்கு ஷான் கோகுல் மற்றும் பின்னணி இசைக்கு தனுஜ் மேனன் என இரண்டு இசையமைப்பளர்கள் பணியாற்றியுள்ளனர். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று மாலை பிரசாத் லேபில் நடைபெற்றது.. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கஸ்தூரிராஜா, பேரரசு, ஆர்.கே.வித்யாதரன் நடிகர்கள் போஸ் வெங்கட், விஜய் டிவி சீரியல் புகழ் அமித் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் (கில்ட்) ஜாக்குவார் தங்கம் ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

 

விழாவில் நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது, “மும்பையிலே ரோஹித் ஷெட்டின்னு ஒரு டைரக்டர் இருக்கிறார்.. அவர்தான் சும்மா ஜிம் பாடியெல்லாம் வச்சுக்கிட்டு படம் டைரக்ட் பண்ணுவாரு.. அவருக்கப்புறம் தமிழ் சினிமாவுல அப்படி ஒரு ஜிம் பாடி டைரக்டரா இந்த படத்தோட இயக்குநர் பாலசுதன் தெரியுறாரு.. இந்த குழுவினருக்கு ஒரே ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. வெற்றிக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி வந்தால், அதுவரை பொறுமையாக இருங்கள்.. நானும் அப்படி காத்திருந்து, இன்று கவண்’ படம் மூலம் அப்படி ஒரு வெற்றி அங்கீகாரத்தை பெற்று, அதன்பின் இப்பொது இந்த மேடையேறி பேசும்போது கிடைக்கும் சந்தோசமே புதிதாக இருக்கிறது” என கூறினார்..

thunigaram1விழாவில் பேசிய கஸ்தூரிராஜா, ”ஒரு நபர் இயக்குநராக மாறி புகழ்பெறுவதற்காக என்னனென்னவெல்லாம் இழக்கிறான்? துணிகரம் என டைட்டில் வைத்ததிலேயே  படக்குழுவினரின் துணிச்சல் தெரிகிறது… இந்த சினிமாவிற்கு வந்ததில் இருந்து இரண்டுமுறை நான் கோமாளியாக கண்ணுக்கு தெரிஞ்சிருக்கிறேன்.. இப்போ கூட அப்படித்தான் தெரிஞ்சுக்கிட்டிருக்கேன்.. முதல் தடவையா என்னோட படத்தை டைரக்ட் பண்ண தயாரிப்பாளர் தேடி அலைஞ்சபோது.. இரண்டாவது துள்ளுவதோ இளமை படத்தை இயக்கியபோது.. அப்போ தனுஷுக்கு ஹீரோ லுக் இல்லை.. அதனால் படம் எடுக்க பணம் கொடுத்த பைனான்சியர், ‘அப்பனும் மகனும் கேமராவ வச்சு விளையாடிட்டு இருக்காங்க’ன்னு விமர்சனம் பண்ணார். அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்துதான் இங்கே வந்துள்ளோம்… எனக்கு ராஜ்கிரண்னு ஒரு கடவுள் கிடைச்சார்.. இந்த உயரத்துக்கு வர முடிஞ்சது”. என்றார்..

 

மேலும் அவர் பேசும்போது, “இன்னைக்கு கொஞ்சம் சினிமா ஆரோக்கியமா இருக்கு.. ஒரு ஆடியோ ரிலீஸுக்கு டிஸ்ட்ரிபியூட்டர் வர்றதே ஆரோக்கியமான விஷயம் தான்.. சின்னப்படம் வந்தாலும் மூணு நாள் தான்.. சூப்பர்ஸ்டார் படமும் மூணு நாள்.. இன்னைக்கு உலகம் பூரா பேசப்படுற பாகுபலி கூட பத்து நாட்கள் தான்.. அதுனால இன்னைக்கு நிறைய படங்கள் வெளிவர வாய்ப்பு இருக்கு” என்றும் இன்றைய சினிமா சூழலை விவரித்தார்.

 

​​இயக்குநர் பேரரசு பேசும்போது, “உதவி இயக்குநராக இருந்து இயக்குநராவதற்காக, இந்த புகழை அடைவதற்காக இளமையெல்லாம் தொலைக்க வேண்டி இருந்தது.. தீபாவளி, பொங்கல், திருவிழா, நல்லது கெட்டது என எந்த விசேஷத்திற்கும் ஊருக்கு போனது இல்ல.. ஊருக்குப்போய் ரெண்டு நாள் தங்கினா, என்னப்பா இன்னும் டைரக்டர் ஆகலைன்னு கேட்க ஆரம்பிச்சுடுவாங்க.. அவங்க பையன் 20 வருஷமா சும்மா சுத்திக்கிட்டு இருப்பான்.. ஆனா அது அவங்களுக்கு பெரிசா தெரியாது.. சினிமாவுக்கு போனா உடனே சாதிக்கணும் அப்படிங்கிறது அவங்க நினைப்பு.. ஆனா சினிமாவுல வெற்றிக்காக நிறைய இழக்கணும்.. ரொம்பநாள் காத்திருக்கணும்..  திருப்பாச்சி ரிலீஸான அன்னைக்குதான் ஊர்ல பொங்கல் கொண்டாடுனேன்.. சிவகாசி வெளியான அந்த தீபாவளி தான் நான் ஊர்ல கொண்டாடுனேன்.” என்று படக்குழுவினருக்கு தனது வாழ்க்கை அனுபவத்தை பாடமாக எடுத்தார் பேரரசு..

வழக்கம்போல திருட்டு விசிடிக்கு எதிராக குரல் கொடுக்கும் ஜாக்குவார் தங்கம் இந்த மேடையிலும் தனது கருத்தை பதிவு செய்தார்.

படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான பாலசுதன் பேசும்போது, இது தனது பன்னிரண்டு வருட கனவு என்றார்.. படத்தின் ஹீரோவாக நடித்துள்ள வினோத் லோஹிதாசன், இந்தப்படத்தின் ஆடிசனுக்காக சென்றபோது சட்டையின் கை மடிப்பை எல்லாம் மடித்துவிட்டு கெத்தாக சென்றாராம்.. ஆனால் இயக்குநரின் பாடிபில்டிங் தோற்றத்தை பார்த்ததுமே, ஆட்டோமேட்டிக்காக சட்டையை இறக்கிவிட்டாராம்.. ஆனால் டைரக்டர் தான் ஹீரோவாக நடிப்பாரோ என சந்தேகப்பட்டவருக்கு, ஹீரோ சான்ஸ் கொடுத்து இன்ப அதிர்ச்சி அடைய வைத்துவிட்டாராம் இயக்குநர் பாலசுதன்.

 

சமீபத்தில் வெளியான ‘இலை’ படத்தை வெளியிட்ட ஆக்சன்-ரியாக்சன் நிறுவனம் தான் இந்தப்படத்தையும் வெளியிடுகிறது..​