‘ நையப்புடை’ படம் மீது நம்பிக்கை இல்லை நிறுத்திவிடுங்கள்: தாணுவிடம் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகரன்

DSC_5033தான் நடிக்கும் ‘ நையப்புடை’ படம் மீது  தனக்கு நம்பிக்கை இல்லை   எனவே நிறுத்திவிடுங்கள் என்று  தாணுவிடம்   எஸ்.ஏ.சந்திரசேகரன் சொன்னதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.இது பற்றிய விவரம் வருமாறு:

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் ‘ நையப்புடை’.இப்படத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் முக்கிய நாயகனாக  நடிக்க அவருடன் பா.விஜய்யும் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா  நடைபெற்றது. முதலில் திருமதி ஷோபா சந்திரசேகரன் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். நடிகர் ஆர்யா டீஸரை வெளியிட்டார்.

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து ‘நையப்புடை’ படத்தின் அனுபவம் பற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும் போது ” எனக்கு உழைப்பு தவிர வேறு எதுவும் தெரியாது. யாரையாவது நாம் விரும்பினால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள். நான் 5 ஆண்டுகள் காதலித்து பிறகு திருமணம் செய்து கொண்டவன். இந்தி படப்பிடிப்புக்கு  மும்பை போகும் போதெல்லாம் பைவ் ஸ்டார் ஓட்டலில்தான் தங்கியிருப்பேன்.  ஸ்டார் ஓட்டலில் நாம் சமைக்க அனுமதி இல்லை. எனவே பாத் ரூமில் உள்ள ப்ளக் பாயிண்டில் குக்கரை வைத்து என் மனைவி சமைத்துக் கொடுப்பார்.  என் மனைவி அவ்வளவு அன்பானவர்.யாரையாவது நாம் விரும்பினால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள்.நாம் விட்டாலும் அவர்கள் நம்மை விடமாட்டார்கள்.

உண்மையாகக் காதலித்தால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள். இப்போதெல்லாம் உண்மையாகக் காதலிப்பவர்கள் இருப்பதில்லை. மனைவியைப் போலவே  நான் சினிமாவையும்  நிஜமாகவே காதலிக்கிறேன். என்றும் காதலுக்கு தனி சக்தி உண்டு. காதலித்தால் ஒரு சக்தி  வரும்.அதனால்தான் இனி சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் படத்தில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வருகிறது.

எனக்கு உழைக்க மட்டுமே தெரியும். என் தயாரிப்பாளர்கள் சொல்வார்கள்’ இவன் மாடுமாதிரி உழைக்கிறானே’ என்பார்கள். நான் பெரிய அறிவாளி இல்லை. எனக்கு 2 வரி கவிதை கூட எழுதத் தெரியாது. 4வரி வசனம்கூட எழுதத் தெரியாது. இலக்கியம் படித்ததில்லை. இருந்தாலும் உழைப்பேன்.நான்அறிவாளி இல்லை உழைப்பாளி.

இப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள். கதையில்லாமல் படம் எடுக்கிறார்கள்.  அதுவும் ஓடுகிறது. எனக்கு 73 வயது ஆகிறது. இந்த படத்தின் இயக்குநர் விஜயகிரணுக்கு 19 வயது தான் ஆகிறது.. இந்தப் பையன் இயக்குநர் என்று  படம் ஆரம்பித்ததும் 2 நாளில் ஓடிவிடலாம் என்று நினைத்தேன். ஏனென்றால் அப்போது இயக்குநர்மீது,படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை.தாணுவிடம் இது சரிப்பட்டு வராது படத்தை நிறுத்தி விடலாம் என்றேன். தாணுதான்  என்னைச் சமாதானப் படுத்தினார் 4 வதுநாள் எடுத்ததை எடிட் செய்து போட்டுக் காட்டியதைப் பார்த்தவுடன்தான்  நம்பிக்கை வந்தது. இன்றைய இளைஞர்கள் அவர்கள் வேறு மாதிரி இருக்கிறார்கள் .அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

பா.விஜய்யை என் இன்னொரு மகனாகவே பார்க்கிறேன். படத்தின் கதை எனக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தாலும் அவர், பெருந்தன்மையுடன் ‘ஜெயிக்கிற படத்தில் நான் இருக்கிறேன் ‘ என்றார்..  இப்போது துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷுடன் நடிக்கிறேன் தனுஷ் நடிப்பது தெரியாமல் நடிக்கிறார். அவரிடம் நிறைய கற்றுக் கொள்கிறேன்.இன்றைய இளைஞர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே  இருக்கிறது. ‘ என்றார்.முன்னதாக லிடியோன் நாதஸ்வரம் என்கிற 9 வயது சிறுவன் டிரம், பியானோ வாசித்துக் காட்டினான். அதைப் ரசித்து விட்டுப் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன் ,”இவனுக்கு முன்பாக நாம் எல்லாம் ஒன்று மில்லை.” என்று கூறிப் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ்.தாணு ,இயக்குநர்கள் ஏ. வெங்கடேஷ், பொன்ராம்,. ‘நையப்புடை’படத்தின் இயக்குநர் விஜய கிரண், ஒளிப்பதிவாளர் ஜீவன், கவிஞர் பா.விஜய்,  நடிகர்கள்ஆர்யா எம்.எஸ்.பாஸ்கர்,  இசையமைப்பாளர் தாஜ்நூர், தயாரிப்பாளர் பி.டி .செல்வகுமார், காஸ்மோ சிவா,எடிட்டர் டான்பாஸ்கோ   ஆகியோரும் பேசினார்கள்.