இப்போதெல்லாம் வில்லனை யாரும் திட்டுவதில்லை! ‘பட்ற’ வில்லன் சாம் பால்

sam-paulஇப்போது சினிமாவுக்கு படித்தவர்களின் வரவு அதிகமாகி வருகிறது. அண்மையில் வெளியாகி யுள்ள ‘பட்ற’ படத்தில் கொலை, கடத்தல், மிரட்டல் ,கற்பழிப்பு என்று அத்தனை கொடுமைகளையும் செய்கிற வில்லனாக வந்து அதிர வைத்தவர் சாம்பால். இவர் பொறியியல்பட்டப் படிப்பும் பட்டமேல் படிப்பும் படித்தவர்.வழக்கறிஞர் பட்டமும் பெற்றவர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுபவர். சொந்தமாக கல்வி நிலையங்களும் நடத்தி வருபவர்.
இப்படிப்பட்ட சாம்பாலிடம் ‘பட்ற’ பட அனுபவம் பற்றி கேட்டோம்
 
‘பட்ற’ படத்தில் வில்லனாக நடித்தது எப்படி?

“எங்கள் கல்லூரிக்கு டைரக்டர்ஜெயந்தன்  படப்பிடிப்புக்கு லொக்கேஷன் பார்க்கத்தான் வந்தார். வந்தவர் ,தன் படத்தில் சிறிய வேடம் இருக்கிறது என்று சாதாரணமாகத்தான் என்னிடம்  சொன்னார். ஏதோ சிறு வாய்ப்பு என்று நினைத்தேன். படத்தில் நடிக்கும் வரை என் பாத்திரம் பற்றி முழுமையாகத் தெரியாது. முதல்நாள் நடித்தேன் பதற்றமாகவே இருந்தது. போகப் போக தைரியம் வந்தது. நானாக எதுவும் செய்ய வில்லை. டைரக்டர் ஜெயந்தன் சொன்னபடி நடித்தேன். ஆனால் மறுநாள் யோசிக்கும் போது முதல்நாள் இன்னமும் நன்றாகச் செய்திருக்கலாமோ என்கிற அளவுக்கு ஆர்வமும் புரிதலும் வந்து விட்டது ”

ஏற்கெனவே உங்களுக்கு  சினிமா ஆர்வம் இருந்ததா?

”சினிமா பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.நான் ஒரு ரசிகன். நிறைய படங்கள் பார்ப்பேன். அதிலும் ஆங்கிலப் படங்கள்தான் அதிகம். கேங்ஸ்டர் படங்கள் உண்மைக்கதை அடிப்படையிலான படங்களை விரும்பிப் பார்ப்பேன். சிலவற்றை பார்க்கும் போது இதைத் தமிழில் எடுத்தால் எப்படி இருக்கும்  இதில்யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பது உண்டு”

உங்கள் கட்டான உடற்கட்டின் ரகசியம்?

”நான் ஒரு பாக்சர் .அதற்குக் காரணம் என் .அப்பா ஸ்டாலின்பால் அவர்கள் .அவர் ஒரு பாக்சர். அவரைப் போல எங்களையும் ஆக்க நினைத்தார்.எனக்கு ஒரு தம்பி உண்டு. நாங்கள் காலை 6 மணிக்கே எழுந்து உடற்பயிற்சி, எடை தூக்கல் ,பாக்சிங் என்று 2மணி நேரம் கடினமாக பயிற்சி செய்ய வேண்டும் அதன் பிறகுதான் கல்லூரிக்கே செல்ல வேண்டும். மாலை இதே கடினமான பயிற்சி மறுபடியும் தொடரும் . இப்படி பயிற்சி எல்லாம் முடிந்து இரவு10 மணி ஆனதும் சோர்வில் அப்படியே தூங்கி விடுவோம்.இப்படி பத்தாண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறேன்.60 கிலோ இருந்த நான் 60-லிருந்து 109கிலோ வரை என் எடையைக் கூட்டுமளவுக்கு தீவிரமாகப் பயிற்சி செய்தேன். குடி, புகை என எந்த கெட்ட பழக்கமும் கெட்ட எண்ணமும் எங்களைத் தீண்ட விடவில்லை. அந்த அளவுக்கு கட்டுப் பாட்டோடு வளர்த்தார். வளர்ந்தோம்.ராணுவக் கட்டுப் பாட்டோடு இருந்தோம்.அப்பா ஒரு மேஜர் போல இருந்தார்.

பாஸ்கட் பால் எனப்படும் கூடைப்பந்து விளையாட்டில் தேசிய அளவில் வெற்றி பெற்றவன் நான். பாடி பில்டிங் பிரிவில் 1996 ஹெரிடேஜ் விருது 1999-ல்  சென்னை பல்கலைக்கழக ஆணழகன், தென்னிந்திய பல்கலைக்கழகங்களின் ஆணழகன் பட்டங்கள் வென்றேன். 2000ல் டைஸ் விருது கிடைத்தது. இப்படி பாடிபில்டர் பிரிவில் நிறைய வாங்கியிருக்கிறேன். ”

உடல் தோற்றம் படத்துக்கு உதவியதா?

” என் உருவம் தோற்றத்தைப் பார்த்து விட்டுத்தான் படவாய்ப்பே வந்தது .முதலில் டைரக்டர் என் பாத்திரம் பற்றி  எதுவுமே விளக்கவில்லை.படப்பிடிப்பு வந்தால் போதும் அந்த பாத்திரம் புரியும் என்று கூறினார். அப்படித்தான் நடித்தேன்.”

sampaul2சினிமா பற்றிய கருத்து நடித்தபிறகு எப்படி இருந்தது?

”வெளியிலிருந்து சினிமா பற்றி வெகு சாதாரணமாக அலட்சியமாக கருத்து சொல்லி விடுகிறோம்.  இங்கு எல்லாரும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று உள்ளே வந்து பார்த்தால்தான் புரிகிறது. நடித்த பிறகு சினிமா பற்றிய என் பார்வையே மாறி விட்டது.”

படித்த மரியாதையான மனிதராக இருந்து கொண்டு  இவ்வளவு கொடிய வில்லனாக நடித்தது பற்றி..?

” இப்போது வில்லனை யாரும் திட்டுவதில்லை. ரசிக்கவே செய்கிறார்கள்.படம் வெளியான திரையரங்கம் போன போது அவனா நீ என்று என்னைப் பார்த்து சிரித்தார்களே தவிரயாரும் முறைக்கவில்லை. வீட்டில் என் தங்கை மட்டுமல்ல.என் கல்லூரியிலும் மாணவர்கள் மாணவிகளும் ஆரவாரம் செய்து ரசித்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது சினிமா நடிகனை நடிகனாகவே பார்க்கிறார்கள்.”

மறக்க முடியாத பாராட்டு..?

“பலபேர் பலவிதமாகப் பாராட்டினார்கள். அதில் ‘எல்லாரும் என் தம்பிங்கள் தான்டா ‘என்று நான் பேசும் வசனத்தை வைத்து ஜாலியாக ஓட்டுகிறார்கள். அதற்கு நல்ல வரவேற்பு.அந்த வசனம்சமூக வலைதளங்களில் பெரிய ஹிட்டடித்துள்ளது.பாக்யராஜ் சார் படம் பார்த்துவிட்டு பாராட்டியது மட்டுமல்ல நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று வாழ்த்தினார். இதை மறக்க முடியாது..”என்கிற சாம் பாலை அடுத்தடுத்த வாய்ப்புகள் கதவைத்தட்ட ஆரம்பித்துள்ளன.இவரது பக்கத்து வீட்டுக்காரரான இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் இணைந்து எடிட்டர் ஆண்டனி இயக்கத்தில்’ஷட்டர்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறார்.