இரண்டு நாள் கால்ஷீட்டுக்காக இரண்டரை ஆண்டுகள் இழுத்தடித்த ஹீரோ : படவிழாவில் இயக்குநர் குமுறல்!

saikoஇரண்டு நாள் கால்ஷீட்டுக்காக இரண்டரை ஆண்டுகள் இழுத்தடித்த கதாநாயக நடிகர் பற்றி ஒரு சினிமாவிழாவில் இயக்குநர் பேரரசு பரபரப்பாகப் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:

புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் ‘சைவ கோமாளி’ இப்படத்தை சுரேஷ் சீதாராம் இயக்கியுள்ளார். கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா பிரசாத் லேப் திரையரங்கில் நேற்று நடைபெற்றது.

dharani1இயக்குநர் தரணி பாடல்களை வெளியிட்டார். பேரரசு பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேரரசு பேசும் போது தன் ஆரம்பகால மலரும் நினைவுகளில் மூழ்கினார்.

” இப்படத்தை இயக்கும் சுரேஷ் சீதாராம் எங்கள் இயக்குநர் தரணிசாரின் சீடர்தான். நானும் அவரிடம் உதவி இயக்குநராக இருந்தவன்தான் .

அவரிடமிருந்து நான்,கரு.பழனியப்பன்,  ‘மௌனகுரு’ சாந்தகுமார், ‘வேட்டைக்காரன்’ பாபுசிவன் ,’பைரவா’ இயக்குநர் பாதன்  என்று பலபேர் இயக்குநராகியிருக்கிறோம். எங்கள் குருநாதர் நல்ல மனசுக்காரர்.தன் உதவியாளர்கள் உயர வேண்டும் என்று விரும்புகிறவர்.
அவர்கள் வளர வேண்டும்  என்று எப்போதும்  நினைப்பவர்,ஆசீர்வதிப்பவர்.

என் நண்பர் ஒருவர் பத்து ஆண்டுகள்  இயக்குநர் ஒருவரிடம் உதவியாளராக இருந்தார். சிரமப்பட்டு ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிப் படம் தொடங்க வேண்டிய நேரம் வந்தது. அப்போது இடையில் புகுந்து அவருடைய குருவான இயக்குநரே ‘அவனுக்கு வேலை தெரியாது ‘ என்று கூறிப் படவாய்ப்பைக்  கெடுத்துவிட்டார். படம் நின்று விட்டது .இப்படிப் பட்டவர்கள்தான் சினிமாவில் அதிகம்.  யாரோ ஒருவர்  இயக்குநரானால் பாராட்டுகிற அவர்கள், தன் உதவியாளர் இயக்குநரானால் பொறுக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.இப்படிப் பட்டவர்கள் மத்தியில் எங்கள் குருநாதர் நல்ல மனசுக்காரர்.

நான் விஜய் சாரிடம் ‘திருப்பாச்சி’ கதை சொல்லி சம்மதம் பெற்று இருந்த போது, விஜய் சார் என்னைப் பற்றிக் கேட்டபோது ‘நல்ல பையன் விட்டு விடாதீர்கள்’ என்று நல்லமாதிரி கூறியவர் எங்கள் இயக்குநர். அப்படி ஊக்கப்படுத்தும் மனசு, உயர்த்தி விடும் மனசு எல்லாருக்கும் வந்து விடாது. அன்றைக்கு அவர் ஏதாவது சொல்லியிருந்தால் நான் அப்போதே ஊருக்குப் போயிருப்பேன்.

இன்றைக்கு அவர் சாதாரணமாக எல்லா ஊருக்கும் விமானத்தில் பறக்கிறார்.ஆனால்  அவர் அப்போது  தன் முதல் படத்துக்காக , இயக்குநராக அறிமுகமாகப் பட்ட கஷ்டங்கள், சந்தித்த  போராட்டங்கள்,கடந்து வந்த அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல .அவர் எடுத்த முதல் படம் ‘எதிரும் புதிரும்’ ஓராண்டு இரண்டாண்டல்ல .அந்தப் படம் ஐந்து ஆண்டுகள் எடுக்கப் பட்ட படம்.

மம்முட்டி, நெப்போலியன் நடித்த படம் அது.  படம் முடிக்க ஐந்து  நாள் படப்பிடிப்புதான்  பாக்கியிருந்தது. மம்முட்டிசார் ஐந்து  நாள் கால்ஷீட் தந்தால் படத்தை முடித்து விடலாம்  என்கிற நிலை.அவரிடம் ஐந்து  நாள் கால்ஷீட் கேட்டு கேரளாவுக்கு இரண்டரை ஆண்டுகள் அலைந்தோம்.

அப்போது வசதியில்லாததால் ரயிலில் ‘அன் ரிசர்வ்டு’ பெட்டியில்தான் போவோம். ஒருமுறை உட்காரக்கூட இடமில்லை. நின்று கொண்டே போனோம் ஒரு இடம் கிடைத்தால் நான் எங்கள் இயக்குநரை  உட்காரச் சொன்னால் அவர் உட்காரவே மாட்டார். நான் நிற்பதால் அவர் உட்கார மாட்டார். இப்படி விடாமல்  போய் போராடினோம். அவரும்  பலமுறை இழுத்தடித்து கடைசியில்  என்னிடம் தேதியே இல்லை  இரண்டு நாள்தான் கொடுப்பேன் அதற்குள் முடித்துக்கொள்ளுங்கள் என்று இரண்டே நாட்கள்தான் கால்ஷீட் கொடுத்தார்.  இப்படி  அந்த இரண்டு நாள் கால்ஷீட்டுக்காக   கேரளாவுக்கு இரண்டரை ஆண்டுகள் அலைந்தோம்.  அந்த இரண்டு நாள் படப்பிடிப்பில் நடிப்பவர்களுக்கெல்லாம் அவசரம் அவசரமாக உடைகள் மாற்றி அவ்வளவு  சிரமப்பட்டு மீதமிருந்த காட்சிகளை எடுத்தோம்.

அப்படி அவசரம் அவசரமாக உடைகள் மாற்றி துண்டு துண்டாக காட்சிகள் எடுத்த பிலிம் ரோலை  எடுத்து வந்து எடிட்டரிடம் கொடுத்தால்  இதோ வருகிறேன் என்று  வெளியே போனவர், ஆள் திரும்பி வரவேயில்லை .வெளியே போய் எங்களைப் பற்றி தயாரிப்பாளரிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். வெட்டி ஒட்டுவதுதான் அவர் வேலை ஆனால் இவர்களுக்கு படம் எடுக்கத் தெரியவில்லை என்று போட்டுக் கொடுத்துவிட்டார். படம் முடிகிற நிலையில் இப்படி ஒரு பிரச்சினை. இப்படி எவ்வளவோ போராட்டங்களுக்குப் பிறகுதான் தரணிசாரின் முதல்படம் வந்தது. அந்தப்படத்துக்கு மாநில அரசின் சிறந்த படம் விருது கிடைத்தது. வெற்றியும் பெற்றது. ” இவ்வாறு இயக்குநர் பேரரசு பேசினார்.

saiva-komali-movie-latest-stills-23விழாவில் இயக்குநர்கள்  தரணி,  பாபுசிவன், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர்கள் பி.எல். தேனப்பன். கதிரேசன், பாடகர் கானாபாலா,எஸ.எம்.எஸ்.மூவீஸ் ( Story Makes Success என்பது அதன் விரிவாக்கம் ) சார்பில் தயாரித்துள்ள தயாரிப்பாளர்கள் ஏ.சி.சுரேஷ் மகேந்திரன், சாய்மகேந்திரன்,’சைவ கோமாளி’ இயக்குநர் சுரேஷ் சீதாராம், நாயக நடிகர்கள் ரஞ்சித் ராஜ்குமார்,நாயகிகள் வினிதா,ரெஹானா, ஒளிப்பதிவாளர் பாலா, இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா ,நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்,, நடன இயக்குநர் தம்பி சிவா, ஸ்டண்ட் இயக்குநர் சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.