‘இறைவி’ விமர்சனம்

iraivi21பெண்கள் வணங்கத்தக்கவர்கள் ,ஆண் தெய்வம் இறைவனாக போற்றப்படுவதைப்போல பெண் தெய்வமும் இறைவியாக போற்றப்படவேண்டும் என்கிற நோக்கோடு கதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர்.

சரி ‘இறைவி’ படத்தின் கதை என்ன? பல தலைமுறையாகச் சிற்பத் தொழில் செய்து வருகிறது ராதாரவி குடும்பம் .அவருக்கு  எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா என இரு மகன்கள். பாபி சிம்ஹா கல்லூரியில் படித்து வருகிறார். மூத்தவரான எஸ்.ஜே.சூர்யா சினிமா இயக்குநர். ஒரு படத்தை இயக்கி விட்டு, தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,  படம்  வெளியாகாமல் இருக்கிறது.

இதனால் விரக்தியில் எப்போதும் மது குடித்துக் கொண்டே இருக்கிறார். குடி அடிமையாகிவிட்ட அவரை நினைத்து அவரது மனைவி கமாலினி முகர்ஜி மிகவும் வருந்துகிறார்.

மறுபக்கம் இவர்கள் குடும்பத்துடன் வளர்ந்த விஜய் சேதுபதி, கணவனை இழந்த பூஜா மீது காதல் கொள்கிறார். ஆனால் பூஜாவோ, விஜய் சேதுபதியை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதனால் விஜய் சேதுபதி அஞ்சலியைத்  திருமணம் செய்து கொள்கிறார். அஞ்சலியுடன் நெருக்கமாக வாழ்ந்தாலும் பூஜாவின் நினைவாகவே இருக்கிறார்.

ஒரு கட்டத்தில்  எஸ்.ஜே.சூர்யாவிற்கும், தயாரிப்பாளருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது.  விஜய் சேதுபதி இடையில்  புகுந்து தயாரிப்பாளரை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போகிறார்.  அஞ்சலிக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் கணவன் அருகில் இல்லாத குறை அஞ்சலியை வாட்டுகிறது.

எஸ்.ஜே.சூர்யாவின் போக்கில் மாற்றம் ஏற்படாததால் அவரது மனைவி கமாலினி முகர்ஜி, அவரை விவாகரத்து செய்ய நினைக்கிறார்.

இதுபோன்ற இறுக்கமான சூழ்நிலையில் , எப்படியாவது  படத்தை வெளியிட அவர்கள் குடும்பம் முயற்சி செய்து வருகிறது.  பணத்துக்காக ‘இறைவி’ அதாவது பெண் தெய்வத்தின்  சிலையைக் கடத்துவதற்குத் துணை போவதாக முடிவெடுக்கப்படுகிறது. அதன் பிறகு விஜய் சேதுபதி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் குடும்பத்தில் ஏற்படும் அதிரடி திருப்பங்களே படத்தின் மீதிக்கதை.

எஸ்.ஜே.சூர்யா  முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் நடிப்பில் பல படி மேலேறி உயரே சென்றுள்ளார்.குடிஅடிமை பாத்திரத்தை ஏற்றிருந்தாலும், இறுதிக் காட்சியில் கண்களை குளமாக்குகிறார்.

தாடி, கண்ணாடியுடன் முதிர்ந்த இறுக்கமான தோற்றத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கே உரிய பாணியில் யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் தான் செய்த தவறை நினைத்தும் மனைவியை நினைத்தும் வருந்தும் காட்சியில்  நுணுக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பாபி சிம்ஹா கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். வில்லத்தனம் கலந்து பூசிய பாத்திரம்.

முகமெல்லாம் வீங்கி  ஒப்பனை இல்லாமல் ஒரு ஏழ்மையான குடும்ப பெண்ணாக   நடித்து ரசிகர்களை கவர்கிறார் அஞ்சலி.  அதேபோல தன் கணவரை நினைத்து வருந்தும் காட்சியில் கமாலினி முகர்ஜி ரசிகர்களின் அனுதாபத்தை அள்ளுகிறார். மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று துணிச்சலுடன் நடித்திருக்கிறார் பூஜா திவாரியா.

வடிவுகரசி பாத்திரம்  நாடகம் போன்ற செண்டிமெண்ட் பேத்தல். மற்ற கதாபாத்திரங்களில் வரும் ராதாரவி, , கருணாகரன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

குடும்பத்தைப் பற்றி சிந்திக்காத ஆண்களால், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.  படத்தில் உள்ள குறை கதையை காட்சி, காட்சியாக ரசிக்க முடிகிறது .ஆனால்,முழுப்படமாக நிறைவைத் தரவில்லை.இறைவி என்று பெயர் வைத்துவிட்டு யார் கோணத்தில் கதை சொல்லப்பட்டுள்ளது என்கிற குழப்பம் நிலவுகிறது.படத்தில் வரும் தயாரிப்பாளரை இவ்வளவு கேவலமாகத்தான் சித்தரிக்க வேண்டுமா? அந்த சித்தரிப்பு கதைக்கு உதவவில்லையே?

ஆண்கள் எல்லாரும் ஆணாதிக்கச்சிந்தனையோடு துணிவாக தவறு செய்கிறார்கள்  என்கிறவர், படத்தில் வரும்  பல பெண்களையும் படிதாண்டுபவர்களாகவே காட்டியுள்ளாரே  அதைத்தான் விடுதலை என்கிறாரா? குழப்புகிறாரே. சில இழுவைகளைத் தவிர்த்து படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை யையும் கூட பேசப்படுமளவிற்கு கொடுத்திருக்கிறார். சிவகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். குறிப்பாக மழை காட்சிகளை சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘இறைவி’ சொல்ல நினைத்ததை சொல்ல மறந்த கதை.