ஈழப் போரின் வலிகளைச் சொன்ன பரதநாட்டிய நிகழ்ச்சி!

பொதுவாக கலையை கேளிக்கையாகவும் கொண்டாட்டமாகவும் பார்க்கிறார்கள். கலை என்பது மக்களுக்கானது. என்பதை உணராமல் கலை என்பது வெறும் பொழுதுபோக்கு என்பவர் பலர். அவர்கள் நடுவே கலை என்பது மக்களின் போராட்டத்தை வெளிப்படுத்தும் வடிவம் என்பவர் சிலர்.

இப்படிப்பட்ட சூழலில் ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியிலும் இலங்கைப் போரின் வலிகளை வெளிப்படுத்த முடியும் என்பதற்கு உதாரணமாக இருந்தது ‘ சுமேதா’ நாட்டிய நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழரான பரராஜசிங்கம் அவர்களின் மகள் ஸ்வேதா பரராஜசிங்கம் ஆடிய நடனம் காண்பவரைக் கலங்க வைக்கும்படி அமைந்திருந்தது.

கனடாநாட்டிலிருந்து டொரொண்டோ நகரிலிருந்து இங்கு வந்து பரதநாட்டியப்பயிற்சி பெற்று இந்த நிகழ்ச்சியில் ஆடினாலும், தன் ஈழ மண்ணின் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் ஒரு நடனம் ஆடினார் .
‘போய் வா மகனே’ என்று தொடங்கும் அந்தப் பாடலுக்கு ஸ்வேதா பரராஜசிங்கம் நடனம் ஆடிய விதமும் பாவம் காட்டிய பாங்கும் பார்ப்பவரைக் கலங்க வைத்தது. இதை நடன ஆசிரியர் மதுரை ஆர். முரளிதரன் அழகாக அமைத்திருந்தார்.

நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு இயக்குநர், நடிகர் தியாகராஜன் பேசும்போது

’சுவேதா நடனத்தைப் பார்த்து கண் கலங்கி விட்டேன். அற்புதமான நடனம் .இன்னும் மென்மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என் மனதார வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தினார்…

நிகழ்ச்சிக்கு பத்மபூஷன்
திரு டி .எச். விக்கு விநாயக் ராம் தலைமையேற்றார். சிறப்பு விருந்தினர்களாக பத்மஸ்ரீ பேராசிரியை திருமதி சுதாராணி ரகுபதி , கலைமாமணி திருமதி அனிதா ரத்னம் , பத்மஸ்ரீ
திரு ஹரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர் .

நிகழ்ச்சியில் திஸ்ர ஜதி அடா தாளம் அமைப்பில் டொரொண்டோ , கனடா குமாரி ஸ்வேதா பரராஜசிங்கம் நாட்டியம் ஆடினார்..

விழாவுக்கான வாழ்த்துரையில் சுதாராணி ரகுபதி பேசும்போது ,

“இங்கே விக்கு விநாயக் ராம், ஹரித்துவாரமங்கலம் பழனிவேல், போன்ற பெரியவர்கள் இருக்கிறார்கள்.அனிதாரத்னம் போன்ற அனுபவசாலிகள் இருக்கிறார்கள். நான் ஒரு நடனக் கலைஞராக பேசுகிறேன் .இதைப் பார்க்கும் போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த புதிய முயற்சியை மேற்கொண்ட மதுரை முரளிதரனுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

ஆடிய குழந்தைகளைப் பார்க்கும் போது எதைப் பார்ப்பது எதை விடுவது என்று திக்கு முக்காடிப்போனேன். நடனத்துக்கு அழகு கண்ணசைவில் என்பார்கள் .ஆனால் இங்கே கை, கால் அசைவுகளைப் பார்ப்பதால் எதைச் சொல்வது என்று திணறுகிறேன்.

நடனம் என்பது ஜியாமெட்ரிக்கல் போன்றது. அதில் சதுரம் ,செவ்வகம் முக்கோணம், வட்டம் எல்லாமும் இருக்கும். அதை இவர்களது நடனத்தில் பார்த்தேன் “.என்றார்.

நிகழ்ச்சியில் ஹரித்துவாரமங்கலம் ஏ கே பழனிவேல் பேசும்போது,

“நடன நிகழ்ச்சிகளை அனுபவித்துத்தான் பார்ப்பார்கள்.அனுபவிப்பது என்பது ஒரு வகை. ஆச்சரியப்படுவது என்பது வேறு ஒரு வகை.
இங்கே அனுபவித்ததுடன் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன் . இது ஆச்சரிய நடன நிகழ்ச்சி என்பேன்.இந்த புதுமையான ஸ்டைலை முரளிதரன் சிரமப்பட்டு உருவாக்கி இருக்கிறார். நான் 1980-ல் முதன்முதலாக நடனத்திற்கு வாசித்தேன்.அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நான் டீனாக இருந்தபோது இந்த முரளிதரன் திறமையை அறிந்து கச்சேரி செய்ய வைத்தேன். இவர் மகா மேதையாகத் தெரிகிறார்.

தாளத்தில் மூழ்கி எத்தனை விஷயம் செய்துள்ளார். புதுமையாக தாளத்துடன் நடனம் அமைப்பது சிரமம். செய்ய வைப்பது மிகவும் சிரமம். அதைச் செய்து காட்டியுள்ளார். நல்வாழ்த்துக்கள்..” என்றார்.

பத்மபூஷன் விக்கு விநாயக்ராம் பேசும்போது,

” நடனம் பற்றி எனக்குத் தெரியாது. இது தாளம் சம்பந்தப்பட்டது என்பதால் தான் நான் வந்தேன். இது புதுமையான முயற்சி. இதில் பிரமாணக்கணக்குகள் சரியாக இருந்தன .இப்படி அமைப்பது சிரமம். ஆனாலும் இதை அழகாக அமைத்திருந்தார். இந்த சிரமத்தை அழகாக செய்திருக்கிறார்.”என்றார் .

நடனக் கலைஞர் அனிதா ரத்னம் பேசும்போது,

“முரளிதரன் தனியான பாதையில் பயணம் செய்கிறார்.இந்தப் புதுமை முயற்சி அற்புதமான விஷயம் .முரளிதரன் இதுபற்றி 24 மணி நேரமும் சிந்தித்துக் கொண்டு இருப்பது போல் தோன்றுகிறது . ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா என எங்கு போனாலும் அவர் பெயர் பிரபலமாக இருக்கிறது.இந்த தாளத்தின் அனைத்து சூட்சுமங்களையும் துப்பறிந்து ஆய்வு செய்து கண்டுபிடித்து பயன்படுத்தியிருக்கிறார்.

இதைக் கற்றுக் கொடுப்பது மிகவும் சிரமம். இங்கே ஆடிய மாணவிகளைப் பார்த்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் ,நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.” என்றார்.

மதுரை ஆர்.முரளிதரன் பேசும் போது,
” நான் மரபை விட்டு விலகவில்லை. இந்த மார்க்கம்,தாளம் , லயம் எல்லாமே நமக்கு முன்னே பெரியவர்கள் உருவாக்கியவை தான்.அந்தப் பாதையில்தான் நான் பயணம் செய்கிறேன் .

நடனத்தில் பாவத்திற்குக் கொடுக்கிற கவனம் தாளத்துக்குக் கொடுப்பதில்லை என்பது என் கருத்து.

தாளம், லயம் எல்லாமே தவம், தியானம் போன்றது. இதில் கவனம் முக்கியம் .நான் இதை இந்த மாணவர்களுக்குப் புரியவைக்க நான் படாதபாடு பட்டு கற்பித்தேன். ஆனால் அதில் வெற்றி அடையும்போது அடைகிற மகிழ்ச்சிக்கு அளவில்லை.

இது போல மார்க்கங்களைப் பயன்படுத்தி இருப்பது உலகில் எங்கும் இல்லை என்றே சொல்ல வேண்டும். 19 மார்க்கங்களை முடித்து விட்டேன். இந்த ‘சுமேதா’ நிகழ்வு நாளை முடிக்கும் போது 23 ..மார்க்கங்களையும் முடித்து விடுவேன்.” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர், நடிகர் தியாகராஜன், இயக்குநர் ஏ. வெங்கடேசன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, பத்திரிகையாளர் மக்கள்குரல் ராம்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.