‘உப்பு கருவாடு’ விமர்சனம்

IMG_6000சினிமாத்தொழில் சார்ந்த பின்னணியில் ஏராளமான படங்கள் உருவாகியுள்ளன. அவை பெரும்பாலும் தோல்வியையே அடைந்துள்ளன. அவற்றில் சேராமல் வெற்றி வழியில் கதை சொல்லியிருக்கும் படம் ‘உப்பு கருவாடு’ எனலாம்.

சினிமாவில் அரதப் பழசான அம்சங்கள்தான் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப் படுகின்றன.  மீன் கெட்டு நாறிப் போனாலும் காயவைத்து உப்புப் போட்டு கருவாடு ஆக்கி இருப்பு வைத்து ‘உப்பு கருவாடு’ ஆக பயன்படுத்தப் படுவதைப் போன்ற போக்கு  என்று சொல்கிற கதை.

கருணாகரன் வளரும் இயக்குநர் .முதல்படம் தோல்வி. இரண்டாவது படம் டிராப்டு. மூன்றாவது படத்துக்கான  தேடல் என்றிருப்பவர்.மேனேஜர் மயில்சாமி மூலம் ஒரு தயாரிப்பாளர் 2கோடியில் படமெடுக்க இருப்பதாக அறிமுகம் கிடைக்கிறது. அவர் மீன்வியாபாரியும், ரவுடியுமான எம்.எஸ். பாஸ்கர்.
ஆனால் ஒரு நிபந்தனை அவரது 2 வது மனைவியின் மகளை (நந்திதாவை) படத்தின்  கதாநாயகியாக்கி நடிக்கவைக்க வேண்டும். இந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு வேலைகளை ஆரம்பிக்கிறார்கள்.ஆனால் நாயகிக்கு சுட்டுப் போட்டாலும் நடிப்பு வரவில்லை.

CS 44_31சிரமப்பட்டு பயிற்சியளித்து ஒத்திகை எல்லாம் பார்த்து நடிக்க வைக்க முயல்கிறார்கள். படப்பிடிப்பு தொடங்கு கிறது தயாரிப்பாளர் திடீரென்று வந்து எல்லாரையும் அடித்து உதைக்கிறார். படப்பிடிப்பு நின்று போவதுடன் எல்லாரும் தாக்கப் படுகிறார்கள். படக்குழுவினர் பதற்றமாகி புரியாது நிற்கிறார்கள். முடிவு என்ன என்பதே மீதிக்கதை.

படத்தின் முதல்பாதி அறிமுகப் படலம்.புதிய இயக்குநர் கருணாகரன் . மேனேஜர் மயில்சாமி சுபாவம், உதவிஇயக்குநர்கள் சாம்ஸ்டவுட் செந்தில்,நாராயணன்,  முன்னாள் ரவுடி குமரவேல், கருணாகரனின் தோழி ரக்ஷிதா,  சாமியார் டாடி சரவணன், மகாலட்சுமியாக அப்பாவி நந்திதா, கவிதை பைத்தியமாக எம்.எஸ்.பாஸ்கர் என அனைவரின் பாத்திரங்கள் பின்னணி அறிமுகமும்  காட்சிகளும் என முதல்பாதி நகர்கிறது. சொல்லப் போனால் சிலபல ஜோக்குகளாக முதல் பாதி நகர்கிறது. மறுபாதியில்தான் கதை சூடுபிடிக்கிறது.

சினிமாவில் நிலவும் அத்தனை நடைமுறை நமிபிக்கை சங்கதிகளையும் காட்சிகளின் மீது தூவி நகைமணம் கமழச் செய்துள்ளார்  இயக்குநர் ராதாமோகன். சகுனம் பார்ப்பது முதல் ஜாதிசங்கத் தலைவர்கள் மிரட்டுவது வரை நடப்புலக  காட்சிகள் மூலம் கூறி கலகலக்க வைத்துள்ளார்.

தனிப்பட்ட ஒரு பாத்திரத்தை உயர்த்திப் பிடிக்காமல் அனைவருக்கும் பெயர் கிடைக்கும்படி சமன் செய்துள்ளார். இருந்தாலும் இதுவரை காமெடி செய்துவந்த கருணாகரனை சீரியஸாகவும்,எம்.எஸ். பாஸ்கரை வில்லனாகவும் பாதை மாற்றிப் பதிய வைத்துள்ளார். நன்றாக நடிப்பவர் என்று பெயரெடுத்துள்ள நந்திதாவை நடிப்பே வராத நடிகையாக நடிக்க வைத்துள்ளது புது விதம். ஆங்கிலம் தப்பாய் கூறும் டவுட் செந்தில், எப்போதும் சகுனம் பார்த்து பாசிடிவாக எடுத்துக் கொள்ளும் மயில்சாமி ஆகியோரின் பாத்திரங்கள் கலகலப்பூட்டுபவை..

குமரவேலின் மாஞ்சா ப்ளாஷ்பேக் பகுதி நெகிழச்சியான பளிச்ரகம். குமரவேல் நல்ல நடிகர். அவரை ராதாமோகனைத் தவிர வேறு யாரும் ஏன் பயன்படுத்துவது இல்லை?.

ஒளிப்பதிவில் மகேஷ் முத்து சுவாமியும், இசையில் ஸ்டீங் வாட்ஸும் இயக்குநரின் எண்ண அலையில் பயணம் செய்துள்ளனர்.

கதையே இல்லாத கதையை வைத்துக் கொண்டு திரையுலக யதார்த்தத்தை கலகலப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
இந்த ‘உப்பு கருவாடு’ சைவர்களுக்கும் பிடிக்கும். ஏனென்றால் வன்முறை ஆபாசம் என்கிற அசைவம் இல்லாதது இந்தப்படம்.