‘உறியடி’ விமர்சனம்

uri4உறியின் அடியில் தொங்கவிட்டுள்ள  உறிப்பானையை நேரம் பார்த்து தட்டி உடைப்பதைப்போல தனக்கான நேரம் வரும்போது செய்வதே அரசியல் என்பதைச் சொல்லும் படம்.

ஜாதிய இயக்கங்கள் அப்பாவிகளை தூண்டிவிட்டு பலன் பெறுவது  பின்னணியிலான கதை இது.
திருச்சிப் பகுதியில் ஒரு ஜாதிக்காரத் தலைவருக்கு சிலை வைப்பதில் பிரச்சினை வருகிறது. எப்படியாவது மக்களைத் தூண்டிவிட்டு கட்சியாக வளர நினைக்கிறார்கள். மைம் கோபி  தலைவராக விரும்புகிறார்.

திருச்சியில் உள்ள கல்லூரியில் நாயகன் விஜய்குமாரும் மூன்று நண்பர்களும்  படித்து வருகிறார்கள். மாணவர் விடுதியில் தங்கி படித்து வரும் இவர்கள், வகுப்பு நேரத்தை தவிர மைம் கோபி நடத்தி வரும் தாபா என்னும் பெயரிலான பாரில்  ஜாலியாகக் குடித்து அதிக நேரம்  செலவிட்டு வருகிறார்கள்.
இந்தப் பாரில் விஜய் குமாரின் நண்பர்களுக்கும் உடன் படிக்கும் சக மாணவர்களுக்கும் சண்டை ஏற்படுகிறது. இதன்பிறகு ஒருநாள் இதே பிரச்சினையை வைத்து நாயகன் நண்பர்களில் ஒருவனை எதிர்தரப்பு மாணவர்கள் கொலை செய்துவிடுகிறார்கள்.

இந்த பிரச்சினையை வைத்து அரசியலில் பெரிய புள்ளியாக நினைக்கிறார் மைம் கோபி. இதனால் மாணவர்களுக்கு ஒரு பெரிய கலவரத்தை ஏற்படுத்துகிறார். இறுதியில் இந்த கலவரம் எங்கு முடிந்தது. மைம் கோபியின் அரசியல் சதித்திட்டம் நிறைவேறியதா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் குமார், புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். அதுபோல் நண்பர்களாக வருபவர்களும் தங்களுடைய நடிப்பு திறனை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பார் முதலாளியாக வரும் மைம் கோபி  சாந்தமாகப் பேசியே வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடைய  யதார்த்தமான நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.வழக்கமான மசாலா பாணியிலிருந்து மாற முயன்றிருக்கிறார்கள். ஆனால் படத்தில் பார்,குடி, போதை, தகராறு , அடிதடி, பழிவாங்கல்,வன்மம்,வெட்டு,குத்து,கண்ணாடி பாட்டில்  என எல்லாமே அதிகமாகவே இருக்கின்றன.

அடிதடி, வன்முறையை மையமாக வைத்தே படம் இயக்கியிருக்கிறார் இயக்குநர் விஜய் குமார்.காட்சிகளில் அழுத்தம் போதாது. .  வன்முறையால்தான் படம் ஏ சான்றிதழுடன் வெளிவந்திருக்கிறது.வன்முறைகள் அதிகமாக இருப்பதால் ஒரு கட்டத்தில் படத்தை பார்க்கும் சலிப்பை ஏற்படுத்துகிறது.

சினிமாத்தனம் இல்லாத யதார்த்தமான படம் கொடுக்க முயன்றிருக்கிற இயக்குநர் அதில் வெற்றி பெற்றுள்ளார் எனலாம். உறியடி அதிரடி இல்லாவிட்டாலும்  சோடை போகாத சிறுவெடி.