ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரம்: ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் அறிக்கை

lingaa-loss-distributors-press-meet‘லிங்கா’  விவகாரத்தில் ஊடகங்கள் தவறான  பொய்ப்பிரச்சாரம்  செய்வதாக ‘லிங்கா’  விநியோகஸ்தர்கள் வருத்தப்பட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.இதோ அந்த அறிக்கை

”‘லிங்கா’ படத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டமானது, திருச்சி, தஞ்சை சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. தமிழகம் முழுவதும்  வெளியிட்ட விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டுமென நாங்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம்.

இந்நிலையில் சில ஊடகங்கள் இந்த பிரச்சினையை திருச்சி– தஞ்சை விநியோகஸ்தர் சிங்காரவேலன் தூண்டி வருவதாகவும் அவர் தலைமையில் விநியோகஸ்தர்கள் செயல்படுவது போலவும் சித்தரிக்கிறார்கள். அதில் கடுகளவும் உண்மையில்லை.திருச்சி–தஞ்சை ஏரியாவைவிட கோவை, செங்கல்பட்டு, மதுரை ஏரியாக்கள் அளவில் பெரியவை. சிங்காரவேலன் செய்துள்ள முதலீட்டை விட அதிகமான அளவில் இந்த ஏரியாக்களின் விநியோகஸ்தர்கள் செய்திருக்கிறார்கள்.

அனைத்து விநியோகஸ்தர்களும் ஒன்று கூடி எடுக்கும் முடிவை சிங்காரவேலன் ஊடகங்களுக்கு தெரிவிக்கிறார். எங்களின் செய்தி தொடர்பாளராக அவரை வைத்திருக்கிறோம்.

அவர் திருச்சி ஏரியாவில் விநியோகம் செய்யும் உரிமையை பெற்றிருந்தாலும், அந்த ஏரியாவில் திரையரங்குகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் அனைத்தும் வேந்தர் மூவீஸ் பெயரிலும், சேலம் 7ஜி நிறுவனத்தின் பெயரிலும் உள்ளன. வேந்தர் மூவீஸ் மதனுக்கு அவர் மிகவும் நெருக்கமானவர் என்பதால் அந்த ஏரியாவை அவரின் நேரடி பார்வையில் வைத்திருந்தார்.

இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது வேந்தர் மூவீஸ் நிறுவனம்தான். சிங்காரவேலன் ஒருவர்தான் எந்த தொல்லையும் இல்லாமல் இருந்து வருகிறார். போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என வேந்தர் மூவீஸ் மதன் பலமுறை அவரிடம் கூறியும் எங்களின் வற்புறுத்தலுக்காக எங்களோடு இணைந்து பங்கு கொள்கிறார்.

இந்த போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை. அவர் செய்த முதலீட்டை அவருக்கு மதன் கொடுத்துவிடுவார். அவர்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது.

இருப்பினும் எங்களின் அழைப்பை தட்டாமல் கலந்து கொள்கிறார். 9 விநியோகஸ்தர்களில் 5 பேர் அ.தி.மு.க. அனுதாபிகள், செங்கல்பட்டு மன்னனும், கன்னியாகுமரி ரூபனும் அ.தி.மு.க. கட்சி பொறுப்பில் இருப்பவர்கள், மீதமுள்ளவர்கள் வெவ்வேறு கட்சிகளின் அனுதாபிகளாக இருக்கிறார்கள்.

நாங்கள் கொடுக்கும் விளம்பரங்களும், செய்திகளும் கூட்டாக எடுத்த முடிவின்படிதான் அறிவிக்கப்படுகிறது. இதனை கொச்சைபடுத்தும் விதமாக எங்களை சிங்காரவேலன் குழுவினர் என்று செய்தி வெளியிட வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். பிச்சை எடுக்கும் போராட்ட தேதி நாளை அறிவிக்கப்படும். ”

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
லிங்கா திரைப்பட வினியோகஸ்தர்கள். இவ்வாறு  அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.