’எனை நோக்கி பாயும் தோட்டா’ விமர்சனம்

காதலிக்காகவும் அண்ணனுக்காகவும் தனுஷ் எடுக்கும் ஆக்‌ஷன் அவதாரம்தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.
  கெளதம் மேனன் மாடுலேஷனில், தனுஷின் வாய்ஸ் ஓவரில் தொடங்குகிறது படம். தனுஷ் தன்னை நோக்கிப்பாயும் தோட்டாவின் இடைவெளியில் தன் கதையைச் சொல்கிறார்.  
கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் இறுதியாண்டு படிக்கிறார் தனுஷ், அந்தக் கல்லூரியில் படப்பிடிப்புக்காக வரும் நடிகை மேகா ஆகாஷைப் பார்த்ததும் பிடித்து விடுகிறது.  இருவருக்கும் பிடித்து விடுகிறது.  அப்புறமென்ன… இருவரும் டூயட் பாடி அது,லிப்லாக் வரை போகிறது.
இன்னொரு பக்கம், தனுஷின் அண்ணனான சசிகுமார், இளம் வயதிலேயே காணாமல் போய்விடுகிறார். குடும்பமே அவரை நினைத்து வருந்துகிறது.

பெற்றோர் இல்லாத மேகா ஆகாஷ், வில்லனான செந்தில் வீராசாமியின் அரவணைப்பில் சின்ன வயதிலிருந்து வளர்கிறார். எனவே, மேகா ஆகாஷின் விருப்பம் இல்லாமல், கட்டாயப்படுத்தி சினிமாவில் நடிக்க வைக்கிறார் செந்தில்.

மேகாவை வைத்து நிறைய பணம் சம்பாதிப்பதோடு, அவரை அடையும் ஆசையும் செந்தில் வீராசாமிக்கு உள்ளது. இதைத் தெரிந்துகொண்ட தனுஷ், அவரிடமிருந்து மேகாவைக் காப்பாற்றித் தன்னுடைய சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு அழைத்துச் செல்கிறார். ஆனாலும், அங்கும் வந்து மேகாவை இழுத்துச் செல்கிறார் செந்தில் வீராசாமி.

பின்னர், 4 வருடங்கள் கழித்து திடீரென மேகா ஆகாஷிடமிருந்து போன் வருகிறது. காணாமல் போன சசிகுமாருடன் தான் இருப்பதாகவும், அவர் பெரும் சிக்கலில் மாட்டியிருப்பதாகவும் கூறுகிறார். எனவே, அவர்களைக் காப்பாற்ற மும்பை செல்கிறார் தனுஷ்.

சிக்கலில் மாட்டிய சசிகுமாரை அவர் காப்பாற்றினாரா? தனுஷ் – மேகா ஆகாஷ் இணைந்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை.

ஜோமோன் டி ஜான், மனோஜ் பரமஹம்சா, எஸ்.ஆர்.கதிர் என மூன்று பேர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். லைட்டிங் மட்டுமின்றி, வித்தியாசமான கேமரா கோணங்கள் வியக்க வைக்கின்றன. படத்தின் மிகப்பெரிய பலம் தொழில்நுட்பக்குழு எனலாம்.
  இசையமைப்பாளர் தர்புகா சிவா ‘மறுவார்த்தை பேசாதே’, ‘விசிறி’ பாடல்களை இளைஞர்களிடம் பரவலாக பேசவைத்து , பின்னணி இசையிலும் நிரூபித்துள்ளார். ஒலிக்கலவை, சண்டைக் காட்சிகளும் சிறப்பு.

தான் நல்ல நடிகர் என நிரூபித்துள்ளார் தனுஷ். தன் அண்ணன் இறந்ததும், அவரது உடலைப் பார்க்கத் துடிக்கும் இடத்தில் கைதட்டல் பெறுகிறார்.

நடிகை லேகா கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷ்.  முதல் படம் என்பதால், நடிப்பதற்கு கொஞ்சம் சிரமப்பட்டுள்ளார். ஆனால், ஒளிப்பதிவாளர்களின் லென்ஸ் வழியே மிக அழகாகத் தோன்றுகிறார்.

வில்லன் குபேந்திரன் கதாபாத்திரத்தில் செந்தில் வீராசாமி, அசத்துகிறார். இந்தப் படத்துக்குப் பின் நிறைய தமிழ்ப் படங்களில் அவரை வில்லனாக வருவார். கொஞ்ச நேரமே வந்தாலும், அட்வைஸ் சொல்லாமல் இயல்பாக நடித்துள்ளார் சசிகுமார். சுனைனா, வேல.ராமமூர்த்தி, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோரும் படத்தில் இருக்கின்றனர்.

கெளதம் மேனனின் படங்களின் சிறப்பே, காதல் காட்சிகள்தான். ஆனால், இந்தப் படத்தில் அது சுத்தமாக அதுபோல், காதலுடன், அண்ணன் – தம்பி பாசம் என இரண்டு விதமான எமோஷன்களுக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு இருந்தும், ஒன்றைக்கூட கெளதம் மேனன் சிறப்பாகக் காட்சிப்படுத்தவில்லை என்பது மிகப்பெரிய குறை.

கெளதம் மேனன் மாடுலேஷனில், தனுஷின் வாய்ஸ் ஓவரில் தொடங்குகிறது படம். ஆனால், எல்லாக் காட்சிகளிலும் இந்த வாய்ஸ் ஓவர் இடம்பெறுவது, ஒருகட்டத்துக்கு மேல் எரிச்சலாக இருக்கிறது. 
கெளதம் மேனன் இதுவரை எடுத்த படங்களில் இருந்து சில சில காட்சிகளைப் பிய்த்துப்போட்டு கலந்ததுபோன்ற உணர்வை இந்தப் படம் தருகிறது. அதேசமயம், சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு, கால இடைவெளி எதுவும் இந்தப் படத்தில் தெரியாமல் மிகத் திறமையாக எடிட் செய்துள்ளார் பிரவீன் ஆண்டனி.

பெரிய அசத்தல் காட்சிகள் எல்லாம் இல்லை,இருந்தாலும் தன் கவிதை போன்ற திரைமொழியால் போரடிக்காத ஓர் ஆக்ஷன் படத்தை இயக்குநர்   கெளதம் மேனன் தந்துள்ளார் என்பதை மறுக்க முடியாது.