‘என்னை அறிந்தால்’ விமர்சனம்

yennai-a-3ஒரு தவறும் செய்யாத அஜீத்தின் அப்பா நாசர் கூலிப்படை யினரால் சுட்டுக் கொல்லப் படுகிறார்.

இப்படிப்பட்ட கூலிப்படையினரைக் கூண்டோடு வேரறுக்க வெறியோடு போலீஸ் ஆகிறார் அஜீத்.அவர் தான் சத்யதேவ் ஐபிஎஸ்.தன்பணியை உயிராக நேசிக்கிறார்.

த்ரிஷா ஒரு பரதக்கலைஞர்.கணவரைப் பிரிந்த த்ரிஷாவுக்கு ஒரு மகள் உண்டு. த்ரிஷா-அஜீத் இருவரும் மனமொத்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். த்ரிஷாவின் மகளை தன் மகளாக ஏற்றுக் கொண்டு இனி குழந்தையே பெற்றுக் கொள்வதில்லை என முடிவெடுக்கிறார் அஜீத். விடிந்தால் திருமணம் என்கிற நிலையில் த்ரிஷாவைக் கொன்று விடுகிறார்கள்.

உடலுறுப்புகளுக்காக மனிதர்களைக் கடத்திக் கொலை செய்யும் கும்பல் அமெரிக்காவிலிருந்து வரும் அனுஷ்காவைக் கடத்த முயற்சி செய்கிறது.

இதையறிந்த போலீஸ் அதிகாரி அஜீத் ,தடுக்க முயற்சி செய்கிறார். எனவே அவரது மகளையும் கடத்திச் சென்று மிரட்டுகிறார்கள்.

இவ்வளவையும் செய்வது யார் என்று அஜீத் பலர் மீதும்  சந்தேகப் படுகிறார். தாமதமாகவே தெரிகிறது இவை அருண் விஜய்யின் வேலை என்று.

ஒரு கட்டத்தில் போலீஸ் அதிகாரி அஜீத், அருண் விஜய் சம்பந்தப்பட்ட தாதா கும்பலில் ஊடுருவி அவர்களைப் போட்டுத் தள்ளியிருக்கிறார். அந்தப் பகையே தன்னைத் துரத்துவதை உணர்கிறார்.

முடிவு என்ன என்பதே ‘என்னை அறிந்தால்’ க்ளைமாக்ஸ். படத்தின் கதை பல கேள்விகளை எழுப்புகிறது. இது யாருடைய கோணத்தில்  நகர்கிறது என்று ஐயம் எழுகிறது. காரணம் சிலநேரம் அஜீத் தன் கதையைக் கூறுகிறார். சிலநேரம் அருண் விஜய் கூறுகிறார். ஏனிந்த குழப்பம்?

கௌதம் மேனன் தன் முந்தைய படங்களில் ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ ,’பச்சைக்கிளி முத்துச்சரம்’  சில சாயலில் ‘வாரணம் ஆயிரம்’ மட்டுமல்ல ‘ஆரண்ய காண்டம்’ ‘மீகாமன்’ என பார்த்து , பாதித்து சுட்டு வடை சுட்டிருக்கிறார்.

பத்துப் படங்கள் முடிப்பதற்குள் தன்படங்களையே ரீமேக் செய்யும்  பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டுள்ள கௌதம் மேனனின் நிலை சோகம். குறிப்பாக  குற்றவாளிகள்  கும்பலில் தானும் ஒரு ஆளாக சேர்ந்து குற்றவாளிகளை அழிப்பதுதான் மீகாமன் படத்தின் மையமே. இதிலும் அது அப்படியே உள்ளதே எப்படி? ஒருவேளை இருவரும் ஒரே டிவிடியை பார்த்துள்ளார்களோ?

அஜீத் என்கிற பிம்பத்தை மட்டும் நம்பி அத்தனையையும் செய்திருக்கிறார் இயக்குநர் .அஜீத் ரசிகர்களால் அந்த நம்பிக்கை காப்பாற்றப் பட்டிருக்கலாம். ஆனால் பிற வெகுஜன ரசிகர்கள் தியேட்டருக்கு வரவேண்டாமா? அந்த வகையில் புதியகதை, புதிய காட்சிகள் என்று எதுவுமே இல்லாதது குறையாக வே படுகிறது.

இளைஞர், மிடுக்கான போலீஸ் அதிகாரி, நிழல் உலக ஆள், ஒரு அன்பான தந்தை என்று அஜீத் பல்வேறு பாவங்களைக் காட்டி கவர்கிறார். தோற்றங்களைக் காட்டி மிளிர்கிறார் .

த்ரிஷா, அனுஷ்கா கொஞ்சநேரமே வந்து துப்பாக்கி சத்தத்தில் காணாமல் போய் விடுகிறார்கள். விவேக்கும் அப்படியே.

அருண்விஜய் புது  உடல்மொழியையும் ,நடிப்பையும்  காட்டி அள்ளுகிறார் பாராட்டை. அதற்கு வழிவிட்டு இடம் கொடுத்த அஜீத்துக்கும் பாராட்டு.

வழக்கமாக காட்சிகளில் துணிச்சல் என்கிற பெயரில் வக்கிரம் காட்டுபவரான கௌதம், இதில் அதை தவிர்த்துள்ளது ஆறுதல்.ஆனாலும் பல இடங்களில் ம்யூட் செய்யுமளவுக்கு அஜீத்தை ஆபாச வசனம் பேசவைத்துள்ளார் கௌதம். இது தேவையா?

ஹாரிஸ், கௌதம் என்றால் வழக்கமாக இசை பிரவாகமாய் இருக்கும். இதில் அந்த சங்கீத சந்தோஷம் குறைந்து சிறு ஓடையாகி விட்டதே ஏன்?.

முழுக்க முழுக்கஅஜீத்தை மட்டும் நம்பி எடுத்திருக்கிற படம். எனவேதான் புதிய கதை என்று எதிர்பார்க்க முடியவில்லையோ?  படம் பார்க்கும் போது போரடிக்கவில்லை இதுதான் பலம். ஆனால்  படம் முடிந்து நினைத்துப் பார்த்தால் எதுவும் புதிதில்லை. எங்கேயோ பார்த்த ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.எல்லாமே கேள்விப்பட்ட பார்க்கப்பட்ட ஒன்றாக உணர வைக்கிறது. இதுதான் படத்தின் பலவீனம்.