’ என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ விமர்சனம்

 

இதை நாட்டுப்பற்றைச் சொல்லும் கதை என்று மட்டுமல்ல அப்பா மகன் இடையே உள்ள பாசம் மோதல் பற்றிய` கதை என்றும் கூறலாம்.

 அல்லு அர்ஜுன் ஒரு கோபக்கார ராணுவ வீரரர்.  தாய் நாட்டு மீதும், ராணுவ பணி மீதும் வெறித்தனமான பற்றுள்ளவர்.  தனக்கு கோபம் வந்துவிட்டால், எதையும் யோசிக்காமல் எதிராளிகளை துவம்சம் செய்யும் குணம் உள்ளவர்.

ஆனால் அந்த கோப சுபாவமே அனைத்திலும் குழிபறிக்கிறது. நண்பர்கள், காதலி என அனைத்தையும் தனது கோபக் குணத்தால் இழந்துவிடுகிறார்.தான் நேசிக்கும் ராணுவ பணியையும் இழக்க நேரிடுகிறது. அதே சமயம் அவரை மன்னித்து மீண்டும் ராணுவ பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், இந்தியாவின் பிரபல மனநல மருத்துவரான அர்ஜுனிடம் சான்றிதழ் பெற்று வர வேண்டும் மேலிட உத்தரவு.

அதன்படி, அர்ஜுனிடம்செல்ல நேரிடுகிறது. அவர்தான் தனது  அப்பா என்பது  பிறகு தெரிய வருகிறது. இருந்தாலும் அல்லு அர்ஜுனைத் தனது மகனாக பார்க்காமல் தனது நோயாளியாக அர்ஜுன் பார்க்கிறார்.  இதனால் சினம்கொண்டவர் ,  வார்த்தைகளால் மோதிக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில், ”21 நாட்கள் கோபத்தை கட்டுப்படுத்தி, அமைதியாக வாழ்ந்து காட்டினால், சான்றிதழ் தர நான் ரெடி” என்று அர்ஜுன் கூறுகிறார்.

அதன்படி,  ரௌத்ரம் அடக்கி அல்லு அர்ஜுன் வாழத் தொடங்குகிறார், ஆனால் அப்போது   தாதா சரத்குமார் மற்றும் அவரது ஆட்கள் தொல்லை தருகிறார்கள். அவர் கண் முன்னே பல தவறுகளையும் செய்கிறார்கள். ராணுவ வீரனாக எல்லையை காப்பதையே லட்சியமாக கொண்ட அல்லு அர்ஜுன், தனது கண் முன் நடக்கும் தவறுகளை தட்டிகேட்டு மீண்டும் அதிரடியில் இறங்கினாரா அல்லது  தனது தந்தை வைத்த அக்னி பரீட்சையில்  வெற்றி  பெற்றாரா என்பது தான் படத்தின் மீதிக்கதை. அல்லு அர்ஜுன்,  நடனத்தை மட்டும் அல்ல ஆக்‌ஷன் காட்சிகளையும்  அனாயாசமாக செய்து அழுத்தமாகவே  பதிகிறார்.

அல்லு அர்ஜுனின் காதலியான அணு இமானுவேலும், அம்மாவாக நடித்திருக்கும் நதியாவும்  நிறைவாகவே நடித்திருக்கிறார்கள்.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனா இது? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ரொம்ப அமைதியான அப்பாவாக நடித்திருக்கிறார். தனது நடிப்பு மூலம் ஆக்‌ஷனில் மட்டும் அல்ல நடிப்பிலும் தான் கிங் தான் என்று அர்ஜுன் நிரூபித்திருக்கிறார். தாதாவாக நடித்திருக்கும் சரத்குமாரின், வேடம் அவ்வளவாக நம்மை மிரட்டவில்லை. அதே சமயம், இறுதியில் அவரது கதாபாத்திரம் பலவீனமாக்கப்பட்டு விடுகிறது.

விஷால் – சேகர் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு திரைக்கதையுடன் பயணித்து நம்மை கதைக்குள் இழுத்துவிடுகிறது.

ரெகுலரான தெலுங்குப் படம் போல அல்லாமல் நேரடி தமிழ்ப் படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.

குற்றவாளிகள் , யாரால் உருவாக்கப்படுகிறார்கள், என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் வி.வம்சி, எந்த குறையும் இல்லாத  படம்   ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’