என் வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தில் என்னை ஏற்றுக்கொண்டதில் ரொம்ப சந்தோசம். ‘இறுதிச்சுற்று’ காளி நெகிழ்ச்சி.

kali1“இறுதிச்சுற்று” படத்தை தமிழ் சினிமா உலகமும் தமிழ் சினிமா ரசிகர்களும் சிலாகித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.  படத்தைப்பற்றி பேசும் அனைவரும் இயக்குநர் சுதா கொங்கரா, மாதவன், கதாநாயகி ரித்திகா சிங், சந்தோஷ் நாராயணன் பற்றியும் பேசுகிறார்கள். கூடவே அவர்கள் மறக்காமல் குறிப்பிடும் இன்னொரு பெயர், காளி வெங்கட்.
தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை காமெடி கம் குணச்சித்திர நடிகர் காளி வெங்கட்டுக்கு இறுதிச்சுற்று மிகப்பெரிய வரவேற்பைத் தந்திருக்கிறது. தேவி கருமாரியாக இருந்தாலும், தேவி பாரடைஸாக இருந்தாலும் பேலஸோவாக இருந்தாலும் சாமிக்கண்ணு என்கிற சாமுவேல் என்கிற காளிவெங்கட் வரும்போதெல்லாம் ரசிகர்கள் குதூகலித்துக் கலகலக்கிறார்கள்.kali-is
முண்டாசுப்பட்டி, தெகிடி, வாயை மூடி பேசவும், மாரி என கலகலக்க வைத்த காளி வெங்கட், இறுதிச்சுற்று படத்திற்கு பின் கலகலப்பை மட்டுமல்லாது கண்கலங்க வைப்பதையும் குத்தகைக்கு எடுத்துக்கொள்வார் போல. இறுதிச்சுற்று படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி கேட்டால் காளியிடம் சொல்வதற்கு நிறைய கதைகள் இருக்கிறது.
இறுதிச்சுற்று “சாலா கடூஸ்” என்ற பெயரில் இந்தியாலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழில் மட்டுமல்லாது இந்தியிலும் அதே பாத்திரத்தில் கதாநாயகிக்கு அப்பாவாக நடித்திருப்பது நம்ம காளியே தான். இனி காளி வெங்கட்,
”இறுதிச்சுற்று இந்தி படத்தின் தயாரிப்பாளர் இந்தி சினிமாவின் மிக முக்கியமான இயக்குநரான ராஜ் குமார் ஹிரானி. ராஜ்குமார் ஹிரானி அமீர்கானை வைத்து இயக்கிய “பீகே” இந்தி சினிமாவின் தெறி ஹிட் என்பது உலகம் அறிந்ததே. அவரைப் பாக்கப்போறோம்னு தெரிஞ்சப்பவே லைட்டா எனக்குள்ள ஒரு உதறல். முதல் இந்திப்பட அனுபவம். அதுவும் அவ்ளோ பெரிய திறமைசாலி முன்னாடி நடிச்சு காட்டி ஓகே வாங்கணும். ஆனா, நான் நெனைச்ச மாதிரி இல்லாம அதெல்லாம் ரொம்ப இயல்பாவே நடந்தது. நான் தான் ஹிந்திலயும் நடிக்கிறதுன்னு ஓகே ஆனதுக்கப்புறம் ராஜ் குமார் ஹிரானி சார் வீட்ல தான் எனக்கு ரிகர்சல் நடந்தது. ரொம்ப எளிமையான மனிதர் அவர்.அந்த ரிகர்சல் மிகப்பெரிய ஆச்சர்யம் எனக்கு. அதே வீட்ல தான் “த்ரீ இடியட்ஸ்” படத்துக்கு 7 மாசம் ரிகர்சல் நடந்தததுன்னு சொன்னாங்க. ஸ்கிரிப்ட் அவங்க குடுக்கிற மரியாதையை இப்ப நெனைச்சாலும் புல்லரிக்குது.
இந்தி சினிமாவுக்கு போனது சந்தோஷம்னா இறுதிச்சுற்று தமிழ் பார்த்துட்டு நெறைய பேர் பாராட்டுறது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு. என் வயசுக்கு ஏத்த கேரக்டர்ஸ் தாண்டி, வேற வேற மாதிரி கேரக்டர்ஸ் பண்ணணும்கிறதுதான் என்னோட பெரிய ஆசை. அதுக்கு முதல் விதை போட்ட சுதா மேடத்துக்கு  நான் எப்போதும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். அதோட ஒய் நாட் சஷிகாந்த் சார், சிவி.குமார் சார், யூடிவி தனஞ்செயன் சார், மாதவன் சார், ரித்திகா சிங் மற்றும் இறுதிச்சுற்று படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றி
இந்தியில என்னோட நடிப்பை பார்த்துட்டு, யார் அந்த புது நடிகர்னு நெறைய பேர் கேட்கிறாங்கன்னு சொன்னாங்க. சந்தோஷமா இருக்கு. ஒண்ணு ரெண்டு புது படத்துல கேட்கிறாங்கன்னு சொன்னாங்க. இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். கண்டிப்பாக எனக்கு தெரிஞ்சதை என்னால முடிஞ்சதை கடைசி வரை சினிமால செய்துட்டே இருப்பேன்.”

என்று நெகிழும் காளி வெங்கட் நடிப்பில், மிருதன், டார்லிங் 2, இறைவி, ராஜா மந்திரி, தெறி,கொடி என வரிசைக் கட்டுகின்றன படங்கள்.