‘எய்தவன்’ விமர்சனம்

yeithavan2கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரி பெயரை சொல்லி, மாணவர்களிடம் நடத்தப்பட்ட கோடிக் கணக்கான பண மோசடியை யாரும் மறந்திருக்க முடியாது.அப்படிப்பட்ட  ஒரு மருத்துவக்கல்லூரியின்  மாணவர் சேர்க்கையில் செய்யப்படும் பண மோசடியைச் சொல்கிற படம்தான் ‘எய்தவன்’.

அங்கீகாரம் பெறாத மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு அரசு சீல் வைத்துவிடுகிறது. இதனால் அக்கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக, அவர்கள் நன்கொடை என்ற பெயரில் கட்டிய லட்சக்கணக்கான பணத்துக்கும் அதோகதி நிலை ஏற்பட, கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவர்கள் போராடத் தொடங்குகிறார்கள். இவர்களில் ஒருவர் தான் நாயகன் கலையரசனின் தங்கை. தனது தங்கைக்காக மட்டும் இன்றி பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களின் பணத்தையும் மீட்க கலையரசன் முயற்சிக்கிறார்.

இதற்கிடையே கார் ஒன்று ஏற்றி கலையரசனின் தங்கை கொலை செய்யப்பட, கலையரசனின் தங்கையின் மரணத்திற்கு காரணமான ரவுடியை, மருத்துவக் கல்லூரி முதலாளி கொலை செய்ய முயற்சிக்கிறார். அவரிடம் இருந்து அந்த ரவுடியை காப்பாற்றும் கலையரசன், தனது தங்கையின் கொலைக்கு பழிவாங்குவார், என்று எதிர்ப்பார்த்தால், அங்கு ஒரு ட்விஸ்ட். அந்த ரவுடிக்கு அடைக்கலம் கொடுத்து, அவரை பகடைக் காயாக பயன்படுத்தி கல்லூரி முதலாளியிடம் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை திரும்ப பெற கலையரசன் திட்டம் போட அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை.

மத்துவக் கல்லூரி முதலாளி, ரவுடி, கலையரசன் இந்த மூவருக்கும் இடையே நடக்கும் முக்கோண மோதலை, மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் நடைபெறும் ஊழலை  பின்புலமாக வைத்து இயக்குநர் அமைத்திருக்கும் திரைக்கதை திறமையானது.

நாயகன் கலையரசன்  தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். தர்மா என்ற கதாபாத்திரத்தில் ரவுடியாக நடித்திருக்கும் நடிகரின் பார்வை மிரட்டுகிறது. கல்லூரி முதலாளியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அந்த ஒல்லி நடிகர்  நம்பிக்கை வரவு.
நாயகனைத் துரத்தி துரத்தி காதலித்தாலும், அவருடன் டூயட் பாடும் வேலையை மட்டுமே பார்க்காமல், கதையை நகர்த்தும் கதாபாத்திரமாகவே வரும் சாத்னா டைடஸுக்கு போலீஸ் யூனிபார்ம் போட்டுள்ளார்கள்.
அந்த தயாரிப்பாளர் வேடத்தில் ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார். மாணவர் சேர்க்கைக்காக நரேன் மூலம் கல்லூரி நிர்வாகம் பணம் பெற, நரேனோ தனக்கு கீழே சில ஏஜெண்டுகளை வைத்து அவர்கள் மூலமாக மாணவர்களிடம் பணம் பெற்று, அதை கல்லூரி நிர்வாகத்திற்கு கொடுக்கிறார். பிரச்சினை என்று வந்தவுடன், ”எங்களிடமா பணம் கொடுத்தீங்க?” என்று கல்லூரி நிர்வாகம் கேட்க, பணம் பெற்றவர்களை தேடும் போலீஸுக்கு ஏமாற்றமே மிஞ்ச, அவர்களின் நிலை என்ன என்பதை, படம் பார்ப்பவர்கள் பீதியடையும் விதத்தில் காட்டியிருக்கும் இயக்குநர் படத்தை ஆரம்பம் முதல் முடியும் வரை வேகமாக நகர்த்துகிறார்.

கல்வியின் தற்போதைய நிலை, ஏமாறும் மாணவர்கள் குறித்து படத்தில் பேசப்படும் வசனங்கள் அனைத்தும் கவனிக்க வைக்கின்றன.

படத்தில் நடித்த மூன்று நடிகர்களின் நடிப்பு நம்மை கவர்கிறதோ இல்லையோ, க்ளைமாக்ஸில் அவர்கள் மோதும் சண்டைக்காட்சி மிரட்டல். அதற்கு முக்கிய காரணமான ஐ.ஜே.எலனின் படத்தொகுப்பும், ஒளிப்பதிவாளர் சி.பிரேம்குமாருக்கும் சபாஷ் சொல்லலாம். ஆக்‌ஷன் இயக்குநருக்கும் தான்.

அறிமுக இயக்குநர் சக்தி ராஜசேகரன், உண்மையாக நடந்த சம்பவம் ஒன்றை கருவாக வைத்துக் கொண்டு ‘எய்தவன்’ என்ற சுவாரஸ்யமான திரைக்கதையை அமைத்திருக்கிறார். சபாஷ்!