எவ்வளவு எழுதப்பட்டாலும் எழுதுவதற்கான தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது: மரபின் மைந்தன் முத்தையா

marabin1எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், , சுயமுன்னேற்றப்  பயிற்சிப்பட்டறைகள் அமைப்பாளர், பட்டிமன்ற நடுவர், ஆன்மீகச் சொற்பொழிவாளர் , பத்திரிகையாளர், பதிப்பாளர்,பத்திரிகை ஆசிரியர், தமிழ் இயக்கச் செயற்பாட்டாளர் என்று பல்வேறு முகங்கள் கொண்ட ஆளுமையாக விளங்கி வருபவர் மரபின் மைந்தன் முத்தையா . அவர் எடுத்துள்ள அடுத்த அவதாரம் திரைப்படப் பாடலாசிரியர். அவர் ‘இணைய தளம்’  என்கிற படத்துக்கு பாடல்களை மட்டுமல்ல வசனங்களையும் எழுதி இருக்கிறார். அண்மையில் அவரைச் சந்தித்துப் பேசிய போது..-!

உங்களை எழுதத் தூண்டியது. எது-?

கவியரசு கண்ணதாசன்அவர்களின் பெரிய தாக்கத்தால் எழுதத் தொடங்கியவன் நான். என் பள்ளிப் பருவத்தில் கண்ணதாசனின் மரபுக் கவிதைகளினால்  எனக்குள் பெரிய தாக்கம் ஏற்பட்டது.  அவரை மிகவும் பிரமிப்புடன் பார்த்தேன். நெருக்கமாக வாசித்தேன். எழுத ஆரம்பித்தேன்.மரபின்மீது எனக்குத்தீராத காதல் வருவதற்குக் காரணம் அவர்தான்.

யாப்பு இலக்கணத்துக்கு எழுதும் ‘மரபின் மைந்தன்’ நீங்கள், இத்திரைப்படத்தில் மெட்டுக்கு எழுதியது எப்படி? அந்த அனுபவம் எப்படி இருந்தது.?

இலக்கணம் என்பதே இசைமைக்கு உட்டபட்டதுதான். யாப்பு என்பதே ஓசையில் வந்துதான் .ஓசை என்பதுதான் மரபுக் கவிதைக்கு அடிப்படை .’இணைய தளம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்கூட என்னைப் பற்றி இசையமைப்பாளர் அரோல் கரோலி சொன்னார்    அவர் எழுதிய பாட்டுக்குள்ளேயே ஒரு மெட்டு இருந்தது அதைக் கண்டு பிடிப்பதுதான் எனக்குச் சவாலாக இருந்தது என்றார்.

எனக்கு இசைப்பாட்டு புதிதல்ல . அப்படிப்பட்ட வகையில் நிறைய பாடல்கள் எழுதி ஆல்பங்கள் வந்துள்ளன. ஏற்கெனவே ‘கரிசல் மண்’ ‘இன்னிசைக் காதலன்’ என்று இரண்டு படங்களுக்கும் பாடல்கள் எழுதியிருக்கிறேன்.

இப்படத்தில் வருவது சூழலுக்கு எழுதி, அதன்பின்னர் இசையமைக்கப்பட்ட பாடல்கள்தான்.

மரபில் வெற்றிபெற்ற பல கவிஞர்களுக்கும் மெட்டுக்கு எழுதுவது இயலாமல் போயிருக்கிறது. உங்களுக்கு அது வசப்பட்டதா ?

எனக்கு மெட்டுக்கு எழுதுவது சுகமான ஒன்றுதான். சுமார் 20 இசை ஆல்பங்களுக்கு எழுதியுள்ளேன் அதில் பெரும்பான்மையானவை மெட்டுக்கு எழுதியவைதான்.

யாப்பைவிட திரைப்பாட்டுக்கு பாத்திரம் ,நடிப்பவர்,சூழல், நிகழ்விடம்,பின்புலம் என  கட்டுப்பட வேண்டிய நிபந்தனைகள் பல உள்ளனவே?

மரபுக்கவிதையும் அந்த சுதந்திரத்தைக் கொடுக்கும் .கம்பன் எழுதுகிற காவியத்தில் கூட முனிவர் அமைதியாகப் பேசுகிறபோது ஒரு மொழியில் எழுதுவார். குகன் கோபமாகப் பேசுகிறபோது  வேறு ஒரு மொழியில் எழுதுவார்.  அந்தக் கதைச் சூழலுக்கேற்ற உணர்ச்சி என்ன கேட்கிறதோ, மொழி என்ன கேட்கிறதோ , தாளம் என்ன கேட்கிறதோ அதை எழுதித் தருவதுதான் பாடலாசிரியரின் வேலை எனலாம்.

அதையும் தாண்டி தரத்தையும் தரவேண்டும் அல்லவா?

திரைப்பாட்டு யாரோ ஒருவரின் கலை. நமது முழுக்கலை அல்ல .ஒரு கவிதை எழுவது என்றால் எனக்கு காகிதமும் பேனாவும்  போதும்.சினிமாவில்  பெரிய முதலீடு இருக்கிறது. பல பேருடைய பங்களிப்பு இருக்கிறது. அங்கே முழுச் சுதந்திரம் எதிர்பார்க்க முடியாது. கதை,சூழல்  ,இயக்குநர், இசை அமைப்பாளர் ,தயாரிப்பாளர்  எனப் பல உள்ளன. அவற்றை எல்லாம் பார்த்துதான் எழுத வேண்டும்.

காலங்கடந்து நிற்கும் பழைய பாடல்கள் போலில்லாமல் அண்மைப் பாடல்கள்  அற்ப ஆயுளில் காணாமல் போய்விடுவது ஏன்?

கனமில்லாத கதைச் சூழல் காரணமாக இருக்கலாம் இன்னொன்று பாட்டுக்கான தேவை என்ன? சூழலுக்காக எழுதப்படுகிறதா? பாத்திரத்துக்காக எழுதப்படுகிறதா? என்றால் இல்லை.வெற்றி பெறவேண்டும், மக்களால் முணுமுணுக்கப் பட வேண்டும் என எழுதப்படுகிறது. இவைகாணாமல் போய்விடும்.

சில படங்களில் வரும் பாடல்களை எந்த படத்திற்குள்ளும் வைக்கலாம். எவ்வித அடையாளமும் இல்லாமல் வருகிற இப்படிப்பட்ட பாடல்கள் காலத்தைக் கடந்து நிலைப்பதில்லை.

கதை சொல்லும் – சூழல் சொல்லும் பாடல்களாக அப்போதைய பாடல்கள் இருந்தன .இப்போது அப்படி வருவதில்லையே..?

கண்ணதாசன் ஒரு படத்துக்குப் பாடல் எழுதப் போகிறார் சூழல் சொல்லப் படுகிறது. கதாநாயகன்  யார் பெயர் வைத்து விட்டாயா? என்கிறார் .இல்லை என்கிறார்கள் சந்திரன் என்று வையுங்கள் என்கிறார் .’குலமகள் ராதை.’ படத்தில் ‘பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன். அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்’ என்று ஒரு பாட்டு வரும்  . அப்போது அந்தக் கதாசிரியருக்கு ,இயக்குநருக்கு ஆலோசனை சொல்கிற இடத்தில் கவியரசு கண்ணதாசன் இருந்தார். அவரது ஆளுமை அப்படி இருந்தது. கதைச் சூழலுக்கு வாய்ப்பு தரும் போது கவிஞர்கள் சரியாகத் தங்களை வெளிப்படுத்த வாய்ப்பாக அமையும்.

இப்போது அழுக்கு மூஞ்சி…, ஊளமூக்கு… ,ஊத்தப்பல்லு …இப்படியெல்லாம் அருவருப்பாக எழுதுகிறார்கள் அவையும் வெற்றி பெறுகின்றனவே?

இவை எல்லாம் பாடல் எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்கிற நோக்கத்தில் எழுதப் படுபவை தவிர வேறல்ல. எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற உள்நோக்கமும் வணிக நோக்கமும் கொண்டு எழுதப்படும் இவை சில மாதங்கள்கூட நிற்காது என்பதை காலம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. சில வாரங்களில் கூட அவை காணாமல் போய்விடுகின்றன .

சில வீடுகளில் இவற்றைக் குழந்தைகள் பாடும் போது பெற்றோர்களே தலையைக் குனிகிறார்கள். மக்கள் மனதில் இடம் பெறாமல் விடலைகளின் உதட்டில் மட்டும் இடம் பெறும் .இவை காலப்போக்கில் காணாமல் போய்விடும். அவை பற்றி நாம் கவலைப்படத்தேவையில்லை.

muthaiah-pmஒரு பாடலாசிரியரின் இடமதிப்பு இன்றுசினிமாவில்  தரம் தாழ்ந்து இறங்கி உள்ளதே..?

படத்தில் கதைக்கான கனம் இருக்கிறபோதுதான் கவிஞனின் அருமை தெரியும்.கதை தக்கையாக இருக்கும் போது என்ன எழுதமுடியும்? ஆனால் இதுவும் கடந்து போகும் நிலைக்காது .

நீங்கள் ரசித்த பாடல்கள் எவை ?

கண்ணதாசனின் பல பாடல்கள்  தினமும் மனத்தில் நாலைந்து முறையாவது வரும்
‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது ,அது எந்த தேவதையின் குரலோ?’ பாடல் பிடிக்கும்.அடுத்து “தூங்காத கண்ணென்று ஒன்று துடிக்கின்ற சுகமென்று ஒன்று தாங்காத மனமென்று ஒன்று தந்தாயே நீ என்னை கண்டு . ‘பாடலில்  முடிவின்மையை சொல்லும் விதத்தில்

‘முற்றாத இரவொன்றில் நான் வாட , முடியாத கதை ஒன்று நீ பேச,  ‘ என்றும்

‘யாரென்ன சொன்னாலும் செல்லாது, அணை போட்டு தடுத்தாலும் நில்லாது ‘ என வரும் வரிகள் பிடிக்கும். அதில் நிலையாமை  பற்றி அழகாக எழுதியிருப்பார்..

வைரமுத்து எழுதிய ‘தென்கிழக்குச் சீமையிலே செங்காத்து பூமியிலே ஏழைப்பட்ட சாதிக்கொரு ஈரமிருக்கு’ ‘ பாடல் பிடிக்கும். அருமையான பாடல். இப்படி நிறைய உண்டு.
கண்ணதாசன் ,பட்டுக் கோட்டை, வாலி, வைரமுத்து ஒப்பிட முடியுமா?

அவர்கள்  அனைவரும் தங்கள் தனித்தன்மையால்தான் சாதனை படைத்தார்கள். கண்ணதாசன்.ஒருபல்லவி  இரண்டு சரணத்துக்குள் சில காவியங்களை இறக்கி வைப்பார். ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே; நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே அதுநாடகமா? இதுநாடகமா?
என்று ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் மட்டுமல்ல ‘ராஜபார்ட் ரங்கதுரை  ‘படத்தையும் கொண்டு வந்து சொல்லலியிருப்பார்

பட்டுக்கோட்டையாரின் மொழி எளிமை மிக அருமையாக இருக்கும் .எளிமையில் செறிவு தரும் மொழி அவருடையது.

‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி ‘ பாடலாகட்டும் ‘ நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்.’  வரிகள் வரும் ‘தூங்காதே தம்பி தூங்காதே ‘ பாடலாகட்டும்  அடர்த்தியான பாடல்கள்  அவருடையவை.

வாலி அப்போதைய போக்கிற்கு ஏற்ப பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர். பழனிபாரதி ஒரு முறை சொன்ன மாதிரி நாயக்கர் மகாலுக்கும் எழுதுவார். நாயுடு ஹாலுக்கும் எழுதுவார்.
எந்த தரத்துக்கும் அவரால் எழுத முடியும். எம்.ஜி.ஆர் என்கிற சித்திரத்தை வரைந்ததில் அவருக்குப் பெரிய பங்கு உண்டு.

தமிழ்ச் சினிமாவில்  பாடல்களில் கவித்துவமான போக்குக்குப் புதிய பாதை போட்டடவர் வைரமுத்து. அவரது பாடல்கள் எல்லா மனிதனுக்குள்ளும் ஒரு கவிஞன் இருக்கிறான். என்பதை உணரவைக்கும். ஒரு குடும்பப் பெண் பாடினால் பாடும் போது அவர்களுக்கேற்ற கவிதை இருக்கும். ஒரு குமரிப் பெண் பாடினால் பாடும் போது அவளுக்கேற்ற கவிதை இருக்கும்.  அதற்கு ஏற்றபடி உவமையும் கொண்டு வருவார்.
ஒரு கல்லூரிப்பெண் போட்டி போட்டுப் பாடும் போது ஒருத்தி சொல்வாள் ‘ஜெயிப்பது நாங்கள் தோற்பது நீங்களடி’ என்று எதிரே இருப்பவள் சொல்வாள், ‘வெற்றிகள் எல்லாமே நிரந்தரமில்லையடி ஐஸ்க்ரீம் தலைமேல் செர்ரி பழம் இருப்பது அரைநொடி வாழ்க்கையடி’. என்பாள். இது ரொம்பப் புதிதாக இருக்கும். இப்படி ஏற்றபடி உவமையும் கொண்டு வருவார்.

இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும்.

muthaiah4எல்லாம் எழுதப்பட்டு விட்டதே.. எழுத இனி கச்சாப் பொருள்களே இல்லை என்கிற பிரமிப்பு இருக்கிறதா?

இல்லை. திரைப்பாட்டில் மட்டுமல்ல இலக்கியத்தில் கூட எல்லாம் எழுதப்பட்டு விட்டதே.. எழுத இனிப் பாடு பொருள்களே இல்லை என்று இதைத் திருப்பச் திரும்பச் சொல்கிறார்கள். ஆனால் எழுதுவதற்கான தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த பிரமிப்பே புதிய தேடலில் கொண்டு போய் புதியன படைக்க வைக்கும். பிரமிப்பே சவாலைச் சந்திக்க எழுதத் தூண்டும்.

சுஜாதா கூட சொல்வார் சங்க இலக்கியத்தோடு காதல் சொல்லப் பட்டுவிட்டது என்று.ஆனால்  படைப்பு வற்றாத ஜீவநதி .அது வற்றாமல் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும்.
மரத்தின் அடையாளம் வீரிய விதைகளை உருவாக்குதுதான் மொழியின் அடையாளமும் புதிய  வீரிய படைப்புகளை உருவாக்குதுதான்.

எழுத்தாளர், பேச்சாளர் ,கவிஞர் எனப் பல தளங்களில் இயங்கும் நீங்கள் சினிமாவுக்கு மட்டும் தாமதமாக வந்தது எப்படி?
சினிமாவில் வெற்றி பெற்ற பலரும் நம்பிக்கைக் கனவோடு சென்னை வந்து இங்குக் களம் அமைத்து அமர்ந்தவர்கள்.வெற்றி பெற்றவர்கள். நான்  அவர்களைக் கண்டு வியக்கிறேன்.

கோவையில் நான் பல்வேறு தளங்களில் இயங்குவதால் அவ்வப்பொழுது சென்னை வந்து போகிறேன்.  இப்போது உள்ள இணைய வசதிகள் தொழில்நுட்ப சாத்தியங்களால் இருந்த இடத்தில் இருந்து கொண்டே எழுத முடியும். என் சொந்த வேலையைப் பார்த்துக்கொண்டே கூட எழுத முடியும்.அப்படி ஒரு வசதி இப்போது உள்ளது.
இப்படிப் பல வகைமைகளில் இயங்கி வருவதால் சமூக வெளியில் நான் பெற்றிருக்கும் பெயர் சினிமா வெளியில் எனக்கொரு கதவைத் திறந்து விட்டிருக்கிறது.எனவே சினிமாவிலும் என்னால் ஊக்கமுடன் செயல்பட முடியும் என நம்புகிறேன்.

ஒரே நபர் எழுத்தாளர், பேச்சாளர்,  கவிஞர்,சொற்பொழிவாளர், பத்திரிகை ஆசிரியர் என  நீங்கள் பல பாதைகளில் பயணிப்பது எப்படி? ஒரு துறையில் உச்சம் தொடாமல் எப்படிப் பல குதிரைகளில் சவாரி செய்ய முடிகிறது?

உச்சம் என்பதைவிட நிறைவு என்பது ,மகிழ்வு என்பது எனக்குப் பிடித்திருக்கிறது அதனால் இயங்க முடிகிறது. நான் 48 வயதில் 63 நூல்கள் எழுதியிருக்கிறேன். ஆனால் இத்துடன் இப்பணி நிற்காது திருப்தி அடைய மாட்டேன், தொடரும்.

எல்லாவற்றிலும் எனக்கு ஈடுபாடு இருக்கிறது. ஒரு பேச்சாளனாக, சுயமுன்னேற்றப் பயிற்சியாளனாக,பத்திரிகை ஆசிரியராக எதிலும் மகிழ்ச்சியாக நிறைவாக  என்னால் செய்ய முடியும். செய்ய இவ்வளவு வேலைகள் இருப்பதே மகிழ்ச்சி .இவ்வளவும் செய்து வரும், நான் கலை வெளிப்பாடு உள்ள  ஒரு மனிதன் என்று கூறுவதில்தான்  மகிழ்கிறேன். வெளிப்படுகிற துறை வேறாக இருக்கலாம். நான் கலை வெளிப்பாடு உள்ள மனிதன் அவ்வளவுதான்.

கவிஞர் வைரமுத்து  உடனான நட்பு பற்றி..?

வைரமுத்து  அவர்கள் எழுதிய ‘பழைய பனை ஒலைகள்’ ‘ரத்ததானம் ‘போன்ற மரபுக் கவிதைகள் கல்லூரிக் காலத்தில் என்னை ஈர்த்தன. அவரது ‘சிகரங்களை நோக்கி’ நூல் வெளியீட்டுவிழா கோவையில் நடந்த போது. அந்த விழாக்குழுவில் நான் இருந்தேன். அப்போது தொடங்கிய புரிதல், அன்பு ,நட்பு இன்றும் தொடர்கிறது. அதுவே ‘ஒரு தோப்புக் குயிலாக’ என்றொரு நூலாக மலரும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

– நமது நிருபர் .