எஸ்.பி.ஐ.சினிமாஸ் நிறுவனத்துடன் சட்டப்படி ஒப்பந்தம் ரத்து. நடிகர் சங்கம் அறிவிப்பு !

IMG_8911எஸ்.பி.ஐ.சினிமாஸ் நிறுவனத்துடன் சட்டப்படி ஒப்பந்தம் ரத்து என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னையில்  இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு விவரம்

இன்று தென்னிந்திய நடிகர் சங்க வரலாற்றில் மிக முக்கியமான நாள். கடந்த நிர்வாகத்தால் நடிகர் சங்க அறக்கட்டளை மூலம் 2010-ல் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த ஒப்பந்தம் 9 பேர் கொண்ட அறக்கட்டளையின் நிர்வாகத்தில் 2 பேர் மட்டுமே கொண்டு போடப்பட்டதால் அது அறக்கட்டளை சட்டப்பட்டி தவறானது என சங்க உறுப்பினர் பூச்சி முருகன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நடிகர்களான நாங்கள் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி பல முறை கோரிக்கை வைத்தோம். அது நிறைவேறாததால் தேர்தலிலும் பாண்டவர் அணி மூலம் நின்றோம். வெற்றியும் பெற்றோம்.

நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தபடி பதவிக்கு வந்தவுடன், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய, தனியார் நிறுவனத்துடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். அதிலுள்ள சட்ட சிக்கல்களை விவாதித்தோம். முடிவில் அந்த ஒப்பந்தத்திற்காக கொடுக்கப்பட்ட ரூ.48 லட்சம் மற்றும் பத்திரப்பதிவுக்காக கொடுக்கப்பட்ட 1 கோடி 41 லட்சம் கடந்த 2 வருடங்களாக நடிகர் சங்க அலுவலுக்கு மாதந்திர செலவுகளுக்கு கொடுக்கப்பட்ட
சுமார் ரூ.60லட்சத்தையும் சேர்த்து 2 கோடியே 48 லட்ச ரூபாயை கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டு சங்க அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் செயற்குழுவிலும் ஒப்புதல் வாங்கப்பட்டு இன்று ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வரலாற்றுப்பதிவு நிகழ்ந்தேற உதவிய நல்ல உள்ளங்களுக்கு இன்று நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இக்காலக் கட்டங்களுக்கான கால தாமதத்திறாக முதலீடு செய்த பணத்திற்கான வட்டியை ரத்து செய்து எதிர்காலத்தில் நடிகர் சங்கத்துடன் என்றும் ஒத்துழைப்போம் என்று கூறிய எஸ்.பி.ஐ சினிமாவிற்கு நன்றி.

இந்த ஒப்பந்தத்துக்கு பல கட்டங்களில் எதிர்ப்பை தெரிவித்து வந்த திரு.எஸ்.வி.சேகர், திரு.மன்சூர் அலிகான், திரு.ஆனந்த்ராஜ்,திரு. குமரிமுத்து. ​திரு​
.பி.ஏ.காஜாமைதீ்ன், திரு.ஆர்.எம்.சுந்தரம் ஆகியோருக்கும் நன்றி.

பல சோதனைகளும், மிரட்டல்களையும் சமாளித்து உறுப்பினர்களின் நலனுக்காக நிலத்தை மீட்டெடுக்க தனி்த்து போராடிய திரு. பூச்சி முருகனுக்கு நன்றி. ரூ. 2 கோடி கொடுத்தால்தான் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியும் என்ற சூழ்நிலையில், தற்போதையை சங்க அறக்கட்டளை அறங்காவலர் திரு.ஐசரி கணேஷ் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு குறுகிய காலத்தில் 2 கோடியை பெற்று தந்தார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.

இந்த வழக்கிற்காக ஆரம்ப நிலையில் இருந்து வாதாடிய வழக்கறிஞர் திரு.தண்டபாணி, திரு.முத்து்க்குமார், திரு.சுல்தான் ஆகியோருக்கும், உடனிருந்து ஒப்பந்தத்தை ரத்து செய்ய உதவிய திரு. கிருஷ்ணாவுக்கும் நன்றிகள்.