’ ஐங்கரன்’ விமர்சனம்

ஜி.வி .பிரகாஷை இதுவரை தீராத விளையாட்டுப் பிள்ளையாக ப்ளேபாய் போன்று பல படங்களில் பார்த்துள்ளோம். அப்படிப்பட்ட வேடங்களில் பார்த்து வந்த அவர் ஐங்கரன் படத்தின் மூலம் அதிலிருந்து வெளியே வந்திருக்கிறார்.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க சாதனத்தைக் கண்டுபிடிக்கும் பட்டதாரி இளைஞர் ஜி.வி .பிரகாஷ். அவரைச் சுற்றிக் கதைச் சம்பவங்கள் நடக்கின்றன.

சமூகத்தில் நிகழும் பிரச்சினையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது .நகைக் கடைகளைக் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள், பட்டதாரி இளைஞனுக்கும் ஒரு பெண் இருவருக்கும் இடையே நிகழும் மோதல் நேர்மையான ,நேர்மையற்ற காவலர்களுக்கு இடையே நிகழும் சம்பவங்கள் என தனித்தனியே பயணித்த கதைகள் ஒரே புள்ளியில் வந்து அடையும்படி அமைக்கப்பட்ட திரைக்கதை படத்துக்கு பெரிய பலம்.

உற்சாகம் சுறுசுறுப்பு ஆகிய மூன்றும் கலந்த பட்டதாரிகளாக ஜீவி பிரகாஷ் பிரகாசிக்கிறார் .கதாநாயகி மகிமா நம்பியாருக்குச் சின்ன வேடம் என்றாலும் தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் அப்பாவாக நடித்திருக்கும் நரேன் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஹரிஷ் பேரடி ,காளி வெங்கட், வடநாட்டு திருடனாக வரும் சித்தார்த், அழகம்பெருமாள் என அனைவரும் பாத்திரத்திற்குப் பொருத்தமான தேர்வுகள்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு இரவு நேரக் காட்சிகளையும் ஆக்‌ஷன் காட்சிகளையும் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.

”பாதுகாக்க வேண்டிய ஏரிகளை மூடுவதும் மூட வேண்டிய போர்வெல் குழிகளை மூடாமல் இருப்பதும் இங்கே தான் நடக்கும்”, “நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைப்பதே பெரிய சாதனை தான்” போன்ற வசனங்கள் மூலம் ரசிகர்களை சிந்திக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ரவி அரசு .

குழந்தையை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்க எடுக்க முயலும் காட்சிகள் சில உண்மைச் சம்பவங்களை நினைவூட்டுகின்றன. படத்தில் தெரியும் குறைகளைச் சமுதாய விழிப்புணர்வுக் கதை மறக்க வைக்கிறது ..விரைவான திரைக்கதையும் விறுவிறுப்பான காட்சி அமைப்பும் குறைகளை மறந்து ரசிக்க வைத்து நல்லதொரு படம் பார்த்த திருப்தியை அளிக்கிறது.

மொத்தத்தில் ‘ஐங்கரன்’ நல்ல படைப்பாக ரசிக்க வைக்கிறது.