‘ ஒரு கிடாயின் கருணை மனு ’ விமர்சனம்

okkm2ஒரே ஒரு லொக்கேஷன், சுமார் 30 கதாபாத்திரங்கள், ஒரே இரவில் நடக்கும் கதை என்று புதுமையான எதிர்பார்ப்பு தூண்டும் அனைத்தும் உள்ள படம். எளிமையான கதைதான் என்றாலும்  வலிமையான திரைக்கதை இருக்கிறது.

புதுமண ஜோடி, அவர்களது குடும்பத்தினர்  ,உறவினர் எனச் சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் கிடா வெட்டி சாமி கும்பிடுவதற்காக லாரியில் வெளியூர்   செல்கிறார்கள்.

லாரி செல்லும்  கரிசல்காட்டுப் பகுதியில் வழியின் குறுக்கே ஒருவர் வந்து விழுந்து இறந்துவிடுகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் சாமி கும்பிடப் போனவர்கள் அதிர்ந்து தடுமாறுகிறார்கள். கூட்டத்தில் இருக்கும் சிலர் எரிக்கலாம் என்றும், சிலர் புதைக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

பிணத்தை அப்புறப்படுத்தி அதில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். இறுதியாக  சிறியவர் முதல் முதியவர்கள் வரை, ஒட்டு மொத்த கூட்டமும் அந்த பிணத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.  இடையிடையே பல சிக்கல்கள் வர, சமாளிப்புகள். இறுதியில் நடந்தது என்ன? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

படத்தில் நாயகன் என்ற இடத்தில் விதார்த்தும், நாயகி என ரவீனா ரவி என்ற பெயர்கள் இடம்பெற்றாலும், படத்தில் நடித்தவர்கள் அனைவரும் கதை மாந்தர்களாகவே வலம் வருகிறார்கள். சொல்லப் போனால், விதார்த்தை காட்டிலும், அரும்பாடு, சமையல்காரர், லாரி உரிமையாளர் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களே ரசிகர்களை சிரிக்க வைப்பதுடன், பார்வையாளர்களை  இருக்கையில் உட்கார வைக்கிறார்கள்.

ரகுராமின் இசையும், ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஏற்ப பயணம் செய்துள்ளன..

okkm1இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் நேர்த்தியான திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலம் எனலாம். அதைவிடவும் பலமாக இருப்பவை படத்தின் வசனங்களும், அதை நடிகர்கள் பேசும் விதமும் . எந்த நடிகர் பக்கம் கேமாராவைத் திருப்பினாலும், அவர் ஏதோ கேலிகிண்டலாகப் பேசி, ரசிகர்களை சிரிக்க வைத்து விடுகிறார்கள். இப்படியே நகரும் படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரம் ஒன்று வர, அவர் பங்குக்கு அந்த பிணத்தை வைத்து டபுள் கேம் ஆட, அங்கேயும் சில நையாண்டி வசனங்களும், காட்சிகளையும் இயக்குநர் அவிழ்த்துவிடுகிறார். அவை திருப்பங்களுக்கும் சிரிப்புக்கும் பஞ்சமில்லாதபடி உள்ளன.

இப்படி படம் முழுவதுமே ஒரு பிணத்தை வைத்துக் கொண்டு காமெடி செய்திருக்கிறார்கள். இன்னும் அழுத்தம் காட்டியிருந்தால் படம் மேலும் சிறப்பாக வந்திருக்கும். காட்டும் இடங்களிலும் காட்சிகளிலும் மண்மணம் மாறா இயல்புத்தன்மை வெளிப்பட்டுப் படத்தில் தெரிவது பாராட்டுக்குரியது.

தலைப்புக்காகவோ என்னவோ  அவ்வப்போது கிடாவை மட்டும் குளோசப்பில் காட்டுகிறார்கள். ஆனால், அந்த கிடாவால் படத்தில் எந்த தாக்கமும் இல்லை.
கடைசியில் ”கோயிலுக்காக கொண்டு வந்த கிடாவ வெட்டாம வீட்டுக்கு எடுத்துட்டு வர கூடாது, இங்கேயே அவிழ்த்து விட்டுடுங்க” என்று சாமி மீது பழியை போட்டு படத்தை முடிக்கிறார்  இயக்குநர்.அது மட்டுமல்ல நீதிமன்றம் குறித்த நாட்டு நடப்பையும்  எதிரொலித்துள்ளார்.

இந்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரையில் ஒரு புது முயற்சிதான்.