‘ஒரு குப்பைக் கதை’யை உதயநிதி வெளியிடுகிறார்.

 

நடன இயக்குநர் தினேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பைக் கதை’. அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக மனிஷா யாதவ் நடித்திருக்கிறார். பிலிம் பாக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் அஸ்லாம் தயாரித்திருக்கும் இப்படம் வரும் மே 25 ஆம் தேதி வெளியாகிறது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்

இப்படத்தின் இசை வெளீயீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் அமீர், சீனு ராமசாமி, பொன்ராம், சுசீந்திரன், எழில், பாண்டிராஜ், நடிகர்கள் ஆர்யா, சிவகார்த்திகேயன், உதயநிதி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, “தினேஷ் மாஸ்டருக்கும், எனக்கும் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. எனது முதல் மூன்று படங்களுக்கும் தினேஷ் மாஸ்டர் தான் நடனம் சொல்லிக் கொடுத்தார். என்னை நடனமாட ஊக்குவித்தவர் இவர் தான். எங்கள் இருவருக்கும் ஒரு அண்ணன், தம்பிக்குண்டான பாசம் இருக்கிறது. 

இப்படி இருக்கும் போது, இவர் ஏன் ஹீரோவாக நடிக்கிறார் என்று முதலில் யோசித்தேன். பின்னர் படம் பற்றி கேள்விப்பட்ட நான், படத்தை நாமே வெளியிடலாம் என்று முடிவு செய்தேன். ஒரு குப்பைக் கதை படம் மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். நல்ல படங்கள் வந்தால் பாராட்டுவதும், சுமாரான படங்களை விமர்சிப்பதும் வழக்கம் தான். அந்த வகையில் இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரும் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.