ஒளிப்பதிவாளர் சங்கத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது !திரையுலகைக் கலக்க வரும் இன்னொரு தேர்தல்!

sica1gpநடிகர் சங்கத் தேர்தல் முடிந்து பரபரப்பு இப்போதுதான் அடங்கியிருக்கிறது.திரையுலகம் அடுத்த பரபரப்புக்குத் தயாராகிவிட்டது.
‘சிகா ‘ எனப்படும்  தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் (SOUTH INDIAN CINEMATOGRAPHERS ASSOCIATION  )தேர்தல் வரவிருக்கிறது.அடுத்த ஷோ ஆரம்பம்.பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.

வரும் ஜனவரி 10-ல் நடைபெறவுள்ள இத்தேர்தலில் தற்போது பதவியில் உள்ளவரான  ஜி.சிவா தலைமையில் ‘சேவை அணி’ எனவும், பி.சி.ஸ்ரீராம் தலைமையில் ‘நடுநிலைஅணி’ எனவும்,கே.வி.கன்னியப்பன் தலைமையில்’ஆண்டவர்அணி’ எனவும் போட்டியிடுகின்றனர்.

இந்த மும்முனைப்போட்டியில் முனைப்பாக இருக்கும் ஓர் அணியான ‘ஆண்டவர்அணி’ யின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றது.’ஆண்டவர்அணி’யின்  சார்பில்  தலைவர் பதவிக்கு கே.வி.கன்னியப்பன்,செயலாளர் பதவிக்கு ஒய்.என்.முரளி,பொருளாளர் பதவிக்கு சி.எஸ்.ரவிபாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இரண்டு துணைத் தலைவர்கள் பதவிக்கு ஆர்.ரகுநாத ரெட்டி மற்றும் ,எஸ்.எல்.சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மூன்று இணைச்செயலாளர்கள் பதவிக்கு பி.பாலாஜி,ஆர்.எஸ்.ஞானசேகர்,எம்.ஆர்.சரவணகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பதினொரு செயற்குழு உறுப்பினர்கள்  பதவிக்கு எம்.டெனிசன்,ஆர்.இளையராஜா,கே.எஸ்.நாகராஜ்,ஆர்.ராஜாமணி,ஆர்.ஆர்.ராஜ்குமார்,எல்.சசிகுமார்.டி.சீனிவாசன்,பி.செந்தில்குமார்,எம்.சிவகுமார்,கே.சுதாகர்.ஆர்..கே.விக்ரமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

sica-ggpவேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தைத் தொடர்ந்து இவ்வணியினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

எவரிடமும் முறையிட்டும் பலனில்லாமல் போகவே இறைவனிடம் முறையிடும் கருத்தில்தான் ‘ஆண்டவர்அணி’      என்று பெயர் வைத்திருப்பதாக  பெயர்க்காரணம் கூறினார்கள்.

எட்டு ஆண்டுகளாகத் தேர்தலே நடத்தாமல் இருந்துள்ள நிலையில் இப்போது முறையான தேர்தல் நடைபெறத் தங்கள் ‘ஆண்டவர்அணி’ யே காரணம் என்கின்றனர்.

இவர்கள் ஜி.சிவா நிர்வாகத்தின் மீது முறையான கணக்குகள் இல்லை,வசூலான தொகை சங்கத்துக்கு வரவில்லை,அனாவசிய செலவு செய்து பணத்தை விரயம் செய்துள்ளனர், சங்கத்து சில உறுப்பினர்கள் மீது மேற் கொண்டவை பழி வாங்கும்  வகையிலான முறையற்ற ஒழுங்கு நடவடிக்கைகள் என அடுக்கடுக்காக குற்றம் சாட்டுகிறார்கள்.அனகோண்டாவாகச் சீறுகின்றன புகார்கள்.

நடுநிலை வகிக்கும் பி.சி.ஸ்ரீராம் அணி பற்றியும் கேள்விகள் எழுப்புகிறார்கள்.இத்தனை நாள் முந்தைய சங்கத்தின் முறை கேடுகளை தட்டிக்கேட்காமல் இருந்து விட்டு இப்போது மட்டும் தேர்தலில் நிற்பது ஏன்? என்றுகேள்விகள் எழுப்புகிறார்கள்.

தாங்கள் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடக் காரணம் நியாயம் கேட்டும் வெளிப்படையான நிர்வாகமாற்றம் வேண்டியும்தான் என்று  டி.சீனிவாசன் வேட்பாளர்களுக்கான தன் அறிமுக உரையில் குறிப்பிட்டார்.

”மாற்றத்துக்கான வாய்ப்பு கொடுங்கள் செயல் படுகிறோம்”. என்றார் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கன்னியப்பன்.

”ஆதரவு தாருங்கள் உழைக்கத்  தயாராக இருக்கிறோம்”என்றார் செயலாளர் பதவிக்குப்போட்டியிடும் ஒய்.என்.முரளி.

”நாங்கள் பிரபலம் இல்லாதவர்கள் பிற பலமும் இல்லாதவர்கள் பணபலமும் இல்லாதவர்கள். ஆனால் மனபலம் உள்ளவர்கள் ; எங்கள் உழைப்பின் வருமானத்தைக்கொண்டுதான் இப்போது களம் இறங்கியிருக்கிறோம்.”என்றார் எஸ்.எல்.சரவணன்.

”மாற்றம் வேண்டும் என்றே போட்டியிடுகிறோம்.ஒளிப்பதிவாளர் சங்கத்தில் பல கோடி ஊழல் நடந்திருக்கிறது.எங்களிடம் ஆதாரம் இருக்கிறது.”என்றார் எல். சசிகுமார்.

”இதில் 3 விதமான அணியினர் போட்டியிடுகின்றனர் நிர்வாகத்தில் ஊழல் செய்தவர்கள் ஓரணி, ,ஊழல் செய்தவர்களைக் கண்டு கொள்ளாதவர்கள்,தட்டிக்கேட்காதவர்கள் இன்னொருஅணி,  ஊழலை எதிர்த்து 2 ஆண்டுகளாகப் போராடுகிறவர்கள் மற்றொரு அணி, என இதில் 3 அணியினர் போட்டியிடுகின்றனர். நாங்கள் மூன்றாவது வகை அணியாக இருப்பவர்கள் அதாவது.ஊழலை எதிர்த்து போட்டியிடுகிறவர்கள் அணியாகும்.”என்றார் சீனிவாசன்..

வெளிநாட்டுக் கலைநிகழ்ச்சிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்  பணத்தை வசூல் செய்துவிட்டு இப்போது சங்கத்தின் இருப்பில் எட்டாயிரம் மட்டுமே உள்ளது என்கிறார்கள்.
தாங்கள் யாருக்கும் எதிரியில்லை ஊழலைத் தட்டிக் கேட்கவே இது உருவானது என்றும் பலரும் கூறினர்.

தேர்தல் முறையாக நடக்க வேண்டும் ,சங்கத்தின் மொத்த உறுப்பினர்கள் 1200பேரில்
ஆந்திராவில்120பேர் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் கர்நாடகாவில் 60பேர் இருக்கிறார்கள் கேரளாவில் 40பேர்  இருக்கிறார்கள்.அவர்களையும் தேர்தலில் முறையாக பங்கேற்க வைக்க வேண்டும்.

சங்கத்தின் வரவு செலவுகள் முறையாக நடக்க வேண்டும்,சங்க உறுப்பினர்கள்1200பேரில் 400 பேருக்கு மேல் வேலையில்லை. சீரான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
இவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

நேர்மையான நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படும்.
முறையான ஊதிய உயர்வுக்கு வழி செய்யப்படும்.

ஒழுங்கு நடவடிக்கையில் வெளிப்படையான முறை கொண்டு வரப்படும்.
காப்பீடு,விபத்து இழப்பீடு முறைப் படுத்தப்படும்.
தொழில் நுட்ப அறிவு மேம்படுத்தப்படும்.
‘சிகா’வுக்கென ஒரு ஆப் அப்ளிகேஷன் ஏற்படுத்தப்படும்.
பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும்.
கேமரா எக்ஸ்போ நடத்தப்படும்.
சொந்தமாகக் கட்டடம் கட்டப்படும்.
ஓய்வூதியம் முறைப்படுத்தப்படும்.

அரசு உதவியுடன் பல சேவைகள் தொடங்கப்படும் என்றெல்லாம் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர்.

நிஜமாகவே அடுத்த பரபரப்புக்குத் தயாராகிவிட்டது திரையுலகம்..