கமலின் பாராட்டும் சூர்யாவின் உதவியும்! -நெகிழும் ‘கோலி சோடா’ ஸ்ரீராம்

இந்த ஸ்ரீராம் இனி சிறுவன் அல்ல. மேஜர் ஆகிவிட்டார். மே1 முதல் 18 வயது ஆகிவிட்டது. பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ரீராமிடம் சினிமா அனுபவங்களைக் கூறச் சொன்ன போது

“அஜீத் சார் பிறந்தநாளில் பிறந்த தற்காக சந்தோஷப்படுகிறேன்.அஜீத் சாருடன் ஒரு முறையாவது என் பிறந்தநாள் கொண்டாட ஆசை”என்று ஆரம்பித்த ஸ்ரீராம்,தன் சினிமா அனுபவங்களைக் கூறத் தொடங்கினார்.
”அம்மா, அப்பா, தம்பி, நான் என நாலே பேர்தான் எங்கள் குடும்பம். . அம்மா பெயர் சரஸ்வதி. அப்பா சிவராமகிருஷ்ணா, தம்பி அர்ஜுன்ராம்.என் அப்பா உதவி இயக்குநர். ஐ.வி.சசி சார்,மும்பை விளம்பரப்பட இயக்குநர் மானோமேனன் ஆகியோரிடம் என் அப்பா aஉதவி இயக்குநராக வேலை பார்த்தவர். கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணாவிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.அப்பா,அம்மா எங்களோடு எப்போதும் நட்புடன் இருப்பார்கள். அப்பா சினிமாத் துறை தொடர்பில் இருந்ததால் சினிமா, படப்பிடிப்பு, நடிப்பு , சவுண்ட், லைட்ஸ் கேமரா, ஆக்ஷன் டேக் ,கட் என்கிற எல்லாமே எங்களுக்கு பரிச்சயமாக இருந்தது.

‘கற்றது தமிழ்’ படத்தில் நடிக்க சின்னப்பங்க  தேவை என்கிற விளம்பரம் வந்தது. என் தம்பி என்னைவிட கழுக் மொழுக்கென்று இருப்பான். அவன் போட்டோவை அம்மா அனுப்பச்  சொன்னாங்க. எதற்கும் இருக்கட்டும் என்று என் படத்தையும் சேர்த்து அப்பா அனுப்பினார். ராம் சார் என்னை பிடித்துப் போகவே தேர்வு செய்துவிட்டார்.

நான் படப்பிடிப்பே அதுவரை பார்த்ததில்லை. சினிமா பற்றி பிராக்டிகலாக எதுவுமே தெரியாமல் இருந்த எனக்கு சினிமா நடிப்பு பற்றி கண்ணைத் திறந்து வைத்தவர் ராம் சார்தான். அவர் அவ்வளவு பொறுமையாக எளிமையாக நடிப்பைச் சொல்லிக் கொடுத்தார். நான் தேசியவிருது பெற முடிந்தது என்றால் அவர் நடிப்பு பற்றி புரியவைத்ததால்தான் என்று சொல்வேன்.

‘கற்றது தமிழ்’ வந்து ஒன்றரை வருடத்துக்குப் பிறகு நடித்த படம் ‘பசங்க’ இது பசங்க பற்றிய ஜாலியான படம். பாண்டிராஜ் சார் எங்களுடன் இயல்பாகப் பேசிப் பழகி எங்களில் ஒருவராக இருந்து வேலை வாங்கினார். நடித்தது போலவே தெரியாதபடி நடிக்க வைத்து விட்டார்.இப்படம் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது.
‘தீராத விளையாட்டுப் பிள்ளை’யில் நடித்தது வேறுவித அனுபவமாக இருந்தது. திரு சார். ரொம்பவும் கூலாக இருப்பார்.சுலபமாக அலட்டிக் கொள்ளாமல் வேலை வாங்குவார். அந்தப் படத்தில் என்னை ஸ்டைலாகக் காட்டி யிருப்பார்.இதில்  நடித்தபோது கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணா சாருடன் பழகினேன். கேமரா பற்றி கவனித்து அறிவும் ஆர்வம் அவர் மூலம். வந்தது

டைரக்டர் ஹரி சார் என் அம்மாவின் சிறுவயது நண்பர். அவர் எங்களுக்கு சொந்தக் காரரும் கூட. இருந்தாலும் இடையில் தொடர்புகள் இல்லாமல் இருந்தோம். ‘வேங்கை’ படத்தின் மூலம் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பரபரப்பாக வேகமாக படப்பிடிப்பு நடத்துவார். ஆனால் அவர் பதற்றப்படவே மாட்டார். அதைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

பெப்ஸி விஜயன் மாஸ்டரின் மகன் கதாநாயகனாக நடித்த படம் ‘மார்க்கண்டேயன்’ அதிகம் பேசாமல் பார்க்கும் பார்வையிலேயே உணர்ச்சியைக் காட்ட முடியும் என்று மாஸ்டர் சொல்லிக் கொடுத்தார் . உன் கண்ணை கீழ் நோக்கிப் பார் ரொம்ப டெரரா இருக்கும் என்பார் மாஸ்டர்.  .
வாய்ப்பு கொடுத்தது மட்டுமல்ல என் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்களில் ஒருவர் டைரக்டர் கண்ணன் சார். அவரது ‘வந்தான் வென்றான்’ படத்தில் நடித்த போது ஒரு சம்பவம் நடந்தது. ஒரு காட்சி எடுக்கப்பட்டது. அப்போது நான் கேமராவைப் பார்த்து விட்டதாக உடன் நடித்த நடிகர் குற்றம் காட்டினார். அப்போது டைரக்டர் எவ்வளவோ சொல்லியும் கேட்க வில்லை. மறுபடியும் எடுக்கலாம் என்றார்.

டைரக்டர் ”அவன் தப்பு பண்ணி இருக்க மாட்டான். கேமராவைப் பார்த்திருக்கமாட்டான். அவன் நேஷனல் அவார்டு வாங்கினவன். நான் நம்புறேன்” என்றார். ”வேண்டுமானால் ரீப்ளே செய்து பாருங்கள்” என்றார். ரீப்ளே செய்யப்பட்டது. நான் கேமராவைப் பார்க்கவில்லை. அவரது அந்த நம்பிக்கை எனக்குப் பெருமையாகவும் அவரது திறமை பிரமிப்பாகவும் இருந்தது.

‘வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய் படத்தில் நாயகியின் தம்பியாக நடித்தேன். கதை சொல்வது பஞ்ச் டயலாக் பேசுவது என்று சிரிக்க வைக்குப்படி என் நடிப்பு இருக்கும். தபூ சங்கர் சார் அலட்டிக் கொள்ளாத அமைதியுடன் இருப்பவர். படப்பிடிப்பு நடக்கும் இடம் போலவே தெரியாது அவ்வளவு அமைதியாக இருக்கும்.

‘தமிழ்ப்படம்’ ஒரு புதிய முயற்சியாக பாராட்டபட்டது. எல்லா காட்சிகளிலும் சிரிப்பு வரும். அமுதன்சார் இயக்கத்தில் நாங்கள் நடித்த போதே உணர்ந்தோம். இப்படம் ஒரு கல கலப்பு அனுபவம்.

‘ஜில்லா’ படத்தில் நடித்த போது படத்தின் பிரமாண்டத்தை புரிந்து கொண்டேன். நமக்கு என்ன வரும் என்று கேட்டு அப்படி நடிக்க வைத்தார் நேசன்சார். நீயாக இருந்தால் இந்தச்சூழலில் என்ன செய்வாய் என்று கேட்பார். அப்படி செய்ய வைத்தார். படத்தில் சண்டைக் காட்சியில் ஏழு கேமரா இருக்கும். நாலா பக்கமும் எடுப்பார்கள் ஒருநாளைக்கு 50 லட்சம் செலவாகும். நான் மிரண்ட பிரமாண்ட பட அனுபவம்’ஜில்லா’. அதில் சம்பத் சாருக்கு ஜூனியராக நடித்திருப்பேன்.

சமீபத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த ‘கோலிசோடா’ அனுபவம் மறக்க முடியாதது. பசங்களில் ,நடித்த பசங்களையே வைத்து மாபெரும் வெற்றிப் படமாக்கியுள்ளார் விஜய் மில்டன் சார். இந்தப் படத்தின் அனைத்துப் பெருமைகளும் அவரையே சேரும். மொத்தம் 12 பேர்தான் எங்கள் யூனிட். அதை வைத்து 80 நாட்கள் எடுத்தார். சும்மா வாங்கடா என்று கூப்பிட்டு டெஸ்ட் ஷூட் என்று எடுப்பார். நன்றாக இருந்தால் வைத்துக் கொள்வார். பசங்க டீம் நண்பர்கள்  நாங்கள் ஒன்றாக நடித்தது ஜாலியாக இருந்தது. படம் வெளியான பிறகு ஹிட் ஆனதும் எங்கள் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. பலரும் பாராட்டும் போது பல மடங்கு பூரிப்பாக இருக்கிறது.

விஷால், ஜீவா, தனுஷ், சிவா, நந்தா, சம்பத் போன்ற அனுபவம் மிக்க பெரிய நடிகர்களுக் கெல்லாம் இளம்வயது சிறுவனாக ஜூ னியராக நான்நடித்திருக்கிறேன் இதை நான் பெருமையாக நினைக்கிறேன். அவர்களுடன் இணைந்து நடிக்கவும் விருப்பம்.

‘பசங்க’ இசை வெளியீட்டு விழாவில் கமல்சார் என் நடிப்பைப் பாராட்டியதுடன் நல்லா நடிக்க வாழ்த்தும் கூறியது என்னால் மறக்க முடியாதது. அதை பெரிய பாக்யமாக நினைக்கிறேன்.

சமீபத்தில் எனக்கு அபெண்டிஸ் ஆபரேஷன் நடந்தது. அது பற்றி சூர்யா சாருக்கு எஸ்எம்எஸ் செய்தோம். அவர் ஒரு லட்சம் ரூபாய் அனுப்பி  ஆபரேஷன் பில்லை கொடுத்தார். அந்த உதவியை நினைத்தால் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படி இந்த ஸ்ரீராமுக்குள் பல வித அனுபவங்கள் உண்டு.

இப்போது எஸ்.ஏ.சி. ராம்கி சார் இயக்கத்தில் ‘கமர்கட்’ படத்தில் நாயகனாக நடிக்கிறேன். நான் நடிக்கும் இன்னொரு படம் செல்வம் இயக்கத்தில் ‘இந்தப்படத்தை பார்க்காதீங்க’ என் அப்பா இயக்கத்தில் ‘தரை டிக்கெட்’ என்கிற படத்தில் நடிக்கிறேன். இது சினிமா.-தியேட்டர் என்று வாழ்க்கை நடத்தும் சிலர் பற்றிய படம்.மேலும் வளர ஆசை வாழ்த்துங்கள்” என்று கூறும் ஸ்ரீராம் கண்களில் சந்தோஷ மின்னல்.