‘களவாணி 2’ விமர்சனம்

அதவவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் 2010 இல் வந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘களவாணி’  போல் வேறெந்தப் படமும் அவ்வளவு அழகாக திரையில் தஞ்சையின் மண்மணத்தைக் காட்டியதில்லை. அந்தக் கதையிலும், கதைக்களத்திலும், கதாபாத்திரங்களிலும் இழையோடிய நேட்டிவிட்டியும், நகைச்சுவையும் படத்தை மறக்க முடியாததொரு அனுபவமாக மாற்றியிருந்தது. ‘களவாணி 2’ படம் அந்தப்படத்தின் தொடர்ச்சியா இது என்றால் இல்லை என்றே டைட்டிலிலேயே போட்டுவிடுகிறார்கள்.  அதில் வந்த பாத்திரங்களைக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘களவாணி 2’ எனலாம். சரி படம் எப்படி?

‘களவாணி’ மூலம் முழு நாயகனாக அறிமுகமானவர் விமல் .அவரது 25 வது படமாக ‘களவாணி 2’ வெளியாகியிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடித்த அரிகிருஷ்ணன் என்கிற அறிக்கி என்ற அதே கதாபாத்திரத்தில் நடித்த அவர், பத்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே இளைஞராகவே இப் படத்தில் வலம் வருகிறார். அவர் எப்படிப்பட்டவர்?

அரசனூரில், களவாணி எனப் பெயர் பெற்ற அறிக்கி என்கிற விமல்  வெள்ளையும் சொள்ளையுமாக  சொந்த ஊரில்  வெட்டியாக சுற்றி வருபவர். .முழு நேர வேலையே ஊர்சுற்றுவதுதான். பைசா மதில்லாமல் திரிகிறார்.கிடைக்கும் சந்தர்ப்பங்களில்  பஞ்சாயத்து  கஞ்சா கருப்பை ஏமாற்றி பணம் கறந்து வருகிறார்.இப்படிப்பட்ட விமல்  மகளிர் குழு தலைவியான ஓவியா மீது லுக் விட,காதல் வர, ஓவியாவும் விமலை டாவடிக்கிறார்.

 காதலிக்காக உள்ளாட்சித் தேர்தலில் வென்று ஊர் பிரஸிடென்ட் ஆகவேண்டுமென முடிவெடுக்கிறார் அறிக்கி. விமல், தனது  அசட்டுத்தனமான களவாணித்தனத்தால் எப்படி தேர்தலில் ஜெயிக்கிறார், என்பதே படத்தின் மீதிக்கதை. களவாணி எனப் பெயர் பெற்ற அவர் தேர்தலில் எப்படி வென்றார் என்பதைக் கலகலப்பாகச் சொல்லியுள்ளார் சற்குணம்.

மகளிர் குழு தலைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஓவியா அழகாக இருக்கிறார். காதலனிடம் ஏமாறுவது, பிறகு சமாதானம் ஆகி மீண்டும் காதலனை ஏற்றுக்கொள்வது என்று வழக்கமான தமிழ் சினிமா நாயகியாகவே நடித்திருந்தாலும், கொடுத்த சின்ன வேலையை அழகாகச் செய்திருக்கிறார்.

விமல், ஓவியா மற்றும் சற்குணம் ஆகிய மூவருக்கும் இப்படம் மிக முக்கியமான படமாக இருந்தாலும், திரைக்கதை நகர்த்தலிலும், கதாபாத்திர தேர்விலும் முக்கியத்துவம் இல்லாத படமாக இருக்கிறது. இருப்பினும், விமலின் களவாணித்தனம், ஊராட்சி தேர்தலில் நடக்கும் அரசியல் போன்றவை ஓரளவு ரசிக்க வைக்கின்றன.

காமெடிக்காக களம் இறங்கப்பட்டுள்ள விஜே விக்னேஷ், முடிந்தவரை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். அவர் முயற்சி வீண் போனாலும், விமலின் நடிப்பு  சில இடங்களில் நமக்கு ஆறுதல் சிரிப்பை தரும் . அதே பஞ்சாயத்தாக நடித்திருக்கும் கஞ்சா கருப்பு விமலுடன் சேர்ந்து தேர்தலில் நின்று துவண்டுபோவது ரசிக்க வைக்கிறது.

இரண்டாம் பாதியில், கதையை நகர்த்தும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் மயில்சாமி வருகிறார். அவர் தனக்கு ஏன் தோசை எனப் பெயர் வந்தது என்பதற்கு  சொல்லும் விளக்கம் அதகளம்.  ஒன்றுமில்லாததற்கு எல்லாம் ஊர் எப்படி இரண்டுபடும் எனச் சுவாரசியப்படுத்தியுள்ளனர்.

ஓவியாவின் தந்தையைச் சித்தப்பா என அழைத்து விமல் செல்ஃபி எடுத்துக் கொள்ளுமிடம், கவர்னருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது, இறந்துவிடும் முதியவர் ஒருவரைத் தியாகியாக்குவது, ராவன்னாவிடம் பேரம் பேசச் சென்று கலர் கலராய் விக்னேஷ் டோக்கன் வாங்கி வரும் இடம் என கலகலப்பாக்கும் சில காட்சிகளால் களவாணி 2 கவர்ந்து விடுகிறது.

மொத்தத்தில், பெரிய எதிர்ப்பார்ப்பின்றிப் பார்த்தால் ‘களவாணி 2’ வை ஒரு முறை காணலாம்.