‘காலேஜ் குமார்’ விமர்சனம்

தன்னுடைய நண்பன் அவினாஷின்  நிறுவனத்தில் பியூனாக வேலை பார்க்கிறார் பிரபு. நண்பன் என்றாலும் அவரைப் பியூனாகவே நடத்துகிறார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் நீ பியூன்  நீ பியூன் என்று இழிவுபடுத்தி அவமானப் படுத்துகிறார். அப்படிப்பட்ட பியூன் பிரபு தன் மகனை படித்து பெரிய ஆடிட்டராக ஆக்க வேண்டும் என்று நினைக்கிறார். தனது ஆசையை மகனிடம் கூறுகிறார் .அதன்படியே சிரமப்பட்டு சீட்டு பெற்று கல்லூரியில் சேர்க்கிறார். ஆனால் மகனோ படிப்பதை விட்டுவிட்டுக்  காதலில் ஈடுபடுகிறார். அவரால் படிக்க முடியவில்லை .நன்றாகப் படிக்கும் மாணவனின் பெயரைப் போல தன் பெயரை மாற்றிக் கொண்டு அவனுடைய மதிப்பெண்ணெல்லாம் தான் பெற்றதாகக் கூறி பெற்றோரை ஏமாற்றுகிறார். ஒரு கட்டத்தில் உண்மை தெரியவருகிறது. அப்போது தான் படிக்கும் சிரமத்தை  அப்பாவிடம் கூறுகிறார் .அதிர்ச்சி அடைந்த அப்பாவும் ஏன் உன்னால் முடியாது என்று கேட்கிறார்.

நீ வேண்டுமானால் முயற்சி செய் என்று ஒரு சவால் விட்டதில் பிரபுவே ஆடிட்டருக்குப் படித்து  வருகிறார் . இளம் மாணவர்கள் படிக்கும் ஒரு கல்லூரியில் பிரபு சேருகிறார் .சிரமப்பட்டு படிக்கிறார் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்கிறார். ஒருகட்டத்தில் மகனை தோற்கடிக்க விரும்பாத பிரபு அதிலிருந்து பின்வாங்க நினைக்கிறார். முடிவு என்ன? என்பதே திரைக்கதையின் பயணம்.

படத்தின் பிரதான வேடமேற்றுள்ள பிரபுவே படத்தின் பெரும் எடையைச்  சுமந்திருக்கிறார்.

பியூன் என்று இழிவு படுத்தும்போது அவமானத்தைத் தாங்கிக் கொண்டு, தன் கனவுகள் எல்லாம் மகனே என்று ஆசைப்பட்டபின் மகனால் ஏற்பட்டட ஏமாற்றம்,சவாலை ஏற்று சிரமங்களை எதிர்கொண்டு விழிப்பது,  எனப்பல பாவங்கள் காட்ட அரிய வாய்ப்பு பிரபுவுக்கு. நடிப்பில் மின்னுகிறார். இந்த வயதில் அவர் கல்லூரி மாணவர்கள் அணியும் ஆடைகளில் வந்து கலக்குவதையும், அடிக்கும் கலகல லூட்டிகளையும் ரசிக்க முடிகிறது.  

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மதுபாலா நடித்திருக்கிறார்.   நடுத்தரவர்க்க மனைவியாக வருகிறார். 24 வருடங்களுக்கு முன் ‘பாஞ்சாலங்குறிச்சி’ யில் பிரபு ஜோடியானவர். அப்படத்தின் “உன் உதட்டோரச் சிவப்ப…” பாடலை ஒரு இடத்தில் பயன்படுத்தி ரசிக்க வைக்கிறார் இயக்குநர். பிரபுவின் மகனாக நடித்திருக்கும் ராகுல் விஜய் யின் தோற்றமும், நடிப்பும் நன்று. சண்டைக் காட்சியிலும், நடனத்திலும் அதிவேகம் காட்டி ஆச்சரியப்படுத்துகிறார். நாயகியாக ராகுல் விஜய்யின் ஜோடியாகவும், அவினாஷின் மகளாகவும் நடித்திருக்கும் பிரியா வட்லமணி பரவாயில்லை ரகம். 

கல்லூரி முதல்வராக நாசர், சீரியஸாக ஒரு பக்கம், பேராசிரியர் மனோபாலா சிரிக்க வைக்க ஒரு பக்கம் எனப் பயன்பட்டிருக்கிறார்கள். 
ஒளிப்பதிவாளர் குரு பிரசாத் ராய் தன் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார். குதூப் இ கிருபாவின் இசை ஓகே.

பி அண்ட் சி ரசிகர்களை மட்டுமே குறி வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது. அந்த நம்பிக்கையை பிரபு காப்பாற்றி விடுவார்.

படத்தில் கலகலப்பான காட்சிகள் உண்டு. நகைச்சுவை என்ற பெயரில் சில முதிர்ச்சியற்ற காட்சிகளும் உண்டு. அனைத்து குறைகளையும் பிரபு பாத்திரம் சமன் செய்து விடுகிறது. ஏனென்றால் ஒரு நடுத்தர வர்க்கத்து கனவுகளுள்ள ஒரு தகப்பனைக் கண்முன் நிறுத்துகிறார் பிரபு.

கலகலப்பான படத்தில் ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஹரி சந்தோஷ். இந்தக் கோணத்தில் யாரும் சிந்தித்திருக்க மாட்டார்கள்.அந்தவகையில் இயக்குநரைப் பாராட்டலாம்.