‘காவியத்தலைவன்’ விமர்சனம்

Kaaviya-Thalaivan-rdநாடகமே உலகம், வாழ்க்கை என்றிருக்கும் ஒரு நாடகக் குழுவின் குறுக்கு வெட்டுத் தோற்றமே ‘காவியத்தலைவன்’ படம்.

ஆங்கிலப் படங்களிலிருந்து தரம் பிரித்து படம் எடுப்பவர்கள் மத்தியில் வாழ்க்கை அனுபவங்களில் சுரம்பிரித்து ரசிக்க வைக்கிற வசந்தபாலன்தான் இயக்கியுள்ளார்.இந்திய சுதந்திரத்துக்கு முற்பட்ட பிரிட்டிஷ் காலத்தில் தமிழகத்தில் தழைத்திருந்த நாடகக் கலையை இதில் களமாக,தளமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ லஸ்ரீ  பால சண்முகானந்த  நாடக சபா. அதனை நடத்துபவர் சங்கரதாஸ் சுவாமிகள் போன்ற ஒரு நாடக ஆசான் . ரயிலில் பிச்சைக் காரனாக அறிமுகமாகும் சிறுவனை அழைத்து  தன் குழுவில் சேர்த்துக் கொள்கிறார். அவன் பெயர் காளியப்பா. அங்கேயே தங்கி நாடகம் கற்கும் இன்னொரு  சிறுவனான கோமதி நாயகமும் காளிமீதுஅன்பு காட்டி ஆதரிக்கிறான். இருவரும் வளர்கிறார்கள். வந்த சிறுவன் காளி ஆர்வத்துடன் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறான். ஒரு கட்டத்தில் அவனுக்கு கிடைக்கும் பாராட்டு கோமதி நாயகத்துக்குப் பொறாமையை வளர்க்கிறது.

வளர்ந்து ராஜபார்ட் வேட அந்தஸ்துக்குக் உயர்கிறான் காளி . நாடகம் போடப்போன இடத்தில் அப்பகுதி ராஜா மகள் மீது காதல் கொள்கிறான்.இதனை ஏற்காத குரு அவனை அடித்து உதைத்து துரத்துகிறார். காதலைக் கைவிட்டால்தான் இங்கே இடம் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு  மீண்டும் சேர்த்துக் கொள்கிறார்  சுவாமிகள்.

காதலனைப் பார்க்காத பிரிவில் ,துயரில் ராஜாமகள் தற்கொலை செய்து கொள்கிறாள். இதை அறிந்து கொதிக்கிறான் காளி. குருவுக்கு சாபம் விடுகிறான். குரு இறந்து போகிறார். நாடகக் குழுவை ஏற்று நடத்துகிறான்  கோமதி நாயகம் .

குருவைக் கொன்றவன் என்று கூறி  காளியை அடித்து துரத்தி விடுகிறான் கோமதி . ஆனால்  பின்னாளில்அவனது நாடகக்குழு சிரமப்படுகிறது. சில ஆண்டுகளுக்குப் பிறகு நாடகம் போட மதுரை வருகிறான் கோமதி. அவனுக்கு உடல் நலம் இல்லாமல் போகிறது .பதிலாக ராஜபார்ட் போட ஆள் தேடுகிறார்கள். ஆட்கள் காளியை அழைத்து வருகிறார்கள். அவனும் நடிக்கிறான் பலத்த வரவேற்பு.கோமதி சக நடிகையான வடிவாம்பாளை விரும்ப அவளோ  காளியை மனதில் வைத்திருக்கிறாள். அதை அறிந்த கோமதி காளியைச் சதி செய்து சிறைக்கு அனுப்பி விடுகிறான். சிறையிலிருந்து காளி மீண்டானா? வடிவாம்பாளைச் சேர்ந்தானா… என்றால் முடிவு திடுக்கிட வைக்கிறது.

நாடக சபா என்பதை அழகான விவரணமாக காட்சிப் படுத்துகிறார் இயக்குநர்.

சபாவின் நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் பயிற்சிகள், ஒழுங்குகள், தர்மங்கள் எல்லாவற்றையும் காட்சிகள் மூலமே காட்டி பாடம் நடத்தி விடுகிறார்.kaaviya-thalaivan-sidarth

நாசரின் பரிவையும்  அன்பையும், ஆசியையும் பெற்ற சித்தார்த் மீது, அந்தக் காரணத்தாலேயே வெறுப்படையும் பிருத்விராஜ், அந்த வெறுப்பை வெளிக்காட்டாமல் எப்படி சித்தார்த் மீதுவன்மம் வளர்த்து பழிதீர்க்கிறார் என்பதுதான் கதையின் உள்ளார்ந்த உணர்வாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

குருவாக வரும் சுவாமிகளாக நாசர், காளியாக சித்தார்த்,கோமதி நாயகமாக பிருத்விராஜ்,வடிவாம்பாளாக வேதிகா நடித்துள்ளனர்.ஒருகட்டத்தில் நாசர்,சித்தார்த், பிருத்விராஜ் இவர்களுக்குள் நடிப்பில் போட்டியே நடக்கிறது.மூவருமே தங்களுக்கான இடங்களில் அவ்வப்போது அள்ளுகிறார்கள் மனதை.

படத்தில் எக்கச்சக்கமான பேர் நாயகர்களாக மிளிர்கிறார்கள். யாரைப் பாராட்டுவது? அச்சு அசல் குருவாக மிளிரும் ஒளிரும் நாசரைப் பாராட்டுவதா? சிஷ்யர்கள் சித்தார்த்தை பிருத்விராஜைப் புகழ்வதா? அக்காலப் பெண்ணாக வரும் வேதிகாவைப் புகழ்வதா? கலகலப்புடன் யதார்த்த வாத்தியராக வரும் தம்பி ராமையாவையா? ஒளியில் காலம் காட்டும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவையா? இசையில் சபாவை கண்முன் நிறுத்திய ஏ.ஆர். ரகுமானை பாராட்டுவதா?

ஆயிரம் இருந்தும் படத்தில் ஆமையாக நகரும் சில காட்சிகளால்ஆவணத்தன்மை தென்படுகிறதே.அடுத்தடுத்த காட்சிகளை ஊகிக்க முடிகிறதே  திருப்பங்கள் இல்லாமல்   கதை நகர்கிறதே .ராஜா மகளைக் கர்ப்பமாக்கிவிட்டு மறுபடியும் வேதிகாவை நினைக்கும் சித்தார்த் பாத்திரம் களங்கப் பட்டு நிற்கிறதே.. கொலை செய்தும் கூட திறமை இருந்தும் புகழ் வெற்றி வராத பிருத்விராஜ் பாத்திரத்தின் மீது அனுதாபம் வந்து விடுகிறதே… இவை  எல்லாம் பலவீனங்கள்

இம் முரண்பாடுகளை எல்லாம் மறந்து விட்டு வசந்தபாலனின் படைப்பு பாணியை ரசிக்கலாம். கடின உழைப்பை மதிக்கலாம்.கலை முயற்சியை வியக்கலாம்.இதற்காகவே காவியத்தலைவனை  காணலாம்.திரை மொழியில் கலைமொழி பேசியிருக்கும்   வசந்தபாலனுக்குக் கை குலுக்கலாம்.