கிராமி விருதினை வென்ற இந்திய வம்சாவளி இசையமைப்பாளர்: பிரதமர் வாழ்த்து!

Sri Narendra Modi with Ricky Kej and Varsha Kejகடந்த பிப்ரவரி மாதம் இசையுலகின் உயரிய விருதான கிராமி விருதினை வென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்-ஐ, பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

இது குறித்து பேசிய ரிக்கி கேஜ், 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், அப்போது தானே இசையமைத்து பிரத்யேகமாக உருவாக்கிய இந்திய தேசிய கீதத்தை பிரதமருக்கு பரிசாக வழங்கியதாக தெரிவித்தார். மேலும், “திரு.நரேந்திரமோடி-குஜராத்-கர்நாடகா-விண்ட்ஸ் ஆஃப் சம்ஸாரா-அமைதி-இசை” ஆகியவற்றை இணைக்கும் வகையில் சந்தனத்தால் உருவான கிருஷ்ணர் மற்றும் மகாத்மாவின் சிலைகளையும், பகவத்கீதையும் பிரதமருக்கு தான் நினைவுப்பரிசாக வழங்கியதாக கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தனக்கு தெரிவித்ததுடன், “இந்த விருதானது உனக்கானது மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்குமானது” என கூறியதையும் பெரும் உற்சாகத்துடன் கூறுகிறார் ரிக்கி கேஜ்.

மேலும், மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடியின் எளிமையும் இன்முகத்தன்மையும், தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும், பெரும் லட்சியங்களை அடைய வேண்டும் எனும் ஊக்கத்தையும், இந்திய இசையை உலகம் முழுவதற்கும் விரிவடையச் செய்ய வேண்டும் எனும் தாக்கத்தை தன்னுள் இந்த சந்திப்பு ஏற்படுத்தியதாகவும் கூறுகிறார் ரிக்கி கேஜ்.

தென் ஆப்பிரிக்க இசைக்கலைஞர் கெல்லர்மேன் உடன் இணைந்து ரிக்கி கேஜ் உருவாக்கிய இசை ஆல்பம் “விண்ட்ஸ் ஆஃப் சம்ஸாரா”. மகாத்மா காந்தியடிகள் மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோரின் அமைதி மற்றும் நல்லிணக்க கொள்கைகளை வலியுறுத்தும் வகையில் உருவான இந்த இசை ஆல்பத்திற்காக 57வது கிராமி விருது வழங்கும் விழாவில், “பெஸ்ட் நியூ ஏஜ் ஆல்பம்” என்ற விருதினை வென்றார் ரிக்கி கேஜ். இந்த இசை ஆல்பம், பிரதமர் நரேந்திர மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டத்திற்கு உதாரணமாக திகழும் வகையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பான கிராமி விருது வழங்கும் விழாவில், முதன்முதலாக சமஸ்கிருத ஸ்லோகத்தினை தனது நன்றி உரையில் இடம்பெறச் செய்தவர் ரிக்கி கேஜ். அதுமட்டுமல்லாது பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய பெரும் முயற்சிகளையும் அம்மேடையிலேயே பாராட்டியவர் ரிக்கி கேஜ்.