‘குற்றம் 23’ விமர்சனம்

Arun-Vijay-Mahima-Nambiar-Kuttram-23செயற்கைக் கருவூட்டல் சார்ந்து மருத்துவமனைகளில் செய்யப்படும் மோசடிகளே  ‘குற்றம் 23’ கதையின் அடிநாதம்.இது எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம்.

அருண் விஜய் நாயகன் . மகிமா நம்பியார் நாயகி.

இவர்கள் தவிர தம்பி ராமையா, அரவிந்த் ஆகாஷ், வம்சி கிருஷ்ணா, அபிநயா, கல்யாணி நடராஜன், விஜயகுமார், அமித் ராகவ், சஞ்சய் அஸ்ரானி ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘என்னை அறிந்தால்’, ‘சலீம்’, ‘தீக்குளிக்கும் பச்சை மரம்’, ‘தனி ஒருவன்’, ‘யாக்கை’  எனத் தமிழ்ச் சினிமாவில் சமீப காலமாக மருத்துவத் துறையில் நடைபெறும் மோசடிகள்  முறைகேடுகள் பற்றிய கதைகள் வந்துள்ளன.அவ்வரிசையில் இந்தப் படமும் மருத்துவ உலகத்தின்  கறுப்புப் பக்கத்தைக் காட்டுகிற ஒரு படமாகும்.

காணாமல் போன பெண் மற்றும் ஒரு கொலைச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கும் படி போலீஸ் துணை கமிஷனர் வெற்றிமாறன் என்னும் அருண் விஜய்யிடம் ஒப்படைக்கிறார் கமிஷனர் விஜயகுமார்.துப்பறிய ஆரம்பித்த சில நாட்களில் வேறுவேறு தற்கொலைகளும் நடக்கின்றன.அவர் வீட்டில் கூட  அவரது அண்ணி தற்கொலை செய்து கொள்கிறார்.

சர்ச் பாதிரியார் ஒருவர் கொலை நடைபெற்ற அன்று சர்ச்சுக்கு வந்து சென்ற ‘தென்றல்’ என்னும் மகிமா நம்பியாரிடம் கொலை பற்றி விசாரிக்கிறார் அருண் விஜய். விசாரணையே பிடிக்காத அரைமனத்துடன் தகவல்களை பாதி, பாதியாக மட்டுமே சொல்கிறார் மகிமா.

நேரில் பார்த்த சாட்சி போலிருக்கும்  மகிமாவை  ரவுடிகள் பின் தொடர்ந்து வந்து தாக்க முயல்கிறார்கள். காதலன் அருண் விஜய் அந்த ரவுடிகளை  அடித்து விரட்டுகிறார். எப்படியோ அவர்களுக்குள் காதல் மலர்கிறது.
இப்போது மகிமா முன்பு சொல்லாத பல விஷயங்களை அருண் விஜய்யிடம் சொல்கிறார்.

சர்ச் பாதிரியார் மரணம், மிஷா கோஷலின் கொலை, மேலும் மூவரின் தற்கொலைகள் இவை அனைத்திற்கும் நெருங்கிய தொடர்பு இழை  ஒன்று இருப்பதை அறிகிறார் அருண் விஜய். அதனைக் கண்டுபிடிக்க இறங்குகிறார். அதில் பல மர்மங்கள் உடைகின்றன. முடிச்சுகள் அவிழ்கின்றன.அவை என்னென்ன என்பதுதான் படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை.

‘குற்றம் 23’ தலைப்பில் 23 என்பது குரோமசோம்களின் எண்ணிக்கை பற்றியதாகும்.

கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுதிய ஒரு கதையின்  அடிப்படையை  மட்டுமே எடுத்துக் கொண்டு, சினிமாவுக்கு ஏற்றபடி திரைக்கதை அமைத்து படத்தை இதனை வெற்றிப் படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அறிவழகன். நாவலைப் படமாக்குவது ஒருகலை.ஏட்டில் வேறு வகையில் உள்ள கதையை சினிமாக்கும் ரசவாத வித்தையை அழகாகச்செய்துள்ளார் இயக்குநர் அறிவழகன் சபாஷ்.kutram23

வளைகுடா நாடுகளில் சிசேரியனுக்குத்தடை உள்ளது. .சிசேரியன் செய்வது சாதாரணமல்ல.ஆனால் இந்தியாவில் சிசேரியன் பிரசவத்தைச் சகஜமாக்கிவிட்டனர். அதைப் போலவே செயற்கைக் கருவூட்டல் முறையில் குழந்தை பிறப்பு என்பது அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தைத் தங்களது பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்கு கையில் எடுத்துக் கொண்டுள்ளது மருத்துவ உலகம்.. இந்தியா போன்ற நாடுகளில்தான் இப்படி தில்லுமுல்லு வேலைகளை அதிகம் செய்து வருகிறது என்பதுதான் சோகம்.

செயற்கைக் கருவூட்டல் முறையில்  ஆண்களுக்கு போதிய சக்தியில்லை என்றால்தான் மற்றவர்களின் உயிரணுவை பெண்ணின் கரு முட்டையுடன் சேர்த்து வைத்து கருவை உருவாக்குகிறார்கள். இது பெரும்பாலும் வெளிநாடுகளில்தான் நடந்து வருகிறது.  இந்தியாவில் அதிகமாக இல்லை. உயிரணுவை தானமாக கொடுத்தவரின் ரகசியம் காக்கப்படும்..

இதனை மையமாக வைத்து கதையையும், திரைக்கதையையும் அழகாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அறிவழகன். கூடவே தனியார் மருத்துவமனைகள் எப்படி இந்த குழந்தையின்மை விஷயத்தை வைத்து பெரும் பணம் பார்க்கின்றன என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.

சிலர் மட்டுமே செய்யும் ஒரு தவறினால் எத்தனை அப்பாவி பெண்கள் பலியாக நேரிடுகிறது என்பதை இந்தப் படத்தில் தற்கொலை செய்து கொண்ட 3 பெண்களின் கதைகளும் சாட்சியங்களாக நின்று பேசுகின்றன.

முதல் காட்சியிலேயே இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமான படம் என்பதை உணர்த்திவிட்டது.  படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசிவரையிலும் திரைக்கதையில் வேகம் குறையவே இல்லை.

அருண் விஜய்யின் விசாரணைக் கோணம் மிகச் சரியாகவும், திட்டமிட்டும் போய்க் கொண்டிருக்கும் வேளையில் அவருடயை காதல் பிரச்சினை வர.. ஆனாலும் அதையும் சமன் செய்து விசாரணையை மட்டுமே முன்னிறுத்தி கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்.

அருண் விஜய்க்கு போலீஸ் அதிகாரிகளுக்கே உரித்தான உடலமைப்பு, கம்பீரம்.. பேச்சு.. அதிரடி செயல்.. சண்டை காட்சிகளில் காட்டும் புயல் வேகம்.. எல்லாமும் சேர்ந்து இந்தப் படம் நிச்சயம் பெயர் பெற்றுத்தரும்.
அழகு, நடிப்பு, வெகுளித்தனம், கோபம், பாசம், நட்பு என்று அனைத்தையும் கலந்து கட்டி கொடுத்திருக்கிறார் .மகிமாவின் நடிப்பு,  சில காட்சிகளிலேயே ரசிகர்களுக்குப் பிடித்துப்போகிறது.

அருண் விஜய்க்கு உதவியாக வரும் சப்-இன்ஸ்பெக்டர் தம்பி ராமையா பாத்திரம் தொடக்கத்தில் என்னடா இது என்று சொன்னாலும் கடைசியில் சபாஷ் போட வைத்துவிட்டார்.

வில்லன்களாக அரவிந்தும், வம்சி கிருஷ்ணாவும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். வம்சியின் இந்த நிலைமைக்குக் காரணம் அவருடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட துயரம் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

அருண் விஜய்யின்அண்ணியாக வரும் அபிநயா குறையே தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார்.

முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் மிகப் பெரிய பலமாக இருந்திருக்கிற ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கருக்கு மிகப் பெரிய பாராட்டு தரலாம்.
இந்தப் படம் பாடல்களே இல்லாமல்தான் வந்திருக்க வேண்டும். பாடல்களே தேவையில்லை.
ஆனாலும் பாடல்கள் இரண்டு உள்ளன. விஷால் சந்திரசேகர் பின்னணி இசையிலும் பின்னியுள்ளார்.

செயற்கைக் கருவூட்டல் வழிகளிலேயே முறைகேடுகள் செய்து பணம் சம்பாதிக்க எண்ணும்  சில திருடர்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வை இந்தப் படம் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.

இனிமேல் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற நினைப்பவர்கள் நிச்சயமாக ஒரு முறைக்கு பல முறை தாங்கள் செல்லவிருக்கும் மருத்துவமனை பற்றி நன்கு யோசிப்பார்கள்.

இயக்குநர் அறிவழகன் இளைய இயக்குநர்களில் மீண்டும் தன்னுடைய இருப்பிடத்தை இந்தப் படத்தின் மூலமாக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

பொதுவாக ஆக்ஷன் படங்கள்,பிரமாண்டமான படங்கள் என்றால் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால் கதையைப் பற்றிச்சொல்ல ஒன்றுமே இருக்காது. இரண்டு மணிநேரம் நம்மை பிரமாண்டமான பின்புலங்கள் என்று மிரட்டி ஏமாற்றியிருப்பார்கள். இதில் சொல்வதற்குக் கதை இருக்கிறது. அது ஆரோக்கியமான மாற்றம்.
இப்படியொரு சமூக விழிப்புணர்வுமிக்க திரைப்படத்தைக் கொடுக்க முன் வந்த  அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!