‘குழலி’ விமர்சனம்

காக்கா முட்டை விக்னேஷ், ஆரா நடித்துள்ள படம் ‘குழலி’. சேரா கலையரசன் இயக்கியுள்ளார்.

மேல் ஜாதிக்காரரான ஆராவும் கீழடுக்கு ஜாதிக்காரராரான விக்னேஷும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். சிறு வயது நட்பு காதலாகிறது.அப்புறம் என்ன? ஜாதி குறுக்கே நிற்கிறது. முடிவு என்ன என்பதுதான் கதை.

இதுபோல ஓராயிரம் படங்கள் வந்திருக்கலாமே என்று நினைப்பீர்கள். ஆமாம்.ஆனாலும் கிராமத்து அழகியலோடு செயற்கையான பரபரப்பு இல்லாமல் நிதானமாக அந்தக் கதையைச் சொல்லி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இயக்குநர் சேரா கலையரன் அப்படி ஒரு கிராமிய வாழ்வியலை இந்த ‘குழலி’யில் திரை முழுவதும் காட்டியிருக்கிறார்.
கதாநாயகன் நாயகி மட்டுமல்ல படத்தில் வரும் மற்ற பாத்திரங்களும் அதிகம் பரிச்சயம் இல்லாததால் கதை மாந்தர்களாகத் தோன்றுகிறார்கள். அதனால் கதையோடு ஒன்ற முடிகிறது.

காக்கா முட்டை விக்னேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். சுப்பு என்கிற கதாபாத்திரத்தில் பள்ளி மாணவனாக அப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
நாயகி குழலியாக வரும் ஆரா புதுமுகம் என்று நம்ப முடியாத படி பொருத்தமாக நடித்திருக்கிறார்.கதாநாயகனின் நண்பர்களாக வரும் அந்த கிராமத்து இளைஞர்களும் ,பாம்படம் சுமந்த காது கொண்ட கிழவிகளும் கூட இயல்பான நடிப்பால் நம்மைக் கவர்கிறார்கள்.அவர்களை வைத்து நகைச்சுவைப் பகுதியை பூர்த்தி செய்துள்ளார் இயக்குநர்.இளையராஜாவின் இசையை நினைவூட்டும் உதயகுமாரின் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.கிராமத்து அழகுகளையும் பாத்திரங்களின் அசைவுகளையும் அழகாகப் படம் பிடித்துள்ள ஒளிப்பதிவாளர் சமீர் பாராட்டுக்குரியவர்.

ஜாதிக்கு எதிரான வசனங்களும் நன்றாக உள்ளன. ஆனாலும் கதை சொல்லும் முறையில் குழலி வழக்கமாக வருகின்ற இவ்வகைப்படங்களின் சாயலில் உள்ளது ஒரு குறை.மற்றபடி எண்பதுகளை நினைவூட்டும் எளிய காதல் கதையாக இப்படத்தைப் பார்க்கலாம்.